states

நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடரில் மின் மசோதா நிறைவேற்றப்படும்

புதுதில்லி, செப்.4- இலவச மின்சார விநியோகத்தை பறிக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களை கொழுக்க வைக்கும் மின் மசோதா-2022 குளிர்காலக் கூட்டத் தொடரில் (நவம்பர்-டிசம்பர்) நிறைவேற்றப்படும் என்று ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் அபாயச் செய்தியை தெரிவித்துள்ளார். மின்சாரத் திருத்த மசோதா 2022, ஆகஸ்ட் 8-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதன்பின்னர் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மின்சார திருத்த மசோதா-2022 அமலானால் மாநில உரிமைகள் பறிக்கப்படும். மின்கட்டணம் நிர்ணயம் செய்தல், விநியோகம், உற்பத்தி போன்ற திட்டமிடல்கள் பறிக்கப்படும். அந்த உரிமைகள் தனியார் முதலாளிகளிடம் சென்றுவிடும்.

வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரம், கைத்தறி, விசைத்தறி போன்றவற்றிற்கு வழங்கப்படும் மானியம் கேள்விக்குறியாகும்.  பெருமுதலாளிகள் மின்விநியோகத்தில் ஈடுபட்டால், அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோரை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள். இதனால் குறைந்த அளவு மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோரின் நிலை கேள்விக்குறியாகும். வசதி உள்ளவர்களுக்கே மின்சாரம் என்ற நிலை உருவாகும். ரயில்வே துறை மூலம் வாரியத்திற்கு மாதம் 600 கோடி ரூபாய் கட்டணமாக கிடைக்கிறது. இதுபோன்ற வருவாய் பறிபோகும். மின்வாரியத்தின் வருவாய் சுருங்கி, கட்டணம் உயரும் எனக் கூறி 25 லட்சம் மின் ஊழியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.  மின் மசோதா-2022 குளிர்காலக் கூட்டத் தொடரில் (நவம்பர்-டிசம்பர்) நிறைவேற்றப்படுவது குறித்துப் பேசிய சிங், மின் விநியோகத்துறையில் இதன் மூலம் போட்டி உருவாகும். எந்தப் பிரிவினருக்கும் மானியங்கள் நிறுத்தப்படாது என்று கூறிக்கொண்டார்.

;