states

தேசிய கல்விக் கொள்கை வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை, ஏப். 19 - தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கில் பதில் மனு  தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஒன்றிய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  செவ்வாயன்று (ஏப். 19) தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக, டில்லி  உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரப்பட்டது. இதை  ஏற்று பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.