அனில் அம்பானி ரூ.1.5 லட்சம் கோடி மோசடி
புதுதில்லி : பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக ஒன்றிய அரசின் முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ். சர்மா,”இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கோரி தாக்கல் செய்த மனு வெள்ளியன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்,”இந்த வழக்கில் நடந்துள்ள கார்ப்பரேட் மோசடியானது, முந்தைய ‘இந்தியா புல்ஸ்’ வழக்கை விட பெரியது மற்றும் சிக்கலானது. 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிதி பரிமாற்றங்கள் மிகவும் மோசடியான முறையில் வலைப்பின்னலாகப் பின்னப்பட்டுள்ளன. 2020-லேயே தணிக்கை அறிக்கை கிடைத்த போதிலும், 2025 ஜூன் மாதத்தில்தான் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால், முதல் தகவல் அறிக்கையில் எந்த ஒரு அரசு அதிகாரியின் பெயரும் இடம்பெறவில்லை” என வாதிட்டார். ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,”இந்த வாதத்தை எதிர்க்கவில்லை. ஏற்கெனவே குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது” என வாதிட்டார். தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ”சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்றால், அந்த அறிக்கைகளை மூடிய உறையில் சமர்ப்பிக்கலாம். இந்த வழக்கை 10 நாட்களுக்கு ஒத்திவைக்கிறோம்” என உத்தரவிட்டது.
