states

img

அஞ்சலக சிறு சேமிப்புக் கணக்குகளில் கடும் சரிவு!

புதுதில்லி, டிச. 16 -  2018-2019 நிதியாண்டிலிருந்து புதிதாக சிறுசேமிப்புக் கணக்கு துவங்குவது பெரிய அளவிற்கு குறைந்து வருவதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு, ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘’நாட்டில் கடந்த 2018-19ஆம் ஆண்டிலிருந்து புதிதாக சிறுசேமிப்புக் கணக்கு துவங்குவது குறைந்து வருகிறது. 2018-19 நிதியாண்டில் 4 கோடியே 66 லட்சம் புதிய சிறுசேமிப்புக் கணக்குகள் துவங்கப்பட்டன. 2019-20ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4 கோடியே 19 லட்சம் கணக்குகளாக குறைந்தது. 2020-21ஆம் ஆண்டில் இது மேலும் குறைந்து 4 கோடியே 11 லட்சம் சிறு சேமிப்புக் கணக்குகளாக சரிந்துள்ளது. மூத்த குடிமக்கள் துவங்கும் சிறுசேமிப்புக் கணக்குகளும் குறைந்து வருகின்றன.

முதியோருக்கான சிறுசேமிப்பு வங்கிக் கணக்குகளைப் பொறுத்தவரை, கடந்த 2018-19 நிதியாண்டில் 12 லட்சத்து 60 ஆயிரமாக இருந்த சேமிப்புக் கணக்குகள், 2019-20ஆம் நிதியாண்டில் 12 லட்சத்து 20 ஆயிரமாகக் குறைந்துள்ளது. 2020-21 நிதியாண்டில் அது மேலும் குறைந்து, 11 லட்சத்து 40 ஆயிரம் கணக்குகளாகி உள்ளது. அஞ்சல் நிலையங்களில் துவங்கப்படும் சேமிப்புக் கணக்குகளும் குறைந்து வருகிறது. 2021-22 நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை ஒட்டுமொத்தமாக 2 கோடியே 33 லட்சம் சிறுசேமிப்புக் கணக்குகள்தான் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய சேமிப்புப் பத்திரம், பிபிஎப், கிசான் விகாஸ் பத்திரம், சுகன்யா சம்ரிதி திட்டம் உள்ளிட்ட 12 சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இதற்கான வட்டி காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.’’ இவ்வாறு நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

;