states

img

கார்ப்பரேட் லாப வேட்கையால் அழிவை நோக்கி மனித குலம்!

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் கூடிய (காலநிலை மாற்ற உச்சி மாநாடு - 29 (COP29) மாநாடு வெறும் வாக்குறுதி களுடன் முடிவடைந்துள்ளது. காப் COP28-இல் புதை படிம எரிபொருட்கள் காலத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்த வளர்ந்த நாடுகள், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றன. குறிப்பாக இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் பயன்பாட்டை குறைப்பதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. வளரும் நாடுகள் கோரிய 1.3 டிரில்லியன் டாலர் (1 டிரில்லியன் = 1 லட்சம் கோடி) நிதியுதவிக்கு பதிலாக வெறும் 300 பில்லியன் டாலர் மட்டுமே 2035 வரை  வழங்க முன்வந்துள்ளனர். அதுவும் கடன்கள் மற்றும் வணிக நிதி வடிவில். “பசுமைப் பொருளாதாரம்” என்ற பெயரில் ஏழை நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகளை கைப்பற்றும் புதிய காலனியாதிக்க முயற்சியே இது என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் மார்க்சிய ஆய்வாளருமான பிரபீர் புர்காயஸ்தா.

எரிசக்தித் துறையின் மாற்றம்

முதன்முறையாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மூலதனச் செலவு புதை படிம எரிபொருட்களை விட குறைந்துள்ளது. சூரிய ஒளி மற்றும் காற்றை அடிப்படையாகக் கொண்டதால் இயக்கச் செலவும் கிட்டத்தட்ட பூஜ்ஜியம். ஏற்கனவே உள்ள புதை படிம மின் நிலையங்களின் மூலதனச் செலவு ஈடாகிவிட்டதால், அவற்றிற்கான எரிபொருள் செலவு மட்டுமே மின் கட்டணத்தில் கணக்கிடப்படுகிறது. மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் மட்டுமே போதாது. சூரியன் பிரகாசிக்காத நேரங்களிலும், காற்று வீசாத நேரங்களி லும் புதை படிம மின் நிலையங்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும் மின்சார சேமிப்பு  தொழில்நுட்பத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் முன்னேற்றமும் அமெரிக்காவின் பின்னடைவும்

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, 2023-இல் உலகம் முழுவதும் சேர்க்கப்பட்ட 425 ஜிகாவாட் புதிய சூரிய மின் திறனில் சீனாவின் பங்கு 263 ஜிகாவாட்.  மற்ற நாடுகள் அனைத்தும் சேர்ந்து 162 ஜிகாவாட் மட்டுமே. அமெரிக்கா வெறும் 33 ஜிகாவாட் திறனைச் சேர்த்துள்ளது. 2019-இல் உலக சூரிய மின் திறனில் நான்கில் ஒரு பங்கை மட்டுமே சேர்த்த சீனா, 2023-ல் மற்ற நாடுகள் அனைத்தும் சேர்த்ததை விட 62 சதவீதம் அதிகம் சேர்த்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா தனது திறனை எட்டு மடங்கு உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் முயற்சிகளும் தடைகளும்

இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் 2023-இல் தலா 13.5 ஜிகாவாட் புதிய திறனை சேர்த்துள்ளன. இந்தியாவில் சூரிய தகடுகள் உற்பத்தி நன்கு முன்னேறி வந்தாலும், சூரிய மின்கலன்கள் தயாரிப்பில் பின்தங்கியுள்ளது.  அதானி சோலார் திட்டங்கள் மீதான அமெரிக்க விசாரணையும், எஸ்இசிஐ(SECI) நிறுவனம் அதானியுடன் மேற்கொண்ட 7 ஜிகாவாட் ஒப்பந்தம் குறித்த  ஊழல் புகார்களும் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பாதிக்கின்றன. ஆந்திர மாநில அதி காரிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

புதிய பாதைகளும் தடைகளும்

ஐரோப்பிய யூனியன் பசுமைக் கொள்கைகளை பெரிதாகப் பேசினாலும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை தொடர்கிறது. காலநிலை மாற்றத்தின் பெயரால் வளரும் நாடுகள் மீது வர்த்தகத் தடைகளை விதிக்கிறது. அமெரிக்காவுக்கு அடிபணிந்து செல்வதால் தனது தொழில்துறைகளையும், உலகின் எதிர்காலத்தையும் பணயம் வைக்கிறது.

அபாயகரமான எதிர்காலம்

2025-இல் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்பதும் அர்ஜெண்டினா  ஜனாதிபதி ஜேவியர் மிலே போன்ற காலநிலை மறுப்பாளர்களின் எழுச்சியும் அச்சுறுத்தலாக உள்ளன. இவர்கள் எதிர்கால ஆபத்துகளை புறக்கணித்து இன்றைய லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

அரசியல் சவால்

கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், இது தொழில்நுட்ப அல்லது பொருளாதாரப் பிரச்சனை அல்ல - அரசியல் சவால். ஜி7 நாடுகளின் முன்னாள் காலனி ஆதிக்க சக்திகள், பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் மன்னன் பதினாறாம் லூயி சொன்னது போல “எனக்குப் பின் வெள்ளம் வந்தாலும் வரட்டும்” என்ற கொள்கை யை பின்பற்றி உலகைச் சுரண்டுவதையே தொடர விரும்புகின்றன. பேரழிவு காலநிலை மாற்றம் ஏற்பட்டாலும் அவர்களது லாப வேட்கை தொடர்கிறது.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி (டிச.22) கட்டுரையின் தமிழ்ச் சுருக்கம் : ராகினி