முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்த பீகார் முதலமைச்சர்
பாட்னா பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக நிதிஷ் குமார் உள்ளார். இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆயுஷ் மருத்துவர்களின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பணி நியமன ஆணை பெற வந்த முஸ்லிம் பெண் மருத்துவரின் ஹிஜாப்பை நிதிஷ் குமார் திடீரென பிடித்து இழுத்து கழற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட “இந்தியா” கூட்ட ணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முஸ்லிம் பெண் மருத்துவரை அவமதித்த முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. அதே போல நிதிஷ்குமாரின் மனநிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருவதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் விமர்சித்துள்ளது. மேலும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
