states

தீக்கதிர் விரைவு செய்திகள்

12 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து  சபரிமலையில் பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம், டிச.9-  சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்கு இன்னும் 18 நாட்களே  உள்ளன. இதனால் கடந்த சில தினங்களாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணி க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதன்படி வியாழனன்று சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் 10 மணி நேரம் வரிசை யில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதே போல், வெள்ளியன்று 1 லட்சத்து 8 ஆயிரம்  பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்து உள்ளனர். இதனால் அதிகாலை 3 மணிக்கு நடைதிறந்தபோது, பக்தர்களின் வரிசை 2 கிமீ தூரத்தையும் தாண்டி காணப்பட்டது. மேலும் 18-ம் படி ஏறுவதற்காக பக்தர்கள்  12 மணிநேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்தனர். காலை நடை திறந்த 1 மணி நேரத்திலேயே சுமார் 16 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும்  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியில்  உள் வாங்கியது கடல்

தூத்துக்குடி, டிச. 9 தூத்துக்குடியில் வியாழனன்று காலை திடீரென கடல் உள் வாங்கியது. இதனால் கடலோரப் பகுதிகளில் பீதி நிலவுகிறது. வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கில் சுமார்  550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கில் சுமார்  460 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் வெள்ளியன்று (டிச.9) இரவு புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று காலை தூத்துக்குடி ரோச் பூங்கா, இனிகோ நகர் பீச் ரோடு கடற்கரை பகுதியில் சுமார்  30 அடி நீளம் கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலுக்குள் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. 2004ம் ஆண்டு சுனாமிக்குப் பின் தமிழக கடல் பகுதி களில் கடல் உள்வாங்குவது சாதாரண நிகழ்வாக பார்க்கப்படு கிறது. எனினும், தற்போது மாண்டஸ் புயல் வெள்ளி இரவு கரையை கடக்க உள்ள நிலையில் தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாண்டஸ் புயல்:  தூத்துக்குடி விமானம் ரத்து

தூத்துக்குடி, டிச. 9 ‘மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 7 மணிக்கு வர வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘மாண்டஸ்’ புயலால் மோசமான வானிலை நிலவுவதால் சென்னையில் விமானங்கள் ரத்து செய்யப் பட்டு வருகின்றன. வியாழனன்று 11-க்கும் மேற்பட்ட விமானங் கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. தூத்துக்குடியில் இருந்து மாலை 3.35 மணிக்கு சென்னை வர வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 7 மணிக்கு வர வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களில் இன்றும்  விடுமுறை

சென்னை,டிச.9- மாண்டஸ் தீவிர புயல் வெள்ளிக் கிழமை(டிச.9) காலை வலுவிழந்து புயலாக மாறியது. இதுதொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை (டிச.9) நள்ளிரவு சனிக்கிழமை(டிச.10) அதிகாலைக்குட்பட்ட நேரத்தில் புதுச் சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாமல்ல புரத்தை ஒட்டி கரையை கடக்கிறது. இதன் காரணமாக அடுத்துவரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக் கூடும்.  திருவள்ளூர், வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக  விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங் களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (டிச.10) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சி யர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கனமழை, புயல் எதிரொலி: டாஸ்மாக்  கடைகளை மூட ஊழியர்கள் கோரிக்கை

சென்னை,டிச.9- மாண்டஸ் புயல் மற்றும் மழை பாதிப்புகளிலிருந்து பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்க அரசு மதுபான சில்லறை கடைகளை மூடவேண்டும் என்று அரசுக்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் க.திருச்செல்வன் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழகம் மற்றும் எல்லை யோர பகுதிகளில் கரையை கடப்பதால்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொதுமக்களும் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று போக்குவரத்து துறையும் அறிவுறுத்தியது. தமிழ்நாட்டில் சுமார் 5,400 டாஸ்மாக் கடைகள் உள்ளன.இவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கணக்கு முடித்து வீடு திரும்ப நள்ளிரவு 12  மணி ஆகிவிடும். நள்ளிரவில் புயல்  கரையை கடக்கும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதால் அவர்கள் பாதுகாப்பு கருதியும்,டாஸ்மாக் சில்லறை கடைகளை நோக்கி படையெடுத்து வரும் பொது மக்களின் நலன் கருதியும் டாஸ்மாக் சில்லறை கடைகளை மூடுவதற்கு மாநில அமைச்சர் மற்றும் மாநில வாணிபக் கழக இயக்குநர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக் கிறார்.

44 ஆயிரம்  கம்பங்கள் மாற்றம்

கோவை,டிச.9- கோவையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,“ கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம்  வரை 44 ஆயிரம் பழுதடைந்த  மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது” என்றார். மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் ஊழியர்களும் 2 லட்சம் மின் கம்பங்களும் தயார் நிலையிலும் உள்ளது என்றும் கோவையை தமிழக முதலமைச்சர் புறக்கணிப்பதாக ஒரு சிலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். கோவையில் நடந்த இரண்டு அரசு நிகழ்ச்சிகளில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.  கோவை  விமான நிலைய விரிவாக்க பணிகள்  90 விழுக்காடு வரைக்கும் முடிவடைந் துள்ளது என்றும் கூறினார். மாநகரப் பகுதிகளிலுள்ள சாலை களை சீரமைக்க ரூ.211 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதில் முதற்கட்டமாக ரூ. 26 கோடி விடுவிக்கப்பட்டு வேகமாக நடந்து வருகிறது. இரண்டாவது கட்ட மாக 138 சாலைகளை சீரமைக்க ரூ.19  கோடியே 84 லட்சத்தை ஒதுக்கப்பட்டுள் ளது. மொத்தத்தில் கோவை மாநக ராட்சி பகுதிக்கு மட்டும் ரூ.200  கோடி சிறப்பு ரீதியாக ஒதுக்கப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2 லட்சம் புகாருக்கு தீர்வு: முதல்வர் 

சென்னை,டிச.9- தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் இதுவரை 2 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் தின செய்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி யுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள வெளியிட்டிருக்கம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநில மனித உரிமைகள் ஆணை யம் அமைக்கப்பட்ட பல மாநிலங்க ளில், தமிழ்நாடு முன்னோடி மாநில மாக திகழ்கிறது. இந்த ஆணையம் செயல்படத்துவங்கிய முதல் ஆண்டிலேயே 2162 புகார்கள் பெறப்பட்டு உரிய தீர்வுகள் காணப் பட்டுள்ளன. 1997 ஆம் ஆண்டு ஏப்ரல்  முதல் ஆகஸ்ட் 2022 வரைக்கும் வந்துள்ள 2,45,688 புகார்களில் 2,06,762 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம், மனித உரிமைகள் கல்வி,  உளவியல் மற்றும் குற்றவியல் ஆகியவற்றை பாடமாகப் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ‘நிலையப் பயிற்சி‘ வழங்கப்படுகிறது. மேலும் இக்கல்லூரி மாணவர்கள் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஆணையத்தின் செயல்பாட்டைப் பற்றிய தகவல்க ளைப் பரப்புவதற்கும் ஊக்குவிக் கப்படுவது பாராட்டுக்குரியது. இவ்வாறு முதல்வர் கூறி யுள்ளார்.

போராட்டக்களத்தில் நியூயார்க் டைம்ஸ் ஊழியர்கள்

நியூயார்க், டிச.9- அமெரிக்காவின் பிரபலமான ஊடகங்களில் ஒன்றான நியூயார்க் டைம்ஸ் குழுமத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடந்த  40 ஆண்டுகளில் முதன்முறையாக வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். பத்திரிகையின் உரிமையாளருக்கும், ஊழியர்களுக்கும் இடையிலான ஊதிய  உடன்பாடு மார்ச் 2021இல் நிறைவுக்கு வந்துவிட்டது. அடுத்த உடன்பாட்டிற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் எந்த வொரு முடிவுக்கும் வரவில்லை. 40 சுற்று கள் பேசிவிட்டார்கள். உரிமையாளர்கள் இழுத்தடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஊதிய உயர்வு மட்டு மில்லாமல், வீட்டிலிருந்து பணிபுரிதல், மருத்துவம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் ஆகியவையும் பேச்சுவார்த்தைகளில் இடம் பெற்றுள்ளன. பல மாதங்கள் பேசியும் பலன் இல்லாத தால், 24 மணிநேர வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தொழிற்சங்கம் அறி வித்தது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டி ருக்கும்போதே உரிமையாளர்கள் வெளி நடப்பு செய்துவிட்டார்கள். ஒரு நியாய மான தீர்வுக்கு நாங்கள் தயாராகவே இருந்தோம் என்று தொழிற்சங்கம் டுவிட்டரில்  பதிவிட்டுள்ளது. எங்கள் மதிப்பு என்ன வென்று எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் கூறியிருக்கிறார்கள். இவ்வளவு பேசியும், இன்னும் பேசத் தயாராக இருந்தாலும், பேச்சுவார்த்தையில் இருந்து வெளிநடப்பு செய்யும் அணுகு முறையைத்தான் அவர்கள் காட்டுகிறார்கள். அதனால், வேலை நிறுத்தம் என்பது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது என்று  தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. மொத்த முள்ள 1,800 ஊழியர்களில் 1,450 பேர் இந்தத் தொழிற்சங்கத்தில் உறுப்பினர் களாக இருக்கிறார்கள். பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் செய்தி அறைகளைக் கூட, செய்தியாளர்கள் அல்லாத ஊழியர் களை வைத்து சமாளிக்க முடியுமா என்று  நிர்வாகம் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

இமாச்சல் முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டி

 சிம்லா, டிச. 9 - இமாச்சலப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு முதல்வர் பதவிக்கு 3 பேர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களில் மாநில காங்கிரஸ்  தலைவரும், முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங்-கின் மனைவியுமான பிரதீபா சிங் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் மாநில தலைவர் சுக்வீந்தர் சிங் சுகு, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் அக்னிகோத்ரி ஆகியோர் உள்ளனர். பிரதீபா சிங் மகனும் சிம்லா புறநகர் தொகுதியில் 2-ஆவது முறையாக வெற்றி பெற்றிருப்பவருமான விக்ரமாதித்யாவை முதல்வராக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

வன விலங்குகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்!

புதுதில்லி, டிச. 9 - வன விலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவை யிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. காப்புக்காடுகளை சிறப்பாகப் பராமரித்து, வன விலங்கு களை பாதுகாக்கவும், அந்தப் பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தல், குடிநீர் வசதி போன்ற குறிப்பிட்ட செயல்பாடுகளை அனுமதிக்கவும் வகை செய்வதாக ஒன்றிய அரசால்  கூறப்படும் இந்த மசோதா, ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருந்தது.  இந்நிலையில், வியாழனன்று (டிசம்பர் 8) மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.