states

img

புதிய வரலாறு படைத்த விவசாயிகளின் எழுச்சி ஓராண்டு நிறைவு

புதுதில்லி, நவ. 25 - இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மூன்று  வேளாண் விரோதச் சட்டங்களையும் திரும்பப்  பெற வேண்டும். அத்துடன் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்குவதற்கு புதிய சட்டம் கொண்டுவர வேண்டும். புதிய மின்சார திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2020 நவம்பர் 26  அன்று விவசாயிகள் தலைநகர் தில்லியின் எல்லை களை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டம் ஒன்றிய அரசின் பல்வேறு இடையூறுகள், சதிவேலைகள், அடக்குமுறைகள் ஆகியவற்றை எல்லாம் எதிர்கொண்டு ஓராண்டை நிறைவு செய்கிறது.

இந்நிலையில் கடந்த 2021 நவம்பர் 19 அன்று பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுவதாகவும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்ப வேண்டுமென்றும் தன்னிச்சை யாக அறிவிப்பை வெளியிட்டார். ஆயினும் விவ சாயிகள் பிரதமரின் அறிவிப்பை நம்ப முடியாது  என்பதால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்களை மீண்டும் நாடாளுமன்றத்திலேயே திரும்பப்பெறும் நடவடிக்கையையும் எடுத்த பிறகுதான் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி தீர்மானிக்கப்படும் என்று கூறிவிட்டனர். அத்துடன் இந்த மூன்று சட்டங்கள் தவிர வேளாண் விளை பொருட்களுக்கு ஆதார விலை வழங்குவதற்கான புதிய சட்டத்தையும் நிறைவேற்றுவது பற்றியும் மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறுவது பற்றியும் பிரதமர் ஏதும் அறிவிக்கவில்லை. அதனால் அது பற்றிய  முடிவும் தங்களுக்கு தெரியும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) தலைவர்கள் அறிவித்தனர். 

இந்நிலையில் புதனன்று ஒன்றிய அமைச்ச ரவை கூடி மூன்று வேளாண் சட்டங்களையும் நாடாளுமன்றத்தில் திரும்பப் பெறும் மசோதாவுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் விவசாயிகளின் போராட்டம் ஓராண்டைத் தாண்டி தொடரும் என்பதே சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் நிலை யாகி இருக்கிறது. எனினும் தங்களின் போராட்டம் உலகின் வேறு எங்கும் நடந்திராத வண்ணம் புதிய வரலாற்றை படைத்திருப்பதையும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் அறி விப்பை தங்களுக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாகவும் நாடெங்கும் விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஒன்றிய அமைச்சரவை வேளாண் சட்டங்களை திரும்பப் பெற ஒப்புதல் அளித்திருப்பது குறித்து ரிபப்ளிக் டிவியின் செய்தித் தொடர்பாளர் விவசாயிகள் போராட்டத் தலைவர் ராகேஷ் திகாயத்திடம் கருத்துக் கேட்டபோது, அந்த ஊடகத்தின் செய்தி யாளருக்கு பதிலளிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். இந்த ரிபப்ளிக் டிவி பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வேலையையே செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.  அதனாலேயே திகாயத் ரிபப்ளிக் டிவியின் செய்தியாளருக்கு பதிலளிக்க தாட்சண்யமின்றி தவிர்த்துவிட்டார்.