மும்பை, மே 17 - பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல்நாளே எல்ஐசி பங்குகள் ரூ. 42 ஆயிரத்து 500 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை (Life Insurance Corporation Of India - LIC) தனியார் முதலாளிகளுக்கு சூறையாடும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் 3.5 சதவிகிதப் பங்குகளை ஆரம்பப் பொதுச்சலுகை (Initial Public Offering - IPO) அடிப்படையில் விற்பதென மோடி அரசு முடிவு செய்தது. அதன்படியே, கடந்த மே 4-ஆம் தேதி தொடங்கி மே 9-ஆம் தேதி தேதிவரை எல்ஐசி பங்குகள் விற்பனையையும் நடத்தியது. எல்ஐசி பங்கு ஒன்றின் விலை 902 ரூபாய் முதல் 949 வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில், 22 கோடியே 30 லட்சம் பங்குகளுக்கு 60 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. இவர்களில் தகுதியானோருக்கு மே 12 ஆம் தேதி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து எல்ஐசி நிறுவனத்தின் 3.5 சதவிகிதப் பங்குகள், செவ்வாயன்று முதன்முறையாக பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்டன. அதாவது எல்ஐசி பங்குகளை வாங்கியவர்கள் மே 17 முதல் அவற்றை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் நடவடிக்கை துவங்கியது. ஆனால், முதலீட்டாளர்கள் வாங்கிய 949 ரூபாய் என்ற விலையைக் காட்டிலும் சுமார் 65 ரூபாய் தள்ளுபடி விலையில் சுமார் 867 ரூபாய் 20 காசுகள் என்ற குறைந்த விலை க்கே எல்ஐசி பங்குகள் பட்டியலிடப்பட்டது. இதன்மூலம் பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்ட முதல் நாளிலேயே எல்ஐசி பங்குகள் 42 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பைச் சந்தித்தது.
எல்ஐசி-யின் ஒட்டுமொத்த பங்குகளின் மதிப்பு முன்பு ரூ. 6 லட்சம் கோடியாக மதிப்பிடப் பட்டிருந்த நிலையில் (உண்மையில் எல்ஐசி நிறுவனத்தின் உட்பொதிக்கப் பட்ட மதிப்பு ரூ. 13 லட்சம் கோடிக்கும் அதிகம் என்ற நிலையில், ரூ. 6 லட்சம் கோடி என்று மதிப்பிட்டதே குறைவு என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது) தற்போது எல்ஐசி பங்குகளின் விலை ரூ. 867 என்ற அளவிற்கே விற்பனைக்கு பட்டிய லிடப்பட்டதன் மூலம் எல்ஐசியின் ஒட்டுமொத்த பங்குகளின் மதிப்பு தற்போது (பங்குச் சந்தை சூதாட்டம் மூலம்) ரூ. 5.57 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், எல்ஐசி பங்குகள் மூலம் லாபம் அடையலாம் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த முதலீட்டாளர்கள், தற்போது கடுமையான ஏமாற்றத்தையும் இழப்பையும் அடைந்துள்ளனர்.
வர்த்தகம் துவங்கி சில நொடிகளில் எல்ஐசி பங்குகள் விலை உயரத் துவங்கினாலும் பெரிய முன்னேற்றமில்லை. எல்ஐசி பங்குகள் 867.20 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்ட பின்பு 5.25 சதவிகிதம் உயர்ந்து 905.30 ரூபாய் வரையில் 38 ரூபாய் அதிகரித்தது. ஒருகட்டத்தில் 918 ரூபாய் வரையில் உயர்ந்தது. எனினும், 949 ரூபாய் என்ற எல்ஐசி பங்குகளின் அடிப்படை விலை யைக் காட்டிலும் சரிவிலேயே இருந்தது. பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள விலை சரிபார்ப்பு காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச் சந்தையில் பல நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை கண்டு வருகின்றன. அப்படிப்பட்ட நேரத்தில் பட்டியலிட்டதால், எல்ஐசி பங்குகளின் விலையும் சரிவைக் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் எல்ஐசி பங்கு களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் பங்குச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை காரணமாக பங்குச் சந்தைகள் நிச்சயமற்ற சூழலைக் கொண்டிருக்கும் நிலையில் எல்ஐசி பங்குகளை பட்டியலிட்டால் அதன் விலை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்த தாகவும், ஆனால், ஒன்றிய அரசு அதனை கணக்கில் கொள்ளவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எல்ஐசி பங்குகளின் இந்த சரிவு சில்லரை முதலீட்டாளர்கள் குறிப்பாக எல்ஐசி ஊழி யர்கள், எல்ஐசி பாலிசிதாரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள அதேநேரத்தில், எல்ஐசியின் 3.5 சதவிகித பங்குகளை அதிகபட்ச விலையான ரூ. 949-க்கு விற்பனை செய்த வகையில் ஒன்றிய அரசு தனது கஜானாவுக்கு 20 ஆயிரத்து 557 கோடியை கொண்டுசென்றுள்ளது.