வெறுப்பைப் பாருங்கள்
வங்காள முஸ்லிம்கள் மீது தொடர்ந்து வெறுப் பாகப் பேசி வரும் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது தில்லி காவல்துறையில் புகார் தரப்பட்டிருக்கிறது. சமூக ஆர்வலரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஹர்ஷ் மந்தர் இந்தப் புகாரைத் தந்துள் ளார். வங்க மொழி பேசக்கூடிய இஸ்லாமியர்களை வெளி நாட்டவர் என்ற விஷமப் பிரச்சாரத்தை பாஜக அசாமில் நடத்து கிறது. காங்கிரஸ்காரராக இருந்து, சீட்டுக் கம்பெனி மோசடி உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க பாஜகவில் இணைந்த சர்மா, மற்ற கட்சிக்காரர்களை விட ஒருபடி மேலே போய் வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டுள் ளார். முஸ்லிம்களைத் தொந்தரவு செய்யுங்கள். தானாகவே வெளியேறிவிடுவார்கள் என்ற அவரது பேச்சின் மீதுதான் ஹர்ஷ் மந்தர் புகார் தந்திருக்கிறார்.அவரையும் சர்மா மிரட்டத் தொடங்கியுள்ளார்.
வேலையைப் பாருங்கள்
தேசியவாதக் காங்கிரசின் இரண்டு பிரிவுகளும் இணைவது இப்போதைக்கு இருக்காது என்று சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார். அஜித் பவாரின் மரணத்திற்கு முன்பாக பல சுற்றுகள் பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன. பிப்ரவரி 8 அல்லது 12ஆம் தேதியன்று இணைப்புக்கான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென்று அஜித் பவார் விபத்தில் மரணமடைந்ததால் அது நடக்க வில்லை. அது மீண்டும் துளிர் விடக் கூடாது என்பதற்காக அஜித் பவாரின் துணைவியாரை அவசர, அவசரமாக துணை முதலமைச்சராக பதவியேற்க வைத்திருக்கிறது பாஜக. இந்நிலையில்தான் இணைப் புக்கான சாத்தியக்கூறுகள் குறைந்துவிட்டது. அவரவர் வேலைகளைப் பாருங்கள் என்று சரத் பவார் கூறியி ருக்கிறார். இணைப்பு ஏற்பட்டால் சரத் பவாரின் கை ஓங்கி விடும் என்று பாஜக அச்சப்படுகிறது.
நிலைமையைப் பாருங்கள்
வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தின் கீழ் 100 நாட்களுக்குப் பதிலாக, 125 நாட்கள் வேலை கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. முதலில் 100 நாட்கள் உறுதி என்றிருந்ததை, உறுதியற்ற 125 நாட்கள் என்று மாற்றியிருப்பது ஒருபுறம். மறுபுறத்தில் செலவை மாநில அரசு மீது ஏற்றிவிட்டார்கள். இதைத்தான் கூட்டாளியான தெலுங்கு தேசம் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒரு ஆண்டுக்கு சுமார் 2,500 கோடி ரூபாய் எங்கள் மீது சுமையை ஏற்றியிருக்கிறீர்களே. அதற்கு இழப்பீடு செய்வீர்களா என்று அக்கட்சியின் மக்களவை உறுப்பினரான ஸ்ரீகிருஷ்ண தேவராயலு கேள்வி எழுப்பியிருக்கிறார். நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது இதை வலியுறுத்துவோம் என்றும் கூறியுள்ளார். ஒன்றிய அரசின் மக்கள் விரோதத் திட்டத்தைக் கூட்டணிக்கட்சியே அம்பலப்படுத்தப் போகிறது.
கேரளாவைப் பாருங்கள்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 35 நாட்களாக மதிய உணவுத் திட்ட சமையலர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு வெறும் 66 ரூபாய் மட்டுமே அவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. மேலும் 17 ரூபாய் மட்டுமே உயர்த்தித் தர முடியும் என்று மாநில அரசு முரண்டு பிடிக்கிறது. சமையலர்கள் உறுதியாகப் போராடுவதால், நடவடிக்கை எடுப்போம் என்று அதிகாரிகளை வைத்து மிரட்டுகிறார்கள். பெரும்பாலான மாநிலங்களில் குறைவாகத்தான் தரப்படுகிறது என்பதை மாநில அரசு சுட்டிக்காட்டுகிறது. சமையலர்களோ, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றில் அதிகமாகத் தரப்படுவதைப் பாருங்கள் என்கிறார்கள். இரட்டை என்ஜின் என்று சொல்வதோடு நிற்காமல், ஒன்றிய அரசின் திட்டமான இதற்கு, அங்கிருந்து நிதியைப் பெறுங்கள் என்றும் வலியுறுத்துகின்றனர்.