ஸ்கேன் இந்தியா
கேட்குமா?
சாலை விபத்துகள் பற்றிய ஆய்வு பல ஆச்சரியங் களைத் தந்திருக்கிறது. குறிப்பாக, 59 விழுக்காடு விபத்துகளுக்கு சாலை விதி மீறல்கள் காரணம் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். எங்கு விபத்துகள் அதிகமாக நடக்கும் என்று நன்கு தெரிந்து, எச்சரிக்கை செய்து வைத்திருக்கிறோமோ, அந்த இடத்தில் விபத்துகள் அதிகமாக உள்ளன. எச்சரிக்கை செய்வதோடு, நிர்வாகத்தின் பணி முடிந்து போய்விடவில்லை. அந்த இடத்தை மேம்படுத்தும் வகையில் சாலைப் பணி இருக்க வேண்டும் என்கிறார்கள். அடிப்படைக் கட்டுமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்தாகும். இங்கு விபத்துகள் நடக்கும் என்று தெரிந்த இடங்களைச் சரி செய்தாலே, 25 விழுக்காட்டிற்கும் அதிகமான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கேட்க வேண்டிய செவிகள் கேட்குமா?
செய்யுமா?
தொடர்ந்து போலியான புகார்கள், போலியான வழக்குகள் என்று வந்து கொண்டே இருப்பதால், இவற்றிற்கெல்லாம் முதலில் முற்றுப் புள்ளி வையுங்கள் என்று உத்தரப்பிரதேச காவல்துறையை அலகாபாத் உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தவறான புகார்களைத் தருபவர்கள், பொய் சாட்சி சொல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, இவர்களுக்கு ஆதரவளிக்கும் காவல்துறையினர் மீது துறைவாரியான நடவடிக்கை தேவை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். போதிய நடவடிக்கை எடுக்காமல், பல்வேறு வழக்குகளை இழுத்து மூடுவதற்கான அனுமதி கேட்டு வருவதை நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் கூறிவிட்டார்கள். அண்மையில், மதவெறித் தாக்குத லால் முகமது அக்லக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையில் அந்த வழக்கை மூடப்போவதாக காவல்துறை கூறியிருந்தது.
நடக்குமா?
ஒரிசாவில் மதவெறித் தாக்குதல்களுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. அந்த மாநிலத்தில் பாஜக கால் ஊன்றியதில் இருந்தே சிறுபான்மையினர் தாக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது அதிகாரத்தில் அமர்ந்துவிட்டதால், சர்வ சாதாரணமாகக் கொலைகளைச் செய்கிறார்கள். பாலாசோர் மாவட்டத்தில் மாடுகளை ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு வண்டியை நிறுத்தி ஓட்டுநரையும், உதவியாளரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச் சென்ற பின்னர், உதவியாளர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். ஓட்டுநர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஐந்து பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். ஆனால், அதற்கு முன்பாக ஓட்டுநர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. வழக்குப் பதிந்துள்ளது பற்றி எந்தக் கவலையுமில்லாமல் குற்றவாளிகள் உலா வருகிறார்கள். சட்டப்படி வழக்கு நடக்குமா என்று குடும்பத்தினர் கேட்கிறார்கள்.
தீருமா?
தில்லியில் குடிநீர்க்குழாய்களில் கழிவு நீர்க் கலந்து வருவது பற்றித் தொடர்ந்து செய்திகள் வரு கின்றன. குடியிருப்பு வாசிகளால் ஆயிரக்கணக் கான புகார்கள் கடந்த ஆண்டில் தரப்பட்டன. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது கழிவுநீர் கலப்பதால் பல்வேறு இடங்களில் மக்கள் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தூரில் ஏற்பட்ட கொடூரம் இங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்று மக்கள் கோரி வருகிறார்கள். ஆனால், அனைத்து மட்டங்களில் தங்கள் அதிகாரத்தையே வைத்திருக்கும் பாஜகவினர், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நகர்கிறார்கள். ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்தான் தலைநகர் வருகிறது. கேரேட்டர் நொய்டா என்பது தலைநகரின் பகுதி இல்லை என்றாலும், தேசிய தலைநகர மண்டலத்தில் அமைந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக, அங்கும் கழிவு நீர் கலந்த நீரை அருந்தியதால் 70 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
