“நானொரு விவசாயி, என் விவசாயத்தை காப்பாற்ற நான் அனைத்தையும் செய்கிறேன். ஆனால், தற்போது நான் நிர்க்கதியாக நிற்கிறேன்” நம்மிடம் பேச முற்பட்டபோது 21 வயதான பிரதிக்ஷாவின் கண்களில் இருந்து கண்ணீர் வரத் தொடங்கியது. பிரதிக்ஷாவின் தந்தை பக்வான் ஜாதவ் கடந்த ஜூன் 10ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். விவசாயியான பக்வான் ஜாதவின் மரணம் அவரது குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது.25ஆம் தேதி நாங்கள் பிரதிக்ஷாவின் வீட்டுக்கு சென்றபோது, கதவுக்கு முன்பாக அவர்கள் வெங்காயத்தை சேமித்து வைத்திருப்பதை பார்த்தால் அவை முழுதாக அழுகிப்போய் இருந்தது. தனது தந்தை உயிருடன் இல்லை என்பதை உணரும் வயதைக்கூட எட்டாத 2-ஆவது படிக்கும் பிரதிக்ஷாவின் தம்பி சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தான். ஔரங்காபாத் மாவட்டம் வைஜாபூர் தாலுகாவில் உள்ள பஹேகானில் பிரதிக்ஷா வசித்து வருகிறார்.அவரது வீட்டுக்கு நாம் சென்றபோது, பிரதிக்ஷாவுக்கு ஆறுதல் சொல்வதற்காக சில உறவினர்கள் வந்திருந்தனர்.
அழுகிய வெங்காயம் பறிபோன உயிர்
“வெங்காயம் கெட்டுப்போய்விட்டது, எல்லாம் அழுகிவிட்டது என்பதையே கடந்த 2 மாதங்களாக எங்க அப்பா திரும்பத் திரும்ப கூறிக்கொண்டு இருந்தார். விவசாய மும் சரியாக இல்லை, பணமும் இல்லை. என்ன செய்யப்போறேன் என்றே தெரிய வில்லை என்று சொல்லிக்கொண்டு இருந்தார். வெங்காயம் உள்ளே இருந்து அழுகியி ருந்தது. வெங்காயத்தின் விலையும் இந்த ஆண்டு பெரிதாக இல்லை. இதனால் மொத்த வெங்காயத்தையும் தூக்கி எறிய வேண்டியிருந்தது.” என்றார். ஜாதவ் குடும்பத்துக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து கிடைக்கும் பணத்தை வைத்தே குடும்பத்தை ஓட்டி வந்தனர். வெங்காயம், பருத்தி, சோயா பீன்ஸ், மக்காச்சோளம் போன்றவற்றை அவர்கள் பயிரிடுகின்றனர். தனது பேச்சை தொடர்ந்த பிரதிக்ஷா, “
ஏன் கவலைப்படுகிறீர்கள், உங்களுக்கு எவ்வ ளவு தான் கடன் உள்ளது என்று சொல்லுங்கள் என என் அப்பாவிடம் நான் கேட்டேன். ஆனால், அவர் என்னிடம் சொல்லவே இல்லை. ஒருவேளை கடன் குறித்து அறிந்தால் நான் படிப்பில் கவனம் செலுத்த மாட்டேன் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இரண்டு வங்கிகளில் லோன் இருப்பது இப்போதுதான் தெரிவித்தார்கள்” என்று குறிப்பிட்டார். சமீபத்தில்தான் அவர் பி.எஸ்சி முடித்துள்ளார். பிரதிக்ஷாவுக்கு மூன்று தங்கை களும் 2ஆவது படிக்கும் ஒரு தம்பியும் உள்ளனர். பக்வான் ஜாதவின் தற்கொலைக்கு பின்னர், தனது தாயோடு சேர்த்து இவர்கள் அனைவரையும் தாங்கும் பொறுப்பு மொத்த மும் பிரதிக்ஷாவின் மேல் விழுந்துள்ளது. ஜாதவின் குடும்பத்தினரை சந்திக்க நாம் சென்றிருந்தபோது, 10ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததற்காக பிரதிக்ஷாவின் தங்கை வைஷ்ணவிக்கு வாழ்த்து தெரிவித்து கிராமத்தின் நுழைவில் வைக்கப்பட்டிருந்த பேனர் கண்ணில் பட்டது. “அப்பா ரொம்ப தைரியமானவர். எங்கள் நாலு பேரையும் படிக்க வைக்க வேண்டும் என்பது அவரோட ஆசை. நீங்கள் என்னோட பொண்ணுங்க மட்டுமில்ல, பசங்களும் தான்னு அப்பா அடிக்கடி சொல்லுவாரு” என்று பிரதிக்ஷா கூறுகிறார்.பிரதிக்ஷாவின் கிராமத்து தோழிகளுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. ஆனால், ஜாதவ் தனது மகள் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
பதிலளிக்காத விவசாய அமைச்சர்
மகாராஷ்டிராவில் ஒரு நாளைக்கு 7 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி, விவசாயி தற்கொலை இல்லாத மகாராஷ்டிராவை ஏற்படுத்துவதாக அறிவித்தார். விவசாயிகளின் பயிர்களுக்கு சிறந்த உத்தரவாதம் வழங்குவதும், இயற்கை பேரி டர்களின் போது அவர்களுக்கு உடனடியாக உதவுவதும், மகாராஷ்டிராவை விவசாயி கள் தற்கொலை இல்லாததாக மாற்றுவதும்தான் தங்கள் அரசின் நோக்கம் என்றார். விவசாயிகளின் தற்கொலைப் புள்ளிவிவரத்தைப் பார்த்தால், மகாராஷ்டிராவில் ஜனவரி 1, 2001 முதல் மே 31, 2023 வரை 41 ஆயிரத்து 859 பேர் தற்கொலை செய்துள்ளனர். இவற்றில் 1 ஆயிரத்து 61 விவசாயிகள் தற்கொலைகள் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் நிகழ்ந்தவை. இதில் 434 தற்கொலை வழக்குகள் அரசாங்க உதவிக்கு தகுதியானவை. 2022 ஜூலை 1 முதல் மே 31, 2023 வரையிலான 11 மாதங்களில் மகாராஷ்டி ராவில் 2 ஆயிரத்து 566 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதாவது, சராசரி யாக ஒரு நாளைக்கு 7 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். விவசாயிகள் தற்கொலை குறித்து மகாராஷ்டிரா அரசு என்ன சொல்கிறது என்பதை அறிய விவசாய அமைச்சரைத் தொடர்பு கொள்ள நாங்கள் பலமுறை முயற்சித்தோம். ஆனால் அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.
என் மகனுக்கு பதில் நாங்கள் போய் சேர்ந்திருக்கலாம்
மார்ச் 7, 2023 அன்று, பீட்டின் போர்கேட் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளை ஞர் சாம்பாஜி அஷ்டேகர் தற்கொலை செய்து கொண்டார். சாம்பாஜியின் பெயரில் விவசாய நிலம் இல்லை. எனினும் 12ஆம் வகுப்புக்கு பிறகு விவசாயத்தில் அவர் ஈடுபட்டார். மிகுந்த எதிர்பார்ப்புடன் 3 ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் பயிரிட்டிருந்தார். மண் வீடும் அதிலுள்ள எழுத்துக்களும் அஷ்டேகர் குடும்பத்தின் நிலையைக் காட்டுகின்றன. சாம்பாஜியின் தந்தை அர்ஜூன் அஷ்டேகர் நம்மிடம் பேசும்போது, “சாம்பாஜி வெங்காயம் பயிர் செய்துவந்தார். அந்த வெங்காயம் காற்றில் பறந்தது. அவர் ரூ. 2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் இப்படி செய்துவிட்டார். அப்போது வெங்காயத்தின் விலை கிலோவுக்கு இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று இருந்தது. வாங்கிய கடனை எப்படி அடைப்பது, பெற்றோரை எப்படி காப்பாற்று வது என்ற கவலையில் இப்படி செய்துவிட்டார். ” என்றார். அஷ்டேகர் குடும்பத்துக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது மூத்த மகனுக்கு வெளி உலகம் தெரி யாது. மருமகன் இறந்த பிறகு அவரது மகளும் 2 குழந்தைகளும் அஷ்டேகருடன் வசிக்க தொடங்கினர். இவர்கள் அனைவரையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு சாம்பாஜி தலையில் விழுந்தது. “சாம்பாஜி போனதிலிருந்து, அவருடைய புகைப்படத்தை நாங்கள் பெட்டியில் இருந்து வெளியே எடுக்கவில்லை. புகைப்படத்தை பார்த்தாலே அவரின் நியாபகம் தான் வருகிறது. நாங்கள் இறந்து, என் மகன் இருந்திருக்கலாமோ என்று சில நேரங்க ளில் எண்ணத் தோன்றும்” என அர்ஜூன் கவலையுடன் கூறுகிறார். கணவர், மனைவி இருவருக்குமே இதே எண்ணம்தான். ஒருமுறை கிணறு தோன்றும்போது அர்ஜூனின் கால் இடறி காயம் ஏற்பட்டது. தற்போது தங்களிடம் உள்ள 6 ஏக்கர் நிலத்தை எப்படி பயன்படுத்துவது என்பதுதான் அவர்களிடம் பெரிய கேள்வியாக இருக்கிறது.
உரிய விலை கொடுக்காதது தான்
விவசாயிகள் தற்கொலைகள் நிற்கவில்லை; காரணம் என்ன? மகாராஷ்டிராவை விவசாயிகள் தற்கொலை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு அங்கு இதுவரை ஆட்சி யில் இருந்த அரசும் சரி தற்போது ஆட்சியில் இருக்கும் அரசும் சரி உறுதியாக உள்ள னர்.ஆனாலும் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்வது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. விவசாய பிரச்சனைகள் குறித்த நிபுணரும், சுதந்திர பாரத் கட்சியின் தலைவரு மான அனில் கன்வாட் இது குறித்து கூறுகையில், “விவசாயிகளின் தற்கொலைக்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று இயற்கை சீற்றத்தால் பயிர் விளைச்சல் இல்லாமல் போவது, மற்றொன்று கடன். விவசாயிகள் கடன் பெறுவதற்கு முக்கியக் காரணம் விவசாய விளைபொருட்களுக்கு அரசு உரிய விலை கொடுக்காததுதான். விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் போதெல்லாம், அரசாங்கம் ஏற்றுமதியை தடை செய்கிறது, வெளியில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்கிறது, இருப்பு வரம்பு களை விதிக்கிறது மற்றும் விவசாய பொருட்களின் விலையை குறைக்கிறது.”என்கிறார்.
சுவாமிநாதன் பரிந்துரையை சட்டமாக்க வேண்டும்
பஞ்சாப்ராவ் தேஷ்முக் வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், வேளாண் விஞ்ஞானியுமான டாக்டர் ஷரத் நிம்பல்கர் கூறும்போது, “சுவாமி நாதன் கமிஷன் பரிந்துரையின்படி பண்ணை விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவை விட 50% கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். இதை அரசு சட்டமாக்க வேண்டும். இதை விட குறைந்த விலையில் விவசாய பொருட்களை வியாபாரி கொள்முதல் செய்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எந்த அரசாங்கமும் இதைச் செய்ய தயாராக இல்லை” என்று குறிப்பிட்டார். ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பயிர்களுக்கு ஆதர விலையை அறி விக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சில ரூபாய்களும் அதிகரிக்கப்படுகிறது. பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு மிகக் குறைவு என்கிறார் நிம்பல்கர்.
எப்போது செய்வார்கள்?
மகாராஷ்டிராவை விவசாயிகள் தற்கொலை இல்லாத மாநிலமாக மாற்றும் அறி விப்பைக் கேட்ட பிறகு என்ன உணர்ந்தீர்கள் என்று கேட்டபோது, “மகாராஷ்டிராவை தற்கொலை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்று அரசு கடந்த முறை அறிவித்தது. வெறும் அறிவிப்பாக இல்லாமல், இதை எப்போது அரசு செய்துகாட்டும்? விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் குறித்து தெரிவது இல்லை. ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினால் கூட அது விவசாயிகளுக்கு சென்று சேர்வது இல்லை.” என்கிறார் பிரதிக்ஷா.
நன்றி: பிபிசி தமிழ்