அக். 2, 3 கோவையில் மாநில மாநாடு
தனியார் வசம் இருந்த மதுக்கடைகளை டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்துவது என தமிழக அரசு முடிவு செய்து 29.11.2003ஆம் தேதியிலிருந்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது. முன்மாதிரி நிறுவனமாக செயல்பட வேண்டிய டாஸ்மாக் நிறுவனத்தில் சட்டப்பாதுகாப்பற்ற ஊழியர்களின் பணி நிலைமைக்கு எதிராக ஒன்று திரண்ட ஊழியர்களால் 2006ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2ஆம் தேதி சென்னையில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் என்கிற தொழிற்சங்க அமைப்பு உருவாக்கப்பட்டது. பணிவரன்முறை, காலமுறை ஊதியம், 8 மணி நேர வேலை, வாரவிடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
டாஸ்மாக் நிர்வாகம் குறைந்தபட்ச ஊதியம், வாரவிடுமுறைக்கான இரட்டிப்பு சம்பளம், தேசிய-பண்டிகை விடுமுறை நாட்களுக்கான இரட்டிப்பு சம்பளம், மிகை நேரத்திற்கான இரட்டிப்பு சம்பளம் வழங்காததை எதிர்த்து சென்னை தொழிலாளர் நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் டாஸ்மாக் நிர்வாகம் சட்டப்படி செயல்படவில்லை என்பது நிரூபணமானது. இந்த மனுக்கள் மீதான இறுதி உத்தரவுகளில் நீதிமன்றம் ரூ.2,29,000 முதல் ரூ.4,00,000 வரையில் வழங்க நிர்வாகத்திற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. மனுதாக்கல் செய்தவர்கள் மட்டுமல்ல, மற்ற ஊழியர்களும் இதே பணியின் நிலையில் பணிபுரிந்துள்ளதால் அவர்களுக்கும் அரியர்ஸ் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த ஊழியர்கள் உழைத்த உழைப்புக்கு அரசு நிறுவனமான டாஸ்மாக் ரூ. 1200 கோடி வரை அரியர்ஸ் கொடுத்திருக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு பிறகாவது சட்டங்களை அமல்படுத்தியிருக்க வேண்டும். மாறாக இன்று வரை தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தாமல் உள்ளது.
லஞ்சத்தில் திளைக்கும் அதிகாரிகள்
டாஸ்மாக் நிறுவனத்தில் அதிகாரிகளாக வருபவர்கள் அனைவரும் அயல்துறை சார்ந்தவர்கள். இவர்கள் வர்த்தகம் சார்ந்த படிப்போ, அனுபவமோ இல்லாதவர்கள். தொழிலாளர் சட்டங்கள் குறித்தான அடிப்படை ஞானம் அற்றவர்கள். இவர்களை கொண்டுதான் டாஸ்மாக் நிர்வாகம் நடக்கிறது. ஒவ்வொரு மாவட்ட அதிகாரியும் குறுநில மன்னர் போல தான். அவர் நினைத்தால் ஒரு ஊழியரை பணியிடமாற்றம் செய்ய முடியும், பணியிடை நீக்கம் செய்ய முடியும், அபராதம் விதிக்க முடியும். சட்டவிதிகளைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. கடை ஆய்வு என்ற பெயரில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக கூறி ஊழியர்களை மிரட்டி பணம் பறிப்பது, செய்த தவறுக்கு தண்டனை வழங்காமல் இருப்பதற்கு பணம் வசூலிப்பது, கடையின் விற்பனை அடிப்படையில் மாதாந்திர மாமூல் வசூலிப்பது என்பதில் மட்டுமே டாஸ்மாக் அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
பணியிடமாறுதல் - மீண்டும் பணி வழங்குதல்
18 ஆண்டுகாலமாக டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பணியிடமாறுதல் வழிகாட்டுதல் உருவாக்கப்படவில்லை. இதனால் அதிகாரிகள் விருப்பத்திற்கு பணியிடமாறுதல் ஆணைகளை பிறப்பிப்பார்கள். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அமைச்சர்களின் பரிந்துரைக் கடிதங்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பணியிடமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் கைமாறப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி மாறிய பிறகு கடந்த 15 மாத காலத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடமாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கென மாவட்டத்திற்கு இரண்டு மூன்று தரகர்கள். இந்த தரகர்கள் வெளிநபர்கள் இல்லை. டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களே தான் தரகு வேலையை பார்க்கிறார்கள். ஆளுங்கட்சி போர்வைக்குள் புகுந்து கொண்டு காரியம் சாதிப்பது என்ற நிலை தொடர்கிறது.
பார் உரிமதாரர்களின் அத்துமீறல்கள்
டாஸ்மாக் கடையோடு இணைந்துள்ள பார் உரிமதாரர்களின் அத்துமீறல்கள் கொஞ்சநஞ்சமல்ல. அரசு கடைக்கு போட்டியாக கள்ளசந்தையில் மது விற்பனை செய்கின்றனர். இவர்களுக்கு ஒத்துப்போகாத கடை ஊழியர்களை டாஸ்மாக் அதிகாரிகளின் துணையோடு வேறு கடைகளுக்கு மாற்றம் செய்கின்ற அளவிற்கு அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். பல இடங்களில் கடைஊழியர்களை தாக்குவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
கடைகளுக்கு சரக்கு இறக்குதல்
டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான மதுபான சரக்குகள் டாஸ்மாக் கிடங்குகளிலிருந்து அனுப்பப்படுகிறது. இதற்கென ஒப்பந்த அடிப்படையில் சரக்கு வாகனங்களில் வரும் மதுபான பெட்டிகளில் களவு நடப்பது மட்டுமல்ல, பெட்டிக்கு இறக்குகூலியாக ரூ.3 முதல் ரூ.5 வரை கட்டாயம் கடை ஊழியர்கள் தந்துவிட வேண்டும். தரமறுத்தால் பெட்டியே காணாமல் போய்விடும்.
தரகர் முறை
டாஸ்மாக் மாவட்ட, மண்டல, தலைமை அலுவலகங்களில் போஸ்டிங், டிரான்ஸ்பருக்கென தரகர்கள் உள்ளனர். இவர்களுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கவலையில்லை. எந்தவித கூச்சமுமின்றி சட்டையில் தலைவர்கள் படத்தை மாற்றி வைத்துக்கொள்கிறார்கள்.
மின்சார கட்டணம்
டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்படும் மின்சார கட்டணத்திற்கான தொகையினை டாஸ்மாக் நிர்வாகம் முழுமையாக வழங்குவது இல்லை. மின்சார கட்டணத்தில் 40 சதவீதம் மட்டுமே வழங்கும். மீதி தொகையை ஊழியர்களே செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது.
கடை வாடகை
டாஸ்மாக் நிறுவனம் நடத்தும் 5380 கடைகளில் ஒன்றுகூட டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கவில்லை. கடைகள் அனைத்தும் தனியார் கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. இதற்கென நிர்ணயிக்கப்படும் வாடகைத்தொகையைக் காட்டிலும் கூடுதலாக கடை ஊழியர்கள் கட்டிட உரிமையாளருக்கு தந்தாக வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று
கொரோனா பெருந்தொற்று காலத்தின் பொது போக்குவரத்து, வணிக நிறுவனங்கள் எல்லாம் முடக்கப்பட்ட நிலையிலும் அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து மது விற்பனை செய்தது. கடைகளில் பணிபுரிந்த 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அந்த குடும்பத்தினருக்கு கருணை வேலை இதுவரை வழங்கப்படவில்லை.
மதுக்கூடம் உரிமம்
டாஸ்மாக் கடைகளோடு இணைந்துள்ள மதுக்கூடங்களை ஆரம்ப கட்டத்தில் நிர்வாகமே நடத்தி வந்தது. அதன்பிறகு தனியார் கைக்குப் போனது. மதுக்கூட நிபந்தனைகள் ஏராளம் உண்டு. அதில் குறிப்பிட வேண்டியது அடுப்பு பற்றவைத்து சமைத்தல் கூடாது என்பதாகும். இந்த மதுக்கூடங்கள் உரிமம் பெற்றது தானா? உரிமம் இல்லாததா? என்பது வெளி உலகத்துக்கு தெரியாது. ஏனென்றால் மதுக்கூட ஒப்பந்ததாரர் ஒருவராக இருப்பார், நடத்துபவர் வேறு ஒருவராக இருப்பார். இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தொகையில் பெரும் மோசடி நடக்கிறது. இந்த மோசடியில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மதுக்கூட உரிமங்கள் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களை சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமங்களில் பெண்கள் பெயர்களும் உள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கூடங்கள் உரிமம் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போது டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளுக்கு போட்டியாக ‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தனியார் பார்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக மதுவிலக்கு என்ற நிலையிலிருந்து படிப்படியாக மது விற்பனையை தனியாரின் ஏகபோக ஆதிக்கத்துக்கு கொண்டு செல்லப்படும் நிலை உருவாகியுள்ளது.
விசாரணை கமிஷன்
தமிழ்நாட்டில் நாளொன்று சராசரியாக ரூ.120 கோடி அளவிற்கு பணப் பரிமாற்றம் நடக்கும் ஒரே அரசு நிறுவனம் டாஸ்மாக் தான். 120 கோடி ரூபாய் பணமாக கையாளும் இந்த நிறுவனத்தை சீரழிப்பவர்களை அடையாளம் கண்டு தண்டிக்கப்பட வேண்டும். இதற்கென தனி விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்பதே ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டாஸ்மாக் ஊழியர் கோரிக்கைகள்
மேற்கண்ட நிலைமைகளின் பின்னணியில் கோவையில் அக்டோபர் 2, 3 தேதிகளில் நடைபெறவுள்ள டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன (சிஐடியு) மாநில மாநாடு, கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
- தமிழக அரசு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட வேண்டும். பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும். புதிய மதுபான கடைகள் திறக்கக்கூடாது.
- 19 ஆண்டு காலமாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களின் பணியை வரன்முறைப்படுத்தி பணிநிரந்தரம் செய்திட வேண்டும். அரசு ஊழியருக்கு இணையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
- முந்தைய திமுக ஆட்சியில் முதலமைச்சர் பொறுப்பில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை இருந்த போது, தனிநபர், அரசியல்வாதிகள் தலையீடுகள், அதிகாரிகளின் அத்துமீறல்கள் கட்டுப்படுத்தப்பட்டன. தற்போதைய திமுக ஆட்சியிலும் முதலமைச்சர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைக்கு நேரடி பொறுப்பேற்று டாஸ்மாக் நிறுவனத்தை சீர்ப்படுத்திட வேண்டும்.
- தொழிலாளர் சட்ட விதிகளுக்கு புறம்பாக டாஸ்மாக் நிறுவனத்தின் மோசடி தடுப்பு விதிகள் 2014 திரும்ப பெற்று தொழிலக நிலையாணை சட்டம், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், பிழைப்பூதியம் சட்டம், வேலையாள் இழப்பீடு சட்டம், சம்பள பட்டுவாடா சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நல சட்டங்களை அமலாக்க வேண்டும்.
- ஊழியர்களுக்கு சாதகமாக நீதிமன்றங்கள் வழங்கும் உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யாமல் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். முந்தைய அரசு மேல்முறையீடு செய்துள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் - என்பன உள்ளிட்டகோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டரீதியிலான நடவடிக்கைகள், சுயேட்சையான போராட்டங்கள், ஒன்றுபட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் மாநாடாக கோவை மாநாடு அமையும்.