ஸ்கேன் இந்தியா
இதுவும் வியூகம்..?
கொல்கத்தாவில் தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனமான ஐ-பேக் அலுவலகத்தில் ரெய்டு நடக்கிறது. திடீரென்று அங்கு வந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அங்கிருந்து சில கோப்புகளையும், ஒரு மடிக்கணினியையும் எடுத்துக் கொண்டு பறந்துவிட்டார். இந்த ரெய்டு கட்சி மீதான தாக்குதல் என்றும் குற்றம் சாட்டினார். ஐ-பேக் உரிமையாளர் பிரதீக் ஜெயின் எப்போது திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 2019இல் கூட புலனாய்வுக்குழுவின் ரெய்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய மம்தா, தற்போது கோப்புகளை யும், மடிக்கணினியையும் அவசர, அவசரமாக எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பாஜகவும், தங்கள் அரசியலுக்கு மம்தாவை எதிராக முன்னிறுத்திக் கொண்டால்தான் வசதி என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சந்தி சிரிக்கிறது
உத்தரப்பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று காவல்துறை காவல் உதவி ஆய்வாளர் ஒருவரும், அவரது நண்பரும் பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள். குடும்பத்தினர் உடனடியாகக் காவல்நிலையம் சென்று, புகார் அளித்தனர். அதைப் பதிவு செய்யாமல், காலையில் வாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். காலையில் சென்றால், ஏதோ புதிய நபர்களைப் பார்ப்பது போல இவர்களைக் காவல்துறையினர் பார்த்திருக்கிறார்கள். குடும்பத்தினரின் விடாப்பிடியான கோரிக்கைக்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை போடப்படுகிறது. அதில் காவல்துறை சீருடையில் இருந்தவரைப் பற்றி இடம் பெறவில்லை. சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்தனர். பிரச்சனை பெரிதாவதைப் பார்த்தவுடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி கிடைத்துள்ளது. ஆதித்யநாத்தின் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கான நீதி கிடைப்பது எளிதல்ல என்று சமூக ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள்
. மதுவிலக்கு..?
பீகாரில் மதுவிலக்குதான் பெண்களின் வாக்கு களை நிதிஷ் குமாருக்குப் பெற்றுத் தருகிறது என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆனால், கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுவதை மறைத்து விடுகிறார்கள். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பதும் வாடிக்கையானதாக மாறியுள்ளது. அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தில், தந்தையும், மகனும் ஒன்றாகக் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். தந்தை இறந்து போய்விட்டார். மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இவற்றையெல்லாம் வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகவே நிதிஷ் குமார் அரசு பார்க்கிறது. வாக்குகளைப் பெறும்போது மட்டும், இது குடும்பத்தை பாதுகாக்க என்று சொல்லி பெண்களின் வாக்குகளைப் பெறும் ஆளும் கூட்டணி, இதை மட்டும் வெறும் குற்றமாகப் பார்ப்பதா என்று மக்கள் குமுறுகிறார்கள்.
(அவ)லட்சணம்..!
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் நகர்மன்றத்திற்கான தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 59 வார்டுகளில் ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனா (ஷிண்டே) கட்சிக்கு 27 வார்டுகள் கிடைத்தன. பாஜக 14, காங்கிரஸ் 12, தேசியவாத காங்கிரஸ் 4, பிறர் 2 என்ற எண்ணிக்கையில் முடிவுகள் இருந்தன. ஆளும் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவுக்கு ஆதரவளித்து தலைவரைத் தேர்வு செய்திருக்க வேண்டும். மாறாக, காங்கிரசின் கவுன்சிலர்கள் அனை வரையும் விலைக்கு வாங்கி, சிவசேனா வேட்பாளரைத் தோற்கடித்துள்ளனர். கேட்டால், ஊழலுக்கு முடிவு கட்ட வேண்டுமல்லவா என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களது ஊழலுக்கு முடிவு கட்ட, மாநில அரசின் அதிகாரப்பகிர்வை அல்லவா முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.
