states

img

நிலவொளிப் பள்ளி - ஓர் அணையா தீபம்!

“கல்வி கற்க வயது தடையில்லை. கற்கையில் கசப்பு, கற்றபின் இனிப்பு” இது கல்வி பற்றிய ஒரு பழமொழி யாகும். இளம் வயதில் கல்வி வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். வரலாற்றுச் சிறப்புகளை கொண்டது காஞ்சி மாநகரம். அது கோவில் நகரம் மட்டுமல்ல. பட்டுச் சேலை உற்பத்திக்கும் உலகப் பிரசித்தி பெற்றது. இன்றல்ல, நேற்றல்ல, பல்லாண்டு காலமாக  முதியவர்கள் முதல் சிறுவர், சிறுமியர் வரை கைத்தறிப் பட்டு நெசவுத் தொழிலில் குடும்பம் குடும்பமாக  ஈடுபட்டு வருகிறார்கள்.

ரத்தமும் சதையும்...

‘ஆடையில்லா மனிதன் அரை மனிதன்’ என்பது முதுமொழி. காஞ்சிபுரம் பட்டுச் சேலைக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே புவிசார்  குறியீடு வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், கைத்தறிக்குப் போட்டியாக பட்டு ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதன் தாக்கம், ஒன்றிய பாஜக அரசின் நாச கரப் பொருளாதாரக் கொள்கையின் விளைவு, நூல் விலை ஏற்றம், கச்சா பொருட்கள் விலை உயர்வு என ஏராளமான நெருக்கடிகளை சந்தித்தும் இன்னும் அந்தத் தொழில் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்றால், அதற்கு ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும் உடல் உழைப்பும் காரணமாகும்.

அறிவொளி தீபம் !

1995களில் ‘அறிவொளி இயக்கம்’அறிமுக மானது. இதை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைத்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பொதுத்துறை, கூட்டுறவுத் துறை நிறுவனங்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாதர்கள் என்று பலரும் பெரும் பங்களிப்பை செய்து வந்தனர். அறிவொளி நாடகங்கள், பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தி எழுச்சி பெற்றது. இதற்கு காரணம், கிராமங்கள் துவங்கி நகர்ப்புறங்கள் வரை அறிவொளி தொண்டர்கள் துடிப்புடன் பணியாற்றி வந்தனர். இவர்களுடன் பல மாவட்ட ஆட்சியர்கள் அறிவொளித்  தொண்டர்கள் போல் துடிப்புடன் செயல்பட்டனர். புதுக்கோட்டையில் துவங்கிய அறிவொளி இயக்கத்தின் தாக்கம் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, குமரி, வேலூர், காஞ்சி புரம் மாவட்டங்களில் எழுத்தறிவு விகிதத்தில் பெரும் அளவு அதிகரித்தது என்றால் அது மிகையல்ல.

வாராத மாமணியாய்...

மறுபக்கம், அன்றைக்கு காஞ்சிபுரம் மாநக ரம் முழுவதும் பரவியிருந்த குழந்தைத் தொழி லாளர் முறை. ஒப்பந்த முறையில் பணம் வாங்கிக் கொண்டு குழந்தைகளை நெசவுத்தறி செய்யும் பட்டறைக்கு வேலைக்கு அனுப்பி வைக்கும் அவலம். கல்வி கற்பதற்கு ஆர்வம் இருந்தும் மாணவர்களும் தறிக் கூடங்களில் நெசவு நூல்கள் பிடித்துக் கொண்டிருந்தது  அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிகழ்வுகள் இன்றும் நிழலாடுகிறது. 16.7.1997 முதல் 18.5.1999 வரை காஞ்சி புரம் மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றி னார் வெ.இறையன்பு.  ஒரு நாள், இந்த குழந்தைத் தொழிலாளர் முறை குறித்தும் குழந்தைகளை கொத்தடிமை களாக நெசவுப் பட்டறையில் வேலை வாங்கி வருவதும் ஆட்சியர் இறையன்பு கவனத்துக்கு வந்தது. அடுத்த சில நாட்களில் அவர் களத்தில் இறங்கினார். பள்ளிப் பாட நூல்களைப் படிக்க  வேண்டிய வயதில் பிணைக் கைதிகளாக வேலை பார்த்து வந்த குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுத்தார். அதிகாரிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், செய்தியாளர்கள் உட்பட பலரும் துணை இருந் தார்கள். மீட்டெடுத்த குழந்தைகளை மீண்டும் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பினர். ஊக்கத் தொகையுடன் படிக்க வைத்தார். பெற்றோரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஆதரவு கொடுத்தன. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த கட்டமாக, படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் பாதியில் படிப்பை நிறுத்தியவர்கள், தறிப் பட்டறை மற்றும் புகழ்பெற்ற அப்பளத் தொழிலில் வேலை செய்யும் இளைஞர்கள் குறித்து காஞ்சிபுரம் மாநகரம் முழுவதும் நடத்திய கணக்கெடுப்பு மேலும் அதிர்ச்சியைத் தந்தது.

கல்வி வெளிச்சம்...

படிப்பதற்கு ஆர்வம் இருந்தும் குடும்பச் சூழல், வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங் களால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் சூழ்நிலை ‘கைதிகளாக’ இருப்பதும் தெரிய வந்ததால், அனைவரும் கல்வி கற்க வேண்டும் எண்ணத்தில் அன்றைக்கு ஆட்சியர் இறை யன்பு மனதில் உதித்தது தான் ‘நிலவொளிப் பள்ளி’. முதன் முதலாக, அந்தப் பள்ளியை துவங்க தேர்வு செய்த பகுதி பிள்ளையார்பாளையம். இது நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி யாகும். அங்குள்ள சி.எஸ்.எம். அரசு பள்ளி யில், 180 குழந்தைகளுடன் 23.1.1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது நிலவொளிப் பள்ளி. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பட்டுத்தறி, அப்பளத் தொழிற்சாலை களில் வேலை செய்து வந்ததால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் பள்ளிக்குச் செல்ல முடியாதவர்கள், குழந்தைத் தொழிலாளர்களாக இருந்தவர்களை ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னி ரண்டாம் வகுப்பு என வகைப்படுத்தி  தினமும் மாலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை  பாடம் நடத்தப்படுகிறது. இதற்கு தேவையான நிதியை நன்கொடையாளர்கள் தாராளமாக வழங்கினர். படித்த பட்டதாரி இளைஞர்கள், தன்னார்வத் தொண்டர்கள், அறிவியல் இயக்கம் மற்றும் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றிய தொண்டர்கள், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் என பலரும் மிக மிகக் குறைந்த ஊதியத்தில்  பாடம் நடத்தி வருகிறார்கள். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் பாடங்கள் நடத்துவது மட்டுமல்ல வழிகாட்டிகளாகவும் செயல்பட்டு வருகிறார்கள். மாணவர்கள் சுயமாகத் தேடி பலதையும் படிப்பதற்கு உதவி  செய்கிறார்கள். தங்களுக்கு ஏற்படும் சந்தேகம் குறித்து அடிக்கடி விளக்கமும்பெறுகிறார்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப விடுமுறையும் விடப்பட்டது.

சிறப்பு அனுமதி... விரிவடையும் பள்ளிகள்...

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் அரசு பள்ளிக் கட்டடத்தில் இரவு நேரத்தில் மட்டும் பாடம் நடத்தப்படும் இந்த நிலவொளிப் பள்ளி  முறையை அரசும் கல்வித் துறையும் ஏற்றுக் கொண்டதுடன் சிறப்பு அனுமதி வழங்கி வழக்க மாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் தேர்வு எழுதும் அனுமதி கொடுத்துள்ளது. இதன் விளைவு! ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அன்றைக்கு பிள்ளையார் பாளையத்தில் ஏற்றிய கல்வி ஒளி தீபம், சின்ன காஞ்சிபுரம் முதல் 22 இடங்களில் இந்தப் பள்ளி தொடங்க வித்திட்டது. ஒவ்வொரு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை மட்டுமல்ல அரசு பொது தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தறித் தொழில் செய்பவர்கள் மட்டுமல்ல, அப்பளத் தொழிலில் ஈடுபட்டு நொறுங்கிப் போனவர்களின் கல்வியையும் சீரமைக்க முடிந்தது. ஆட்சியர்கள் பிரதீப் யாதவ், சந்தோஷ் கே. மிஸ்ரா, ஆஷிஷ் சட்டர்ஜி, கஜலட்சுமி, பொன்னையா, மகேஸ்வரி, ஆர்த்தி, கலைச் செல்வி ஆகியோர் நிலவொளிப் பள்ளிகளை முனைப்புடன் செயல்படுத்தினர். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த நிலவொளிப் பள்ளியில் சேர்வதற்கு தகுதி பெற்றனர். 8 முதல்  12 ஆம் வகுப்பு வரைக்கும் பாடம் நடத்தப்படு கிறது. புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படு கிறது. பொதுத் தேர்வுக்கான கட்டணத்திலும் விலக்களிக்கப்பட்டுள்ளது. 1998 முதல் 2023 வரை 14,553 ஆண்களும், 6,177 பெண்களும், மொத்தம் 20,730  உழைக்கும் தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.

கொரோனாவுக்குப்பின் புத்துயிர்

இடையில் ஆரம்பக் கல்வி திட்டத்தால் நிலவொளிப் பள்ளியின் தேவை குறைந்தது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றது. இப்பள்ளியில், படித்த 47 நபர்கள் தமிழ்நாடு அரசின் தேர்வாணையத் தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். மேலும், 3 கற்போர் தமிழ்நாடு அரசில் பிரிவு அலுவலர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஏழை நெசவாளிக் குடும்பத்தில் பிறந்து  ஓரத்தில் முடங்கிக் கிடந்த பிள்ளைகளுக்கு வெ.இறையன்பு அவர்கள் ஏற்றி வைத்த கல்வி ஒளி, படர ஆரம்பித்து கல்லாமை என்ற  இருளை விரட்டி பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டி ருக்கிறது. அவரது வழிகாட்டுதலில் நிலவொளிப் பள்ளி மாணவர்களில் பலர் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளனர். அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பலரை அரசு அதிகாரிகளாக மாற்றி இருக்கிறது. சிலர் உயர் அதிகாரிகளாக வும் பணியாற்றி வருகின்றனர்.

பாராட்டுவிழா

இரவு நேரத்தில் கல்வி ஒளி வீசியதால் வாழ்க்கையில் சாதித்துக் காட்டியவர்கள் எல்லோரும் சமீபத்தில் ஒன்று கூடி தங்களது வழிகாட்டிக்கு பாராட்டு விழா எடுத்தார்கள். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், இன்றும் அந்தப் பள்ளிக்கு தன்னால் முடிந்த  உதவிகளை செய்வதுடன் பள்ளி மாணவர் களுடன் தொடர்பிலும் இருந்து வரும்  இறை யன்பு, மாணவர்களின் அன்பை நினைத்து மனம் நெகிழ்ந்தார். தணியாத ஆர்வம் ஏற்பட்டால் படிப்பை  நிறுத்த முடியாது என்பதற்கு இந்த நில வொளிப் பள்ளி மாணவர்கள் உதாரணமாக திகழ்கிறார்கள். வேலை செய்து வந்தாலும் படிப்பை நிறுத்தவில்லை. சிலர் தன்னம்பிக்கை யுடன் வெற்றி பெற்று வருகிறார்கள்.

- சி.ஸ்ரீராமுலு







 

;