states

img

வீரமங்கை ஷாஜாதி வழி நடப்போம்! - எஸ்.வாலண்டினா

வீரமங்கை ஷாஜாதி வழி நடப்போம்!

நெல்லிக்குப்பம் ஷாஜாதி என்ற பெயர் கடலூர் மாவட்டத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும். அடக்குமுறைகளை எதிர்த்து அஞ்சா நெஞ்சுடன் போராடிய பெண்ணுரிமை போராளி.  போராட்ட களங்களில் ....  1944-ல் சென்னையில் நடைபெற்ற இந்திய மாதர் சம்மேளன மாநாட்டில் பங்கேற்று அரசியல் ஆர்வம் பெற்றார். 1946-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1949-ல் கல்கத்தா சமாதான மாநாட்டில் கலந்துகொண்ட பின் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.  ரயில் மறியல் போராட்டத்தில் ஷாஜாதியின் தலைமை குறிப்பிடத்தக்கது. காவல்துறை குழப்பத்தில் இருந்தபோது, சரியான நேரத்தில் சிக்னல் கொடுத்து 150க்கு மேற்பட்ட பெண்களுடன் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார்.  சிறைச்சாலையில் உண்ணாவிரதம்  1949-ல் வளவனூரில் கைது செய்யப்பட்டு கடலூர் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். பெண் கைதிகளுக்கு தனி குளியல் அறை இல்லாததை எதிர்த்து உண்ணாவிரதம் தொடங்கினார். 14வது நாளில் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 16வது நாளில் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு பெண் கைதிகளுக்கு தனி குளியல் அறை கட்டப்பட்டது.  குடும்பத்தினர் “முஸ்லிம் பெண் சிறையில் இருப்பது களங்கம்” என்று கூறியபோது, “கட்சி வழியிலேயே செல்வேன்” என்று உறுதியாக கூறினார்.  அமைப்பு பணிகள்  1973-ல் திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கும் கூட்டத்தில் அமைப்பு தலைவராக பணியாற்றினார். 1981-ல் சென்னையில் நடைபெற்ற மாதர் சங்கத்தின் முதல் அகில இந்திய மாநாட்டில் தலைமைக் குழுவில் இடம்பெற்றார்.  வேலூர் சிறையிலும் தொடர்ந்த போராட்டம்  வேலூர் பெண்கள் சிறையில் மணலூர் மணியம்மாள், ஆந்திராவைச் சேர்ந்த சூர்யாவதி, பத்மாவதி போன்ற தோழர்களுடன் சேர்ந்து சிறைக்குள்ளும் போராட்டங்களை நடத்தினார். தண்டனை பெற்ற பெண் கைதிகளுக்கு ஆறுதல் சொல்வது, அவர்களது குழந்தைகளுக்கு முறையான உணவு வழங்குவது போன்ற சேவைகளில் ஈடுபட்டார். சிறை அமைச்சர் மாதவமேனன் பார்வையிட வந்தபோது, பெண் சிசுக்களின் மர ணத்தைத் தடுக்க மருத்துவ வசதி கோரி வற்புறுத்தி நிறைவேற்றினார்.  திருமணமும் தொடர் போராட்டமும்  சிறையிலிருந்து விடுதலையான பின் மத வேறுபாடுகளை மீறி கோவிந்தராஜனை மணந்து 56 ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை வாழ்ந்தார். 2004 வரை பெண்களின் உரிமைகளுக்காகவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் களப்பணியாற்றினார். மார்க்சிய இயக்கத்தின் மகத்துவமிக்க புதல்வி.