கொச்சி, ஜூலை 11 - நீண்ட பல ஆண்டுகள் காத் திருப்புக்குப் பின்னர் கேரளத்தில் விழிஞ்ஞம் சர்வதேசத் துறைமுகம் எனும் கனவு நனவாகியுள்ளது. கேரளத்தின் வளர்ச்சி வரை படத்தையே மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற விழிஞ்ஞம் சர்வ தேசத் துறைமுகத்திற்கு முதலாவது மாபெரும் தாய்க் கப்பல் வந்து சேர்ந்துள்ளது. அக்கப்பலை வர வேற்கும் நிகழ்வு இன்று (ஜூலை 12) காலை 10 மணி அளவில் பெரும் உற்சாகத்துடன் நடைபெறுகிறது. கேரள துறைமுகத்துறை அமைச்சர் வி.என்.வாசவன் தலைமையில் நடை பெறும் இவ்விழாவில் முதலாவது கப்பலை வரைவேற்று துவக்கி வைக் கிறார் முதலமைச்சர் பினராயி விஜயன். விழாவில் ஒன்றிய துறைமுகம், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவைத் தொடர்ந்து இந்தியாவின் கடல்வழி சரக்குப் போக்குவரத்தில் விழிஞ்ஞம் துறை முகம் தனது வலுவான பயணத்தை துவக்குகிறது. இது, மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகம் என்பது குறிப் பிடத்தக்கது. நாட்டின் அரபிக்கடல் பிரதேசத்தில் சரக்கு கொள்கலன்களை (கண்டெய்னர்) ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு ஏற்றி இறக்கும் வசதிகள் கொண்ட துறைமுகமாக விழிஞ்ஞம் உருவாகியுள்ளது. சர்வ தேச கடல் எல்லையிலிருந்து 10 கடல் மைல் மட்டுமே தொலைவில் அமைந் துள்ள இத்துறைமுகத்தில் முதற்கட்ட மாக ஆண்டொன்றுக்கு பத்து லட்சம் கொள்கலன்களை கையாள முடியும். படிப்படியாக 30லட்சம் கொள்கலன்கள் வரை அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துறை முகத்தின் முதற்கட்ட திட்டச் செலவில் மூன்றில் இரண்டு பங்கு ரூ.5,596 கோடி கேரள அரசின் பங்கு என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய பின்னணியில், முதலாவது தாய்க்கப்பல் வருகை, விழிஞ்ஞம் துறைமுகத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.