states

‘அருந்ததி ராய் மீதான வழக்கை கைவிடுக!’

தமுஎகச  மாநிலக் குழு கூட்டம் பட்டுக் கோட்டையில் ஜூன் 15,16 தேதிகளில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு: திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை நம்பிக்கை நகரைச்  சேர்ந்த மதன் குமார், பெருமாள் புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி ஆகியோர் காதலித்து சாதி மறுப்பு திரு மணமும் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு சாதி ஆதிக்க எண்ணம்  கொண்டவர்கள் எதிர்ப்பு  தெரிவித்ததோடு காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு  அலுவலகத்தின் மீதும் ஊழி யர்கள் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தி யுள்ளனர். அதுவும் காவல்துறையைச் சேர்ந்த  காவலர்கள் கண் முன்னாலேயே இது நடந் திருப்பதை தமுஎகச வன்மையாகக்கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட வன்முறையாளர்களில் சிலர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் முக்கிய குற்றவாளிகளையும் கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறது. மேலும் சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.

அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு

எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான  அருந்ததிராய் 14 ஆண்டுகளுக்கு முன் ஒரு கருத்தரங்கில் பேசியதற்கு இப்போது அவர் மீது உபா (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தலைநகர் தில்லிப் பிரதேச துணைநிலை ஆளுநர் வி. கே. சக்சேனாவின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் நோக்கம் கொண்டது. எனவே அருந்ததிராய் மீதும் காஷ்மீரை சேர்ந்த கல்வியாளர் ஷேக் சௌகத் உசேன் மீதும் வழக்குப் பதிவு செய்வதைக் கைவிட வேண்டும். ஆபிரகாம் பண்டிதருக்கு மணிமண்டபம் இசைத்தமிழ் வல்லுநர், சித்தமருத்துவத்தை வேறொரு  தளத்திற்குக் கொண்டு சென்றவர் என பன்முக ஆளுமையாக விளங்கியவர் ஆபிரகாம் பண்டிதர். அவரது கருணாமிர்த சாகரம் என்று இசைத்தமிழ் நூல் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஆபிரகாம் பண்டிதர் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த தஞ்சாவூரில் அவருக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து சிறப்பு செய்ய வேண்டும்.

திருவையாற்றில் நாகரத்தினம்மாளுக்கு சிலை அமைத்திடுக!

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராயரின் சீடர்களில் ஒருவராக விளங்கியவர் பெங்களூரு நாகரத்தினம்மாள். தியாகராயரின் சமாதியை நினைவாலயமாக உருவாக்கிய பெருமையும் இவருக்கு உரியது. தேவதாசி மரபில்  வந்தவராகக் கருதப்படுகின்ற  நாகரத்தினம்மா ளுக்கு திருவையாற்றில் தமிழக அரசு  சிலை அமைத்து அல்லது மணிமண்டபம் எழுப்பி சிறப்பு செய்ய வேண்டும். பலவீனமடையும் சரஸ்வதி மகால் ஆசியாவிலேயே மிகப் பழமையான தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் நிதி இன்மையால்  பலவீனம் அடைந்து வருகிறது. தேச ஒருமைப்பாட்டின் அடையாளம் போல் இங்கு பலமொழிகளின் நூல்கள் உள்ளன. இவற்றின் பராமரிப்புக்கும், ஊழியர்கள் நியமனத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவையான நிதியைத் தமிழக அரசு ஒதுக்கி நூலகத்தைப் பாதுகாக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும். சமூக வாழ்வியலையும், புராண திரிபுகளை மறுவாசிப்பு செய்தும் பல படைப்புகளை உருவாக்கியவர் சோலை சுந்தரபெருமாள். அவரது படைப்புகளை தமிழக அரசு நாட்டுடமை யாக்க முன்வர வேண்டும். தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்பு மூன்றாம் பருவத்திற்கான பொதுத் தமிழ் பாடநூலில் வரலாறு என்ற பெயரில்  மதப் பாகுபாட்டைத்  தூண்டும் வகையில் இடம் பெற்றுள்ள இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துக்களை மாநில அரசின் உயர்கல்வித் துறை மறுபரிசீலனை செய்து நீக்க வேண்டும். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் உள்ளாறு  பகுதியில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படை யாகக் கொண்டு இங்கு தொல்பொருள் ஆய்வு மேற்கொண்டால் அதில் வரலாற்றுத் தரவுகள் கிடைக்கக்கூடும். இதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 

;