states

தமிழகத்தில் காலூன்றிட நினைக்கும் மதவெறி நச்சு சக்திகள்

சென்னை, செப்.26- “தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகளுக்கு எந்தவகையிலும் நாம் இடம் கொடுக்காமல் நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்” என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:- “சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு - இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த லட்சிய நோக்கத்துடன்தான் திமுகவை அண்ணா தொடங்கினார். மிக சிறப்பாக நடந்து வரும் நமது ஆட்சியை பலரும் பாராட்டுகின்றனர். ஏடுகளும், ஊடகங்களும் எடுத்துக் காட்டுகின்றன. 

அதேநேரத்தில் இந்த ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன.  நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு எந்தவகையிலும் நாம் இடம் கொடுக்காமல் நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். திமுகவின் நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கட்சி நிகழ்ச்சிகள் அல்லது பொது நிகழ்ச்சிகளில் பேசும் செய்திகளைத் திரித்து, மறைத்து, வெட்டி, ஒட்டி, மோசடி செய்து வெளியிடக்கூடிய கூட்டத்தின் செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை அந்த நச்சு சக்திகள் ஒரு தொடர் வேலையாகவே மேற்கொண்டு செய்து வருகின்றன. “மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது” என்று பெரியார் சொல்வார். அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா? என்று எதிர்பார்க்கின்றன. மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்கப் பார்க்கின்றன.  நம்முடைய பயணம் நெடியது. நமக்குப் பொறுப்பு அதிகமாக இருக்கிறது. அண்ணா அடிக்கடி சொல்வதுபோல அவர்கள் வெற்று அகப்பைகள். அதனால் வேகமாகச் சுழல்கிறார்கள்.  நாம் கையில் ஆட்சி, மக்கள் நலன் எனும் அரிசியும் பருப்பும் கொண்ட அகப்பையை வைத்திருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பு என்கின்ற அந்த அகப்பையைக் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். எனவே, இத்தகைய நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் நாம் கவனமுடன் செயல்படுவோம். பொறுப்புடன் நடப்போம். நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தி வருவோம். அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.  அவை பற்றி நாம் பேசுவதைவிட, பயன்பெற்ற மக்கள் பேசுவார்கள். அவர்களே இந்த நச்சு சக்திகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். அந்தப் பொறுப்பை உணர்ந்து நம் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

;