articles

img

பி.எம்.கேர்ஸ்: ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டம் - கே.கனகராஜ்

பி.எம்.கேர்ஸ்: ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டம்

பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு, “அந்த நிதியம் ஒரு தனியார் நிதியம்; எனவே, அதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது” என்று நாடாளுமன்றச் செயலகத்திற்கு “அறிவுறுத்தி” பிரதமர் அலுவலகம் “உத்தரவு” போட்டுள்ளது. தனியார் நிதி குறித்து விவாதிக்க முடியாது என்பது சரிதான் - ஆனால் பி.எம்.கேர்ஸ் தனியார் நிதியமா என்கிற கேள்வி முக்கியமானது. இப்போது அதைத் தனியார் நிதியம் என்று அரசு சொல்வது இந்திய மக்களையும், நாடாளுமன்றத்தையும், நீதிமன்றத் தையும் ஏமாற்றுவதற்கான ஒரு செயலே அன்றி, உண்மையில் அது தனியார் நிதியம் அல்ல. அரசே உருவாக்கிய நிதியம் 2020 மே 6-ஆம் தேதி பத்திரிகை தகவல் அலுவல கம் (PIB) வெளியிட்டுள்ள செய்தியின் இரண்டாவது பத்தி இப்படி விவரிக்கிறது: “கோவிட் போன்று மிகத் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் பாதிப்பு களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க, அதற்கென்று பிரத்யேகமாக ஒரு நிதியம் தேவைப்படுகிறது என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்தது. அதனடிப்படையில், 2020 மார்ச் 28 அன்று ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு, அதற்குப் ‘பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணத்திற்கான அவசர நிலை நிதியம்’ (PM -CARES) என்று பெயரிடப்பட்டது.” இவ்வளவு தெளி வாக ஒன்றிய அரசுதான் இந்த நிதியத்தை உருவாக்கு கிறது என்று சொன்ன பிறகு, அதைத் தனியார் நிதியம் என்று சொல்வதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

பொறுப்பில் இருப்பவர்கள் யார்? இந்த நிதியத்தின் பிரத்யேக இணையதளத்தில், “யாரெல்லாம் அறங்காவலர்களாக (Trustees) இருப்பார்கள்?” என்கிற கேள்விக்குப் பிரதமர் தலைவ ராக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இது பதவியின் பொருட்டு (Ex-officio) அமையும் பொறுப்பு. அதாவது, யார் பிரதமராக இருந்தாலும் அவரே அதனுடைய தலைவராக இருப்பார்; நரேந்திர மோடி என்கிற தனிமனிதர் அல்ல. இதேபோன்று, இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் பதவியின் நிமித்தம் இந்த நிதியத்தின் உறுப்பி னர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பொறுப்பு களில் இருப்போர் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு நிதியத்தைத் தனியார் நிதியம் என்று சொல்வதற்கு எந்தவிதமான நியாயமும் கிடையாது.

பிரதமர் அலுவலகத்தின்  நேரடி நிர்வாகம் “இந்த நிதியம் எப்படி நிர்வகிக்கப்படும்?” என்ற கேள்விக்குப் பிரதமர் அலுவலகத்தில் பி.எம்.கேர்ஸ் நிதியத்திற்குப் பொறுப்பாகக் கூடுதல் செயலாளரோ அல்லது இணைச் செயலாளரோ நிதியத்தின் செய லாளராகக் கௌரவப் பொறுப்பில் இருப்பார்கள் என்று சொன்ன பிறகு, இது எப்படித் தனியார் நிதிய மாகும்? இந்த நிதியத்தின் நிர்வாக ஏற்பாடுகளைப் பிரதமர் அலுவலகமே கவனிக்கும் என்று சொல்லப் பட்டுள்ளது. அதேபோல, இந்த நிதியத்தின் தலைமை அலுவலகமாக புதுதில்லி, சௌத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகமே இருக்கும் என்று அறிவிக் கப்பட்ட பிறகு, இது எப்படித் தனியார் நிதியமாக இருக்க முடியும்?

விதிகளும் சலுகைகளும் இந்த நிதியத்திற்குப் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி (CSR Fund) மூலம் நன்கொடைகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கோ, முதலமைச்சர் நிவாரண நிதிகளுக்கோ மேற்கண்ட சிஎஸ்ஆர் (CSR) நிதிகள் வழங்கப்பட முடியாது என்கிறபோது, ஒரு  தனியார் நிதியத்திற்கு மட்டும் இப்படி ஒரு சலுகை  அளிக்கப்பட முடியுமா? எனவே, ஒரு தனியார் நிதியம், அரசு நிவாரண நிதிகளை விடக் கூடுதல் முக்கி யத்துவத்துடன் நிதியைப் பெறுகிறபோது, அதற் கென்று அரசு விதிகளையே மாற்றி எழுதுகிறபோது, இதை எப்படித் தனியார் நிதியம் என்று கூற முடியும்?

நிர்ப்பந்திக்கப்பட்ட நன்கொடைகள் ஒரு தனியார் நிதியத்திற்காக அரசின் பொதுத்  தகவல் மையம் “நிதி கொடுங்கள்” என்று அழைப்பு விடுக்க முடியுமா? இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், பொ துத்துறை மற்றும் ஒன்றிய அரசு ஊழியர்களிடம் அவர்களுடைய அனுமதி பெறாமலேயே, இந்த நிதியத்திற்கு நிர்ப்பந்தமாக ஒருநாள் சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் நிதியத்திற்கு அரசு நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி நிதி பெற முடி யுமா? நிதியம் ஆரம்பிக்கப்பட்ட ஒரே வாரத்திற்குள் 6,500 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. இது தவிர, பாது காப்புத்துறை ஊழியர்களிடமிருந்து 500 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வளவையும் செய்து விட்டு, இது தனியார் நிதியம்தான் என்று கொஞ்ச மும் கூச்சமின்றிச் சொல்வதை யார் ஏற்க முடியும்? குவிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி நிதி ஏற்கெனவே ‘பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி’ இருக்கும்போது, அதை விடுத்து இப்படியொரு நிதியத்தை உருவாக்கி 2019-20-ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் மார்ச் 31-க்குள் 3,076.62 கோடி ரூபாயும், அடுத்த நிதியாண்டில் 10,990.17 கோடி ரூபாயும், அதற்கடுத்த நிதியாண்டில் 9,131.94 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் 6,723.06 கோடி ரூபாயும் வசூலித்திருக்கிறார்கள். அந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 30,000 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறார்கள். இதேபோன்று, நாடாளு மன்ற உறுப்பினர்களின் உள்ளூர் வளர்ச்சி நிதியி லிருந்து (MPLADS) 413 கோடி ரூபாயை இதற்கெ னப் பிடித்தம் செய்திருக்கிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு இதேபோன்று, பவர் ஃபைனான்ஸ் கார்ப்ப ரேஷன் (PFC) சார்பில் 2020-21 ஆம் ஆண்டு சட்டப்படி சிஎஸ்ஆர் (CSR) நிதிக்குத் தகுதியான தொகை 150 கோடி ரூபாய் மட்டுமே; ஆனால், 200 கோடிக்கும் அதிகமான தொகை இந்த நிதியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பவர் கிரிட் 200 கோடி ரூபாயும், எல்.ஐ.சி 76 கோடி ரூபாயும், ரூரல் எலக்ட்ரிஃ பிகேஷன் கார்ப்பரேஷன் (REC) 150 கோடி ரூபாயும் வழங்கியுள்ளன. 2020 டிசம்பர் 18 அன்றைய ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியின்படி, இந்திய ராணுவ வீரர்கள் 203.67 கோடி ரூபாயும், விமானப் படையினர் 29.18 கோடி ரூபாயும், கடற்படையினர் 12.41 கோடி ரூபாயும், இந்திய ரயில்வே ஊழியர்கள் 146.72 கோடி ரூபாயும் கொடுத்துள்ளதாகக் குறிப் பிட்டுள்ளனர். எந்தத் தனியார் நிதியத்திற்காகவாவது அரசின் நிர்ப்பந்தத்தால் ராணுவ வீரர்கள் பணம் கொடுத்திருப்பார்களா?

கணக்கு காட்ட மறுக்கும் மோசடி எனவே, அரசுப் பொறுப்பையும் அதிகாரத்தை யும் பயன்படுத்தி ஒன்றிய அரசு ஊழியர்கள், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, ரயில்வே,  மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றி லிருந்து - கோவிட்டைப் பயன்படுத்தி - பல பத்தா யிரம் கோடி ரூபாய்களை நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி  வைத்துக்கொண்டு, தற்போது அது தனியார் நிதியம் என்று சொல்வதும், அதைப் பற்றி விவாதிக்க முடியாது என்று சண்டித்தனம் செய்வதும், அந்தப் பணம் எப்படிச் செலவழிக்கப்பட்டது என்று கணக்குக் காட்ட மறுப்பதும் அந்தப் பணத்தை மோசடியாகப் பயன் படுத்தியிருக்கிறார்கள் என்றே கருத இட மளிக்கிறது.

இமாலய ஊழல் பிரதமர் என்கிற அரசுப் பொறுப்பையும், இந்திய அரசின் இலச்சினையையும், இந்திய அரசின் அதி காரிகளையும் பயன்படுத்தி வசூலித்த பணத்திற்கு கணக்கு தர முடியாது என்று மறுப்பது, மோசடியை மறைப்பதற்கான முயற்சி என்று கருதினால் அது தவறா? அவக்கேடு என்னவென்றால், இந்த காலத்தில் அது தனியார் நிதியம் என்று அரசு சொன்னதை எந்த விசாரணையும் இல்லாமல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதும், அதில் தலையிட மறுப்பதும் தான். அரசின் பெயரைப் பயன்படுத்துவது, அரசு அமைப்புகளைப் பயன் படுத்துவது என்பது மிகப்பெரிய அதிகார அத்து மீறல். பணத்தின் அளவை விட, இந்த மோசடிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறைகள் உலக வரலாற்றி லேயே “மோசடியின் இமாலயம்” என்று அழைக்கப் படத் தகுதியானவை.