states

ஸ்கேன் இந்தியா -

முழிக்கிறார்கள் 

என்ன செய்வது என்று தெரியாமல் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் முழித்துக் கொண்டிருக்கிறார். அம்மாநிலத்தின் குருகிராம் நகரில் உள்ள மாதாபாரி கோவிலில் நடந்த ஒரு நிகழ்வில் அவர் கலந்து கொண்டார். அப்போது நன்கொடைப் பெட்டியில் இருந்து தங்க ஆபரணங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் திருடி விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். முறையாக அறிக்கை வாயிலாக அவரைக் கட்சி கண்டித்தது. பின்னர், மன்னிப்பு கோருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இவை எதற்கும் அவர் பதில் அளிக்காததால் கட்சியின் சார்பாக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து விட்டார்கள். மன்னிப்புக் கோர வேண்டும் அல்லது திருட்டு நடந்ததற்கான சான்று தர வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அவர் இவ்வாறு தாறுமாறாகப் பேசுவது வாடிக்கைதான். ஆனால், இந்த முறை நன்றாக மாட்டிக் கொண்டுள்ளார் என்று கட்சிக்குள் உள்ள எதிர் கோஷ்டியினரே மகிழ்ச்சியில் உள்ளனர்.

நிரப்புகிறார்கள் 

நாடு முழுவதும் வாக்காளர் பதிவு விண்ணப்பங்களை நிரப்புவதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. பட்டியலில் பெயர் இல்லையென்றால், நமது குடியுரிமையையே பறித்து விடுவார்கள் என்ற வதந்திகள் சிறகடித்துப் பறக்கின்றன. ஒன்றியத்தில் ஆளும் தற்போதைய அரசு எப்படிப்பட்ட மோசமான முடிவுகளையும் எடுக்கும் என்பதால் இந்த வதந்திகளுக்கு நம்பகத்தன்மை கிடைக்கிறது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் சாமியார்களின் விண்ணப்பங்கள் மட்டும் மிகவும் எளிதாக நிரப்பப்படுகின்றன. எதையும் சும்மா விடாமல் என்ன தோன்றுகிறதோ அதைப் போட்டு நிரப்பி விடுங்கள் என்கிறார்கள். தாயாரின் பெயர் என்று கேட்டிருக்கும் இடத்தில் ஜானகி என்று பல சாமியார்கள் நிரப்பிக் கொள்கிறார்கள். சிலர் சீதா என்றும், சிலர் கவுசல்யா என்றும் நிரப்புகின்றனர்.  அயோத்தியில் மட்டும் 16 ஆயிரம் சாமியார்கள் உள்ளனர். 

தாக்குகிறார்கள் 

கோழிக்கறி விற்றுக் கொண்டிருந்த இரண்டு சிறு கடை வியாபாரிகளைத் தாக்கிய குண்டர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, மாலை மரியாதையைச் செய்திருக்கிறார் மேற்கு வங்க பாஜக தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி. தான் செய்தது சனாதனத்தை பாதுகாக்கவே என்றும் கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரசின் மோசமான நிர்வாகத்திற்கு எதிராகவும், ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1,000 கி.மீ. யாத்திரை மூலம் மக்களைச் சந்தித்து வருகிறது. பாஜகவோ, மத ரீதியிலான நிகழ்ச்சிகளை நடத்தி அரசியல் பண்ண முயற்சிக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள் அனைவரையும் இஸ்லாமியர்களாகச் சித்தரிக்க பாஜக முயல்கிறது. அதோடு, மக்கள் பிரச்சனைகளைப் பின்னுக்குத் தள்ளுவதிலும் குறியாக இருக்கிறார்கள்.

கொள்ளையடிக்கிறார்கள் 

தில்லியில் தனியார் பள்ளிக்கூடங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கள் எழுந்து வருகின்றன. நடுத்தரக் குடும்பங்களே கூட தங்கள் குழந்தைகளைப் பாதியிலேயே வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட வேண்டிய அவலம் நிலவுகிறது. பள்ளியில் சேர்க்கும்போது விதிக்கப்படும் கட்டணங்கள் விதிகளுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டதாக இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். பெற்றோரின் குறைகளை விசாரிக்கிறோம் என்று சொன்ன தில்லி அரசு, அவர்கள் மீது மேலும் துயரத்தை சுமத்தியிருக்கிறது. ஒரு தனியார் பள்ளியில் அதிகமான அளவு கட்டணத்தை வசூலிக்கிறார்கள் என்று புகார் தர வேண்டுமானால், 15 விழுக்காடு பெற்றோர்கள் புகார் தந்தால்தான் ஏற்றுக் கொள்ளப்படும் என்று புதிய விதியை சேர்த்துவிட்டனர். தங்கள் குறைகளைத் தீர்ப்பார்கள் என்றால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் பக்கம் நின்று அரசு பேசுகிறது என்கிறார்கள் பெற்றோர்கள்.