தமிழக கிராமப்புற மக்களை ஏமாற்றும் அதிமுக- பாஜகவை மீண்டும் வீழ்த்துவோம்! சென்னை ஆர்ப்பாட்டத்தில் பெ. சண்முகம் பேச்சு
சென்னை, பிப். 12 - தமிழகத்தின் கிராமப்புற மக்களை, ஏமாற்றும் அதிமுக - பாஜக கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வீழ்த்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சாடினார். பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ள ஒன்றிய அரசையும், அதற்கு துணைபோகும் அதிமுக-வையும் கண்டித்து வியாழனன்று (பிப். 12) சென்னையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. த.வேலு எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர் வகிதா நிஜாம், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, மதிமுக பொருளாளர் செந்திலதிபன், ஐயுஎம்எல் பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது: மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும், வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் ஏதும் ஒன்றிய பட்ஜெட்டில் இல்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில், திட்டங்களை தருவதில் பாரபட்சம் காட்டுகிறது. ஆனால், ஒன்றிய அரசு ஏதோ வாரி வழங்குவது போலவும், அதைத் தமிழ்நாடு அரசு சீரழிப்பது போலவும் பிப்ரவரி 13 அன்று அதிமுக ஒரு விநோதமான ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. 125 நாள் வேலைக்கு ரூ. 4 லட்சம் கோடி எங்கே? குறிப்பாக, 100 நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக மாற்றியது நல்லது தானே என்று பிரச்சாரம் செய்கின்றனர். 100 நாள் வேலை திட்டமாக இருந்தபோது இந்தியாவில் எங்காவது 100 நாள் வேலை வழங்கப்பட்டதா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டதா? ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்திற்கான நிதியை ஒன்றிய பாஜக அரசு குறைத்து வந்துள்ளது. விபி - ஜிராம்ஜி என்ற இந்த புதிய திட்டத்தின்படி 125 நாள் வேலை வழங்க வேண்டுமென்றால் 4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் 95 ஆயிரம் கோடி ரூபாய்தான் ஒதுக்கி உள்ளது. அதிலும், 40 சதவிகிதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்கிறது. அவ்வாறிருக்க, எந்த வகையில் ஒன்றிய அரசை அதிமுக பாராட்டுகிறது? அதிமுகவும், பாஜகவும் கிராமப்புற மக்களை ஏமாற்றுகின்றன. ரெய்டுக்கு பயந்து தமிழகத்தை பலி கொடுக்க முயல்வதா? தனது வீட்டிற்கு ரெய்டு, வழக்கு வரக்கூடாது என்பதற்காக ஒன்றிய அரசை எடப்பாடி பழனிசாமி பாராட்டுகிறார். ரெய்டு, வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக தமிழகத்தையே அதிமுக பலி கொடுப்பதை ஏற்க முடியாது. எனவே, அதிமுக - பாஜக அணியை வீழ்த்துவோம். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார்.