புதுதில்லி, செப்.22- அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. சர்வதேசச் சந்தையில், அமெரிக்க டாலர் உடனான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு, புத னன்று டாலருக்கு - 79 ரூபாய் 98 காசுகளாக இருந்தது. இது ஒரேநாளில் 76 காசுகள் சரிந்து, வியாழனன்று பிற்பகலில் 80 ரூபாய் 74 காசுகள் அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு இதற்கு முன்பு 80 ரூபாய் 12 காசு கள் அளவிற்கு வீழ்ச்சி கண்டிருந்ததே அதிகபட்ச மாக இருந்தது. தற்போது அதையும் தாண்டி 80 ரூபாய் 74 காசுகள் அளவிற்குச் சென்றுள்ளது. இதன்மூலம் நடப்பாண்டில் மட்டும் டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு 7.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்கப் பெடரல் வங்கி ஆகஸ்ட் மாத பணவீக்கத்தை அடிப்படையாக வைத்துப் புதன்கிழமையன்று தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை (Benchmark Interest Rate) 0.75 சதவிகிதம் உயர்த்தியது. அமெரிக்க பெடரல் வங்கி தொடர்ந்து மூன்றா வது முறையாக வட்டி விகிதத்தை 0.75 சதவிகிதம் உயர்த்தியது,
அமெரிக்க முதலீட்டுச் சந்தையில் எதிரொலிக்கவே, அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் சுமார் 20 வருட உயர்வான 111.72 அளவீட்டை எட்டியது. இது சர்வதேசச் சந்தைகளிலும் எதிரொலித்து, இந்திய ரூபாய் மதிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 3-ஆவது வட்டி விகித உயர்வு மூலம் ஆசியப் பங்குச்சந்தை முழுவதும் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவின் வட்டி விகித உயர்வால் அமெரிக்கப் பங்குச்சந்தையும் 2 சதவிகிதம் வரையில் சரிந்துள்ளது. கச்சா எண்ணெய், தங்கம், வைரம், ஆடைகள், தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், ஆயுதம், உற்பத்திப் பொருட்கள், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்தே அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதுடன், இதற்கான வர்த்தகம் டாலரில்தான் நடைபெறுகிறது. அந்த வகையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இந்திய வர்த்தகர்கள் கூடுதலான தொகையை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது பொருட்களின் விலைகளில் எதிரொலித்து, விலைவாசி உயரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமயமாக்கலை ஏற்றுக்கொண்ட பிறகு, இந்தியா தனது வர்த்தக நடவடிக்கைகளில் டாலர் பயன்பாட்டை அதிகரித்தது. இந்தியாவில் விலைவாசி உயர்வதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது.