30 கோடி உழைப்பாளிகளின் பேரெழுச்சி மோடி அரசை அதிரவைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொது வேலைநிறுத்தம்!
புதுதில்லி, பிப். 12- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளுக்குச் சவக்குழி தோண்ட உழைக்கும் வர்க்கம் களம் கண்ட பிப்ரவரி 12 அகில இந்திய பொது வேலை நிறுத்தம், இந்திய வரலாற்றில் இது வரை கண்டிராத ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியாக வெடித்தது. இந்தி யத் தொழிற்சங்க மையம்(சிஐடியு) உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங் கள் விடுத்த அறைகூவலை ஏற்று, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 30 கோடிக்கும் அதிகமான தொழி லாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் எரிமலை எனத் திரண்டு தேசத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளனர். சங்கங்களின் உறுதிமிக்க ஒற்றுமை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்க்கப்போரை சிஐடியு (CITU), ஐஎன்டியுசி (INTUC), ஏஐடியுசி (AITUC), எச்எம்எஸ் (HMS), ஏஐயு டியுசி (AIUTUC), டியுசிசி (TUCC), சேவா (SEWA), ஏஐசிசிடியு (AICCTU), எல்பிஎப் (LPF) மற்றும் யுடியுசி (UTUC) ஆகிய 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தலைமையேற்று நடத்தியது. இவர்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவ சாயத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்)யும் கைகோர்த்தது, இந்திய வரலாற்றில் தொழிலாளர்-விவசாயி வர்க்கத்தின் பிரிக்க முடி யாத ஒற்றுமையைப் பறைசாற்றி யது. ஒன்றிய அரசின் அடக்கு முறைகளையும், சில மாநிலங்களின் 144 தடை உத்தரவுகளையும், நீதி மன்றக் கட்டுப்பாடுகளையும் தவிடு பொடியாக்கிவிட்டு, உழைக்கும் மக்கள் வீதிக்கு வந்து தங்களது உரிமைக் குரலை எழுப்பினர். முடங்கியது எரிசக்தி மற்றும் சுரங்கத்துறை வேலைநிறுத்தத்தின் எதிரொலி யாக நாட்டின் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அடியோடு முடங்கியது. கோல் இந்தியா நிறுவனத்தின் கீழ் உள்ள சிசிஎல் (CCL), இசிஎல் (ECL), என்சிஎல் (NCL), எஸ்இசிஎல் (SECL), எம்சிஎல் (MCL), டபிள்யூசிஎல் (WCL) மற்றும் என்இசி (NEC) கிளைகளில் 83 சதவீதத்திற்கும் அதிகமான தொழி லாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டனர். குறிப்பாக தெலுங்கானாவின் சிங்கரேணி சுரங்கங்களில் 90 சதவீதத் தொழிலாளர்கள் கள மிறங்கியதால் நிலக்கரி உற்பத்தி மற்றும் போக்குவரத்து முழுமையாக நின்றது. ஜார்க்கண்டின் தன்பாத், பொக்காரோ, கிரிடி மற்றும் ஒடிசா வின் தால்சர், இப் பள்ளத்தாக்குப் பகுதி களில் சுரங்கப் பணிகள் முடங்கியது டன், ரயில்வே நிலக்கரிப் போக்கு வரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப் பட்டது. ஒடிசாவின் கொய்தா, பார்சு வான் பகுதிகளில் உள்ள இரும்புத் தாது சுரங்கங்களும், மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாங்கனீஸ் சுரங்கங்களும் முழுமையாக முடங்கின. 27 லட்சம் மின் ஊழியர்கள் மின்சாரத் துறையில் ஏஐபி இஎஃப் (AIPEF) மற்றும் பல்வேறு சங்கங் களைச் சேர்ந்த 27 லட்சம் மின் ஊழியர்கள் பங்கேற்றது போராட்டத் திற்குப் பெரும் பலம் சேர்த்தது. தமிழகத்தில் 13,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் 100 சதவீத ஊழியர்களும் களமிறங்கினர். பஞ்சா பில் மட்டும் 25,000 மின் ஊழியர்கள் போராட்டத்தில் இணைந்தனர். மகா ராஷ்டிராவில் மின் ஊழியர்கள் 100% பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஸ்தம்பித்த போக்குவரத்து மற்றும் பெட்ரோலியத் துறை எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அஸ்ஸாமின் திக்பாய், போங்காய்கான் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கேரளாவின் கொச்சி சுத்திகரிப்பு நிலையம் முற்றிலு மாக முடங்கின. மங்களூரு, கொச்சி, கோழிக்கோடு பகுதிகளில் உள்ள எல்பிஜி (LPG) மற்றும் பெட்ரோலிய முனையங்கள் செயல்படவில்லை. பிபிசிஎல் (BPCL) மும்பை மற்றும் ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனங்களில் தொழிலாளர்கள் அமைதி வழியில் மறியலில் ஈடுபட்டனர். நாட்டின் முக்கியத் துறைமுகங் களான தூத்துக்குடி வ.உ.சி துறை முகம் 100 சதவீத வேலைநிறுத்தத்தால் செயலிழந்தது. கொச்சி, கொல்கத்தா, காமராஜர், பாரதீப் மற்றும் காக்கி நாடா துறைமுகங்களிலும் பணிகள் கடு மையாகப் பாதிக்கப்பட்டன. போக்கு வரத்துத் துறையைப் பொறுத்தவரை, கேரளா, பஞ்சாப் மற்றும் ஒடிசாவில் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் சாலைக்கு வராததால் முழு அடைப்பு போன்ற சூழல் நிலவியது. மேற்கு வங்கத்தின் ஹவுரா, ஹால்டியா போன்ற தொழில் மண்டலங்களில் சரக்குப் போக்குவரத்து அடியோடு நின்றது. தொழில் மண்டலங்களில் எழுச்சிக் கோலம் தமிழகத்தின் வாகன உற்பத்தி மையங்களான ஸ்ரீபெரும்புதூர், ஒர கடம் மற்றும் மறைமலைநகர் பகுதி களில் இயங்கும் அப்போலோ டயர்ஸ், யமஹா, சாம்சங், எல்&டி (L&T) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கொச்சி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) உள்ள 200 தொழிற்சாலைகளின் 32,000 தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். மத்தியப் பிரதேசத்தின் சத்னா, மைஹர் சிமெண்ட் ஆலைகள் முழுமையாக மூடப்பட்டன. குஜ ராத்தின் அகமதாபாத், சனந்த், சூரத் மற்றும் தெலுங்கானாவின் சங்கா ரெட்டி தொழில் பேட்டைகளில் தோஷிபா, ஐடிசி, மஹிந்திரா போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். நிதித்துறை ஸ்தம்பிப்பு வங்கித் துறையில் ஏஐபிஇஏ (AIBEA), ஏஐபிஓஏ (AIBOA) மற்றும் பெபி (BEFI) சங்கங்களின் பங்கேற்பால் பொதுத்துறை வங்கிகள் முடங்கின. காப்பீட்டுத் துறையில் எல்ஐசி (LIC) மற்றும் ஜிஐசி (GIC) ஊழியர்கள் நூறு சதவீத பங்கேற்பைப் பதிவு செய்தனர். குஜராத்தில் தொழிலாளர் நீதிமன்றங் களும் தீர்ப்பாயங்களும் கூட மூடப் பட்டிருந்தன. அங்கன்வாடி முதல் ஐடி ஊழியர்கள் வரை: ஒரு கோடிப் பேர் திரண்ட கேரளா! இந்த வேலைநிறுத்தத்தின் மிகவும் உணர்வுப்பூர்வமான அம்சம், அடி மட்ட உழைப்பாளர்களான அங்கன்வாடி, ஆஷா மற்றும் சத்துணவு ஊழியர்களின் எழுச்சிதான். கேரளா மாநிலத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி தொழிலாளர்களும் விவசாயிகளும் 250-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட பேரணிகளில் பங்கேற்றது நாட்டையே வியக்க வைத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கடும் குளிரிலும், ஹிமாச்சலப் பிரதேசத்தின் மலைப் பகுதிகளிலும் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அரசு ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். சிஐடியு சூளுரை! ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பு களை (Labour Codes) ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கு வதை நிறுத்த வேண்டும், விவசாயி களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டும்; மற்றும் தேசத்தின் வளங்களைச் சூறையாடும் இந்தியா-அமெரிக்கா இடையிலான ஆபத்தான வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதே இந்த 30 கோடி மக்களின் முழக்கமாக இருந்தது. இந்த மகத்தான வெற்றி குறித்து தங்களது அறிக்கையில் மேற்கண்ட விபரங்களை விவரித்துள்ள சிஐடியு தலைவர் சுதீப் தத்தா, பொதுச்செய லாளர் எளமரம் கரீம் ஆகியோர், “இந்த 2026 பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தம், இந்தியத் தொழிலாளர் களின் ஒற்றுமையை உலகிற்குப் பறை சாற்றியுள்ளது. ராஜஸ்தானின் 22 மாவட்டங்கள், உத்தரகண்டின் 25 இடங்கள் உட்பட நாடே போர்க்கள மாக மாறியுள்ளது. உற்பத்தி மற்றும் சேவையை முடக்கும் வல்லமை உழை க்கும் வர்க்கத்திற்கு உண்டு என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்தியுள்ளோம். உழைப்பவரின் உரிமையைப் பறிக்க நினைக்கும் எந்த எதேச்சதிகாரச் சக்தியும் இந்த வர்க்க ஒற்றுமைக்கு முன்னால் மண்டியிட்டே தீர வேண்டும்” என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டுள்ளனர்.