திருவனந்தபுரம்:
கேரளம் முழுவதும் அடித்தட்டு மக்களிடையே வளர்ச்சியை ஏற்படுத்த உதவிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் இடது ஜனநாயக முன்னணிக்கு (எல்டிஎப்) பெரும் வெற்றியை மக்கள் அளிப்பார்கள் என்று எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் கூறினார்.இதுகுறித்து அவர் திங்களன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: கேரளத்தில் அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கு உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளன. அதற்கான வாசலை திறந்து வைத்தது இடதுசாரி அரசுகள். தோழர் இஎம்எஸ்ஸின் முதலாவது அரசு முதல் தற்போதைய பினராயி விஜயன் அரசு வரையிலான அனைத்து இடதுசாரி அரசுகளும் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. பெண்களின் முன்னேற்றத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பெரும்பங்காற்றி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு 25 சதவிகிதம் நிதி ஒதுக்கப்படுகிறது.
பொருளாதார வீழ்ச்சி காலத்தில் முதலில் தவிர்க்கப்படுவது சாதாரண மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள்தான். ஆனால் கேரள அரசுஅத்தகைய திட்டங்களுக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறது. 56 லட்சம் முதியோர் மாதாமாதம் ரூ.1400 பெற்று வருகிறார்கள். அதன் பகுதியாக பொதுக்கல்வி, பொது சுகாதாரம், பொது விநியோகம் இவற்றில் அரசின் உறுதியான தலையீடு உள்ளது. கேரளத்தில் கல்வித்துறைவகித்து வரும் சிறப்பான பணிகளுக்கும், சுகாதார மேம்பாட்டுக்கும் தேசிய, சர்வதேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொது விநியோகம் என்பது நமது குடும்பங்களை பாதுகாப்பது என்கிற நோக்கத்துடன் செயல்படு கிறது. உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள் குறைந்த விலையில் தரமாக கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது.
சாதாரண மக்கள் தங்களது சொந்த வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் இந்த அரசை மதிப்பீடு செய்கிறார்கள். அந்த வகையில் இடது ஜனநாயக முன்னணிக்கு பேராதரவு உள்ளது. இது உள்ளாட்சி தேர்தலில் எல்டிஎப்பின் பெரும் வெற்றிக்கு வழிவகுக்கும் என விஜயராகவன் நம்பிக்கை தெரிவித்தார்.