மோடி அரசுக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தம் முடங்கியது கேரளம்
திருவனந்தபுரம் மோடி அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகளுக்கு எதிரான மற்றும் தேசவிரோத கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை வியாழனன்று (பிப்., 12) நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டன. இந்த போராட்டம் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜன நாயக முன்னணி ஆளும் கேரள மாநிலம் முற்றி லும் முடங்கியது. வேலைநிறுத்தத்தின் தாக்கம் போக்குவரத்துத் துறையில் மிகக் கடுமையாக இருந்தது. அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை கள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. அதே போல அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. ஆட்டோ ரிக்ஷாக்கள், ஆன்லைன் டாக்ஸிகள் மற்றும் உணவு விநியோக சேவைகள் செயல்படவில்லை. உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடப் பட்டிருந்தன. திருவனந்தபுரத்தின் புகழ்பெற்ற சாலை சந்தை உள்ளிட்ட முக்கியச் சந்தைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. லாரிகள் நெடுஞ்சாலைகளிலும் வாகன நிறுத்துமிடங்களிலும் நிறுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் ஆதரவு அளித்த தால், பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரி கள் மூடப்பட்டன. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்லும் தனியார் வாகனங்களுக்கு தொழிற் சங்கங்கள் விலக்கு அளித்திருந்தன. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். வெறிச்சோடிய தமிழ்நாடு எல்லைகள் தமிழக எல்லைகளில் கேரள மாநிலத்திற்கான போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கேரள எல்லைகளில் அனுமதிக்கப்படாததால் வாளையார் (கோவை - பாலக்காடு) மற்றும் வேலாந்தவளம் (கோவை - பாலக்காடு), போடி மெட்டு (தேனி - இடுக்கி) மற்றும் குமுளி (தேனி - இடுக்கி), புளியரை/செங்கோட்டை (தென்காசி - கொல்லம்), கரோடு/களியக்காவிளை (கன்னியாகுமரி - திரு வனந்தபுரம்) ஆகிய இடங்களில் தமிழக அரசின் ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயங்கின. ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி நிறுவ னங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நுழைவாயில்களின் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் ஜார்க்கண்டில் வங்கி, காப்பீடு மற்றும் நிலக்கரித் துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் உமேஷ் தாஸ் தெரிவித்தார். ஒடிசா கேரளாவைப் போலவே ஒடிசாவில் தொழிலா ளர்கள் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர் பெரும் போராட்டங்களை நடத்தினர். புவனேஸ் வரம், பாலசோர் ரயில் நிலையங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக புவ னேஸ்வரத்தில் காவல்துறையினருக்கும் தொழிற் சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேற்கு வங்கம் மேற்குவங்கத்தில் கொல்கத்தா, நாடியா, மால்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் ரயில் மற்றும் சாலை மாறியல்களுடன் போராட்டங்கள் நடைபெற்றன. ஜாதவ்பூர் மற்றும் பிரசிடென்சி பல்கலைக்கழக வாசல்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் மாணவர்கள் மோடி அரசுக்கு எதிரான முழக்கங்களுடன் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா கர்நாடகாவில் தொழிற்சங்கத்தினர் வலுவான போராட்டத்தை நடத்தினர். பெங்களூரு, மைசூரு, மங்களூரு மற்றும் பெல்லாரி போன்ற நகரங்களில் போக்குவரத்து மற்றும் வங்கிச் சேவைகள் முற்றிலும் முடங்கின. ஆசிரியர்கள் பணியை புறக் கணித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் பஞ்சாப் மாவட்டத்தில் விவசாயிகளுடன் தொ ழிற்சங்கத்தினருடன் இணைந்து போராட்டம் நடத்தினர். சில இடங்களில் மறியல் போராட் டங்கள் நடைபெற்றன. அதே போல தமிழ்நாடு, கோவா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் என நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக வலுவாகப் போராட்டங்கள் நடைபெற்றன.
