புதுதில்லி,டிச.17- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8-ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள் ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது. பிபின் ராவத் உயிரிழந்ததையடுத்து முப்படை தலைமை தளபதி பதவி காலியாகி விட்டது. அதையடுத்து புதிய முப்படை தளபதியை தேர்வு செய்யும் பணியில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், முப்படை தளபதி கள் குழுவின் தலைவராக ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி தேர்வு செய்யப்படும் வரை குழுவின் தலைவராக நரவானே செயல்படுவார் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிபின் ராவத் மறைவால் இடைக்கால ஏற்பாடாக ஒன்றிய அரசு இந்த நடவ டிக்கை எடுத்துள்ளது. முப்படை தளபதி களில் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.