மங்களூரு, பிப்.2- கர்நாடகத்தில் நடைபெற்ற இந்து கோவில் திருவிழா ஒன்றில், இந்து வியாபாரிகள் மட்டுமே கடை வைக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் பேனர் வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சண கன்னடா மாவட்டம் மங்களூரு நகருக்கு உட்பட்ட பைலு பகுதியில் கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றது. இதையொட்டி, “இங்கு இந்துக்களுக்கு மட்டும் வியாபாரம் செய்ய அனுமதி; நம் கடவுளை வணங்கும் நபர்களிடம் மட்டும் பொருட்கள் வாங்க வேண்டும்” என விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள் அமைப்பினர் கோவிலுக்கு வெளியே பேனர் வைத்து மதவெறி விஷத்தை பரப்பியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதுடன், பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இவ்வாறு பேனர் வைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.