states

img

லாப வெறியும், புவி வெப்பமயமாதலும் - ப.துளசிநாராயணன்,

பொதுவாக மே மாதம் வெயில் கூடு தலாக இருப்பது இயல்பாக இருந்தது. அதிலும் கோடை மழை பெய்தால், அந்த வெப்பமும் குறையும். இயல்புக்கு மாறாக 2023 ஆம்  வருடம் செப்டம்பர் மாதம் வரை இந்த உஷ்ணத்தின் கொடுமையை நாம் அனு பவித்தோம். இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரம் முதலே வெயில் அதன் கோர முகத்தைக்  காட்டத் துவங்கியது. ஊட்டி மற்றும் கொடைக் கானலில் கூட கம்பளி  ஆடைகள் இல்லாமல் இரவு நேரங்களிலேயும் சாதாரணமாக சுற்றித் திரியக் கூடிய கொடிய நிலையும், கத்திரி மாதத்தில் கூட ரெட் அலர்ட் உடன் மழை பெய்யும் என்ற எச்ச ரிக்கைகளும் ஒருபுறம் நம்மை வியப்படையச் செய்கிறது.  இதைத் தான் “காலநிலை மாற்றம்” (Climate Change), புவி வெப்பமடைதல் (Global Warming ), என்கிற விஞ்ஞான வார்த்தைகளால் வர்ணிக்கப்படுகிறது. நாம் வாழும் இந்த  பூமி ஏன் இந்தளவிற்கு வெப்பமடைந்தது? சூரியனின் வெப்பம் கூடுதலாகி விட்டதா? ஏன் கூடுதலானது? இப்படி பல கேள்விகள் நம்மை சுற்றி வட்டமிடு கின்றன சூரியன் கூடுதல் வெப்பம் அடைய வில்லை என விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தி விட்டனர். மனித சமூகத்தால்  உருவாக்கப்படும் பசுங்குடில் வாயுக்கள் (Green house gases - கார்பன் டை ஆக்சைடு -Co2,  மீத்தேன் -CH4,   நைட்ரஸ் ஆக்ஸைடு N2o,  ஹைட்ரோ ஃப்ளோ ரோ கார்பன்ஸ் -HFC,  சல்பர் ஹெக்ஸா ஃப்ளோரைட் - SF6,  நைட்ரஜன் ட்ரை  ஃப்ளோரைட் -NF3), எல்லை மீறி 20 விழுக்காடு உயர்ந்து விட்டதால் இவை பூமிப் பந்தின் மீது ஒரு விரிப்பை போர்த்தியதை போல் உலா  வருவதால் இந்த கொடிய வாயுக்கள் விண் வெளிக்கு போக விடாமல் தடுக்கப்படு கின்றன. இதனால் இந்த உஷ்ண மற்றும் ரசா யன வாயுக்களால் பூமி மேலும் வெப்பமடை கிறது. மேலும் பூமிக்கும் சூரியனுக்கும் இடை யில் ஒரு வடிகட்டி (ஃபில்டர்) உள்ளது.  இதுதான் ஓசோன்  படலம் என அழைக்கப்படு கிறது. இதன் பிரதான பணி சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்களில் இருந்து (Ultra violet Rays) பூமியை பாதுகாப்பது. இது பலவீனமடைந்ததால் சூரியனிலிருந்து வரும்  உஷ்ணக் கதிர்கள் முறையாக வடிகட்டப் படாமல் பூமியை நோக்கி வருகின்றன.

ஏன் ஓசோன் படலம் பலவீனமடைந்தது?

ஏ.சி மற்றும் ரெஃப்ரிஜிரேட்டர் போன்ற குளிர்சாதனங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட சிஎஃப்சி (CFC-Chloro fluoro ), வாயுக்களால் சேதமடைந்தது. மேலும் உயிரினங்கள் வாழ ஆக்சிஜன் (பிராண வாயு), எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஓசோன் படலம் பலமாக இருக்க ஆக்சிஜன் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. இந்த ஆக்சிஜன் எங்கிருந்து கிடைக்கிறது? இந்த உலகிற்கு தேவையான பிராணவாயு வில் சரி பாதி கடலில் இருந்து தான் கிடைக்கிறது. மேலும் மரம், கொடி, செடிகளில் இருந்து கிடைக்கிறது. ஆகவே கடல் அளவும்,அதன் குணமும் குறையாமல் பாதுகாக்கப்பட வேண் டும். அதேபோல் மரங்களும், தாவரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதனுக்கும் மரங்களுக்கும் இடையே உள்ள பிரதான வேறு பாடு வியப்பிற்குரியது. மனிதன் பிராண வாயுவை சுவாசித்து கரியமில வாயுவை (Co2) வெளியிடுகிறான். மரம் இந்த கரியமில வாயுவை சுவாசித்து பிராண வாயுவை பூமியில் வாழும் உயிரினங்களுக்கு தானமாய் வழங்குகிறது. ஆகவே தான்  கடலும், மரங்களும், நீடூழி வாழ வேண்டும். அவை வாழ வேண்டும் எனில் ஓடைகளும், கால்வாய்களும், குளங்களும், குட்டைகளும், ஏரிகளும், ஆறுகளும் தடைப் படாமல் ஜீவிக்க வேண்டும். ஆகவேதான் நீரை “கங்கை” என்கிற கடவுள் பெயரால் அழைத்தான் கிராமத்து சாமானியன். கடலை  “கடல் தாய்” என அழைத்தான் மீனவ தோழன்.  மரங்களை தாங்கி பிடித்துள்ள வனங்களை “வன தேவதை”, “சடாமுடி” என தெய்வங் களுக்கு சமமாய் நேசித்தான் ஆதிவாசி.பூமியை பூதேவி என அழைத்தான் விவசாயி. இரண்டு மரங்களை நட்டு, வளர்க்காத  எவனுக்கும்,  ஒரு மரத்தை வெட்டும் தகுதி இல்லை என்கிற அறத்தை முதலாளித்துவ சமூகம் மறந்துவிட்டது.

நீர் நிலைகள் அழிப்பு

மனிதக் கழிவுகளை, தொழிற்சாலைக் கழிவு களை மறுசுழற்சி செய்து நாமே பயன்படுத்த லாம். கடலில் கலப்பதால் நமது நிலத்தின் மீதான உயிரின பன்மயம் (Bio diversity), குறைந்து பல பகுதிகள் செத்த பகுதிகள் (Dead Zones) என அறிவிக்கப்பட்டுள்ளன. இது போன்ற செத்த பகுதிகளின் (சக்தியை இழந்த நில பகுதிகள்),  பரப்பு இன்று 2,45,000  சதுர கிலோ மீட்ட ருக்கு மேல் இருக்கும். இந்த கழிவுகள் அள வுக்கு மீறி கடலில் கலந்ததால் கடல் சார்ந்த இயற்கையின் கூறுகளாக விளங்கும் கடல் புல்வெளி,  சதுப்பு நிலக்காடுகள்,  பவளப்பாறை கள் (Coral reefs),  35 விழுக்காடு முற்றிலு மாக அழித்து ஒழிக்கப்பட்டது. 1980-2005 கால கட்டத்தில் 30,000 ச.கி.மீ  பரப்பளவு சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்பட்டன. 2100 ஆம் ஆண்டுக்குள் கடல் வாழ் உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அழியும் என அஞ்சப்படுகிறது. இந்த பூ உலகிற்கு தேவை யான பிராணவாயுவை சரிபாதி தரும் கடலை சுரண்டும் வர்க்கம் எப்படி எல்லாம் அழித்து,  மேலும் எப்படி எல்லாம் அழித்துக் கொண்டி ருக்கிறது. இந்த நிஜ செய்திக்கு செவிதர மறுக்கிறது அதிகார வர்க்கம்! காடுகள் அழிப்பு நமது பூமிக்கு எமனாக மாறி அச்சுறுத்தி வரும் கார்பன் டை ஆக்சைட் (CO2),  மற்றும்  பசுமை குடில் வாயுக்களை பரவ விடாமல் தானே சுவாசித்து உலகிற்கு பிராண வாயுவை  தரும் காடுகள் ஈவிரக்கமின்றி வெட்டப்படுவது கொலை குற்றத்தை விட கொடூரமானது. 2000 ஆவது வருடம் முதல் 2012 வரையிலான 12  வருட இடைவெளியில் மட்டும் 568 மில்லியன் ஏக்கர்  காடுகள் அழிக்கப்பட்டன. 2019 மட்டும் 1,21,000 சதுர கிலோமீட்டர் பரப்பிலான மரங்கள் வெட்டப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும்  5,02,000  ச.கி.மீ  பரப்பிலான காடுகள் அழிக்கப் பட்டன. இவைகளை அழித்து தான் கனிம  வளங்களைக் கொள்ளை அடிக்க முதலாளி களுக்கு வழி வகையை ஏற்படுத்தப்பட்டன.  சிலரின் லாபம் பெருக்க,  பலரின் மூச்சுக்காற்றை அடைத்து சாகடிப்பதைக் குற்ற மாகப் பார்க்க ஆளும் வர்க்கமும், அதிகார பலமும் மறுத்து வருகிறது.

மார்க்சின் கருத்து நிஜமானது

மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள  உறவை வளர்சிதை மாற்றமாக (Metabolism), வர்ணித்த காரல் மார்க்ஸ், இதில் மூல தனம் ஒரு பிளவை (Metabolic rift)  ஏற்படுத்துவ தாகவும் கணித்தார். இது பொருள் ரீதியாக வும், இட ரீதியாகவும், கால ரீதியாகவும் செயல் படுகிறது என்றும், இதனால் மூலதனத்திற்கு எல்லைக்குட்பட்ட இயற்கை வளங்களை சுரண்டுவது ஒரு வழி பாதையாகிறது என 150 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தார். அவர் எச்சரித்ததைப் போலவே புவியில் உள்ள உயிரினங்கள் மற்றும் வளங்கள் வரை யறைக்கு உட்பட்டவை. அவற்றை வரைமுறை இன்றி எடுத்துக் கொண்டால் நமது இருப்பையே தகர்த்திடும். இந்த வரைமுறையை தாண்டி கடந்த 250 ஆண்டுகளாக இயற்கை வளங்களை சுரண்டியதால், இந்த பூமியின் மீது பெரும்  தாக்குதலை ஏற்படுத்தி உள்ளது என்றும் இதனால் 1.1 செல்சியஸ் வெப்பம் கூடுதலாகி உள்ளது என்றும் 2017 நவம்பர் 6 முதல் 18 வரை  ஜெர்மன் நாட்டின் பான் (Bonn),  நகரில் நடை பெற்ற மாநாட்டில் 184 நாடுகளை சேர்ந்த 20,000 அறிவியலாளர்கள் மார்க்ஸின் கருத்தை ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.

விளைவுகள் 

இப்படி பூமி வெப்பமடைந்ததால் வறட்சி,  வெள்ளம், புயல், மின்னல், கடுமையான வெயில், குளிர் என இயற்கைச் சீற்றங்கள் பிரபஞ்சம் முழுவதும் தொடர்ந்து அதி கரிக்கவே செய்தன. 1998 முதல் 2017 கால கட்டத்தில் மட்டும் 440 கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 13 லட்சம் மக்கள் மரணம் அடைந்த னர். இந்த சீற்றங்களில் 43.4 விழுக்காடு வெள்ள மும், 28.2 விழுக்காடு புயல்,  563 நிலநடுக்கங் களும் - சுனாமி அலைகளும் என 7,47,234 மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது.  இந்தியாவில் மட்டும் 1953-2017  கால கட்டத்தில் 1,07,487  பேர் புயல் வெள்ளத்தால் இறந்ததாகவும், 3,65,860 கோடி ரூபாய்  மதிப்பிலான இழப்புக்கள் ஏற்பட்டுள்ள தாகவும் இந்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோக கடும் குளிருக்கும் வெயிலுக்கும் பலியானவர்களின் கணக்கு தனியாக உள்ளது. இந்தியாவில் மட்டும் கடும் குளிருக்கு 2011 இல் 722 பேரும் 2023இல் 162 பேரும் பலியாகியுள்ளனர். கோடைகாலத்தில் கடும் வெப்பம், குளிர்காலத்தில் கடும் குளிர்,  மழை காலத்தில் குறுகிய காலத்தில் கனமழை  என கால நிலை மாற்றம் அதன் கோர முகத்தை காட்டுகிறது. இதனால் இந்தியாவில் பாசன வசதியே இல்லாமல் வானம் பார்த்த பூமியாக 52 விழுக்காடு உள்ளது.  1950-2012 இடைப்பட்ட காலத்தில் கால்வாய்  பாசனத்தின் பங்கு 39 விழுக்காட்டிலிருந்து 23 விழுக்காடாக குறைந்துள்ளது. நிலத்தடி நீர் பாசனத்தின் பங்கு 28.7 விழுக்காடு இருந்து 62.4 விழுக்காடாக உயர்ந்துள்ளதும் ஆபத்தான அம்சமே! இதன் பொருள் பூமிக்கு மேல் உள்ள நீர் நிலைகளை அழித்து மூலதனம் பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரையும் தேடிச் செல்கிறது. பூமியின் மேல் பரப்பில் ஈரப்பதத்தை இல்லாமல் ஆக்கிவிட்டு மனிதன் பூமியின் அடி பாகத்தையும் அதே நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறான். உலகின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி  செல்சியஸ் உயர்ந்தால் கோதுமை 46 விழுக்காடு, நெல் 19 விழுக்காடு, மக்காச்சோளம் 31 விழுக்காடு விளைச்சல் குறையும் என்கிற எச்சரிக்கைகள் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. வேளாண்மையில் ஏற்படும் நட்டம் என்பது விவசாயிகளுக்கு மட்டும் ஏற்படும் நட்டமாகப் பார்ப்பது முட்டாள்தனமின்றி வேறில்லை. அது அந்த தேசத்தின் உணவுப் பாதுகாப்பு மீது ஏற்படும் தாக்குதலாகும்.

இனியும் தாமதமின்றி உலகம் கவனம் செலுத்த வேண்டியது

*     காடுகளை பாதுகாப்பது, வளர்ப்பது 
*     மரங்களை பாதுகாப்பது வளர்ப்பது.
*     நீர் நிலைகளை உருவாக்குவது பாது காப்பது.
*     சூரிய சக்தி மின்சாரம், உயிர்த்திறன் மின்சாரம் (Biomass energy), காற்றாலை மின்சாரம், உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்துவது, அனல் மின்சார உற்பத்தியிலிருந்து மெல்ல விலகுவது.
*    பொது போக்குவரத்தை கூடுதலாக்குவது.
*    மறு சுழற்சி மற்றும் மறு பயன்பாட்டை பலப்படுத்துவது 
*    தொழிற்சாலைகள், கல்லூரிகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், ஹோட்டல்களில் சுத்திகரிப்பு நிலையங்களை (Effluent Treatment Plants), கட்டாயமாக்குவது மற்றும் 30 விழுக்காடு நிலபரப்பை பசுமை பகுதிகளுக்குகட்டாயமாக்குவது.
*    உற்பத்தி  தேவைக்கு உட்பட்டதாகவும், வளர்ச்சி எல்லைக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும்... போன்ற அம்சங்களை நோக்கி மானுட சமூகம் நகர வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
“சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் 

அறத்தினூ உங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு...” என்பது திருக்குறள். சிறப்பையும் செல்வத்தையும் ஒருங்கே அளிக்கின்ற அறத்தை விட உயிர்களுக்கு நன்மை தருவது வேறெதுவாக இருக்க முடியும்?


 

;