states

மோடி ஆட்சியை தூக்கியெறிவோம்

மதுரை பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்

மதுரை, மார்ச் 31 - 2024 பொதுத் தேர்தலில் மோடி ஆட்சி  தூக்கியெறியப்படுவது உறுதி; அதைத்தொடர்ந்து மத்தியில் மதச்சார்பற்ற ஜனநாயக ஆட்சி அமை யப்போவதும் உறுதி என்று சீத்தாராம் யெச்சூரி மதுரையில் முழங்கினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநில மாநாட்டையொட்டி புதன்கிழமை மதுரையில் பழங்கா நத்தம் தோழர் என்.நன்மாறன் நினைவுத் திடலில் நடைபெற்ற பிரம்மாண்டமான செந்தொண்டர் அணிவகுப்பு மற்றும் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினார்.  அவரது உரை வருமாறு: எனக்கு மதுரைக்கு வருவது எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். மதுரை மாநகரம் தேசிய  விடுதலைப் போராட்டத்தில் மட்டு மின்றி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தளங்களில் ஒன்று.  மிகத் தீவிரமான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் புரட்சிகரமான மைய மாக மதுரை திகழ்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தியாகிகள் மாரி, மணவா ளன், பாலு, சுப்பையா மற்றும் கே.பி.ஜானகியம்மாள், பி.ராமமூர்த்தி, நம்முடன் வாழும் வரலாறாகத் திகழும் என்.சங்கரய்யா ஆகிய செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் களம்கண்ட மண் இந்த மதுரை என்ப தால்தான் இங்கு வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது

இந்த நாட்டையும், இந்திய மக்களையும் பாதுகாக்கும் மகத்தான பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த சூழ்நிலையில் கேரள மாநிலம் கண்ணூ ரில் ஏப்ரல் மாதம் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெறு வதற்கு முன்னதாக இங்கு மாநில மாநாடு நடைபெறுகிறது. இன்று நம் நாடு மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்று 75  ஆண்டுகள் ஆன நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உரு வாக்கிய மதச்சார்பற்ற ஜனநாயக குடி யரசு என்று குணாம்சத்தை மாற்றி ஆர்எஸ்எஸ்சின் வெறிபிடித்த இந்துத் துவா ராஷ்டிரமாக சீர்குலைக்கும் நட வடிக்கையை பாஜக ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர்.

9 நாளில் 8 முறை  பெட்ரோல் விலை உயர்வு

அத்துடன் மக்களின் வாழ்வாதா ரத்தின் மீது கொடூரமான தாக்குதலைத்  தொடுத்து வருகின்றனர். வேலை யில்லா திண்டாட்டம், பசி, வறுமை, பணவீக்கம் விலைவாசி உயர்வு என நெருக்கடி அதிகரித்து வருகிறது. கடந்த  9 நாட்களில் 8 முறை பெட்ரோலிய பொருட்கள் விலையை உயர்த்தி உள்ளனர். அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் கடுமையாக உயர்த்தியுள்ளனர்.  ஆனால் மக்களின் வாழ்க்கை துயரங்களுக்கு தீர்வு காண்பதற்கு மாறாக வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை பாஜக அரசு திணித்து வருகிறது. 

எனவே இந்த அரசு ஒழிய வேண்டும். நாட்டு  நலன், மக்கள் நலனைப் பாதுகாக்க பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.  இத்துடன் நாட்டின் சொத்துகளைப் பாது காக்க, பொதுத்துறையைப் பாதுகாக்க, இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க, விவசாயிகள், தொழி லாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் நலனைப்  பாதுகாக்க, குழந்தைகளுக்கு நல்ல கல்வி, ஆரோக்கிய வாழ்வுக்கு நல்ல மருத்துவ வசதி ஆகியவற்றை வழங்குவதற்கு தற்போது பின்பற்றும் கொள்கைகளை மாற்ற வேண்டும். இந்த கொள்கை மாற்றம் ஏற்படுவதற்கு ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சி தோற்கடிக்கப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.இன்றைய இந்தியாவை காப்பாற்றுவதன் மூலம்தான் நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும். இந்தியா என்பது பல்வேறுபட்ட தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடு, பாரம்பரியம் என வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்பதை ஆர்எஸ்எஸ் - பாஜக ஏற்க மறுக்கிறது.  பன்முகத் தன்மையை ஏற்க மறுத்து ஒரே கலாச்சா ரத்தை ஏற்க வேண்டும் என நிர்பந்திக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரை இந்து - இந்தி - இந்துஸ்தானம் என்பதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, மராட்டியம், ஒடியா என அனைத்து மாநிலங்களின் மொழி, பண்பாட்டை சமமாக மதிப்பதன் மூலம்தான் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க முடியும்.  இதன் மூலம்தான் இந்தியாவை பாதுகாக்க முடியும். 

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

எனவேதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளும் மதச்சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி குடியரசைப் பாதுகாக்க போராடு கிறோம். கூட்டாட்சி இல்லாமல் இந்திய ஒன்றியம் இல்லை. ஒன்றிய, மாநில உறவின் அடிப்படையில் கூட்டாட்சி இல்லாமல் ஜனநாயகம் இல்லை.  இதற்காக கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள் மாநாட்டை நடத்தினார். அதை நாங்கள் வரவேற்றோம். 

அதேபோல் தற்போதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி கூட்டாட்சியைப் பாதுகாக்க பாரதிய ஜனதா அல்லாத முதல்வர்கள் மாநாட்டை நடத்த வேண்டும். அதற்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். இந்தியாவின் மதச் சார்பின்மை, ஜனநாயகம், மாநில உரிமை அடிப்படையிலான கூட்டாட்சி, சமூக நீதி ஆகிய வற்றை பாதுகாக்க அனைத்து மதச்சார்பற்ற மாநில கட்சிகளும் ஒன்று சேர வேண்டியது அவசியம். தமிழகத்தில் மொத்தமுள்ள தொழிற்சாலை களில் 52 சதவிகிதம் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இந்த ஆலைகளில் இட ஒதுக்கீடு உரிமை  பாதுகாக்கப்படுகிறது. தனியார்மயப்படுத்தும் போது இடஒதுக்கீடு அமலாவதில்லை. தனியார் துறையில் இடஒதுக்கீடு தேவை என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கோரி வருகிறது. பல பத்தாண்டுகளுக்கு முன்பே பெரியார் காலத்தில் இருந்தே சமூகநீதி முழக்கத்தை முன்வைத்து மிகப்பெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கியது தமிழகம். இப்போது தனியார் துறை யில் இட ஒதுக்கீட்டை அமலாக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும் அனைத்து மதச்சார்பற்ற ஜன நாயக சக்திகள் இணைந்து மிகப்பெரும் போராட்ட த்தை நடத்த வேண்டிய தேவை உள்ளது.

சமூக நீதி, இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் பாஜக அரசு தொலைய வேண்டும். இடது ஜனநாயக சக்திகள் பலமடைய வேண்டும். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைத் தோற் கடிக்கும் போரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கியப் பங்காற்ற முடியும். சில மாதங்களுக்கு முன்பு நான் தமிழகம் வந்தபோது, ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து பாரதிய ஜனதா அல்லாத அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். கூட்டாட்சி, சமூகநீதியை பாதுகாக்க முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இது தமிழ்நாட்டு நலனை பாதுகாக்க கூடியது மட்டுமல்ல, நாட்டு நலனைப் பாதுகாக்கக் கூடிய தாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படையில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டாட்சி, சமூகநீதியை பாதுகாக்க இது அவசிய மாகும். 

செங்கொடி இயக்கத்தின் முக்கியப் பங்கு    

அதேசமயம் பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் வலுவாகத் தொடர வேண்டும்.  மார்ச் 28, 29 இரண்டு நாட்கள் அகில இந்திய பொது  வேலை நிறுத்தம் நடைபெற்றது. இளைஞர்கள், பெண்கள், அங்கன்வாடி, ஆஷா திட்ட பணியாளர்கள் என பல தரப்பினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இத்தகைய மக்கள் எழுச்சியை பலப்படுத்தி, 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை தோற் கடிக்க மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செங்கொடி இயக்கம் மிக முக்கிய மான பங்கு வகிக்கும்.        

தேர்தலுக்குப் பிறகு அமையப் போகும் ஆட்சி

மோடியை, பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என்கிறீர்களே, யார் தலைமை தாங்கு வார்கள் என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பு கின்றன. 2004ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு ‘இந்தியா  ஒளிர்கிறது’ என்று பிரச்சாரம் செய்த பிரதமர் வாஜ்பாயின் அரசை வீழ்த்த வேண்டும் என  கூறினோம். அப்போதும் வலுவான எதிர்க்கட்சி கள் இல்லை, எனவே வாஜ்பாயை தோற்கடிக்க முடி யாது என்று கூறினார்கள். ஆனால் 2004 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாகி, பிரதமராக மன்மோகன் சிங்  தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். 2004 தேர்தலுக்கு முன்பாக , மன்மோகன் சிங் பிரதமர் ஆவார் என்று யாரா வது நினைத்துப் பார்த்தோமா? அதே போல் 2024  தேர்தலுக்குப் பிறகு புதிய ஆட்சி அமையும். மோடி தோற்கடிக்கப்படுவார். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் வலிமை. பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஓர் அரசியல் அணி சேர்க்கை உருவாகும் என்பதை கடந்த காலத்தைப் பார்த்தால் தெரியும். 1977ஆம் ஆண்டு இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்ட பிறகுதான் ஜனதா கட்சி தலைமையில் புதிய அணி உரு வானது. அதேபோல் 1996ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகுதான் ஐக்கிய முன்னணி அரசு  உருவாகி தேவகவுடா பிரதமாரக பதவிக்கு வந்தார். 1998ஆம் ஆண்டிலும் வாஜ்பாய் பிரதமர் ஆனது  கூட, தேர்தலுக்குப் பிறகுதான் தேசிய ஜனநாய கக் கூட்டணி ஏற்படுத்தப்பட்ட போதுதான். 2004ஆம் ஆண்டிலும் தேர்தலுக்குப் பிறகுதான்  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாகி மன்மோ கன் சிங் பிரதமர் ஆனார். அதுபோலத்தான் 2024  தேர்தலிலும் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சி வீழ்த்தப் பட்டு மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. அப்போது மத்தியில் அமையப் போவது மதச்சார் பற்ற ஜனநாயக ஆட்சி.

எனவே பாஜகவை தோற்கடிக்க அதிகபட்ச சாத்தியமான அளவுக்கு, விரிவான முறையில் அணிசேர்க்கையை உருவாக்குவோம். தமி ழகத்தில் திமுக விரிவான அணிசேர்க்கையை உரு வாக்கி, அதிமுக - பாஜக கூட்டணியை வலுவான முறையில் தோற்கடித்தது. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள்வது மதுரைக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய முழுமைக்கும் மிக முக்கிய மாகும். மதச்சார்பற்ற ஜனநாயக அரசு அமைய அனைத்து மாநிலங்களிலும் இதுபோல் உரு வாக வேண்டும். இது நம் அனைவரின் வரலாற்றுக் கடமையாகும். இந்த பொறுப்பை நிறைவேற்ற, தமி ழகத்தைப் பாதுகாக்க, இந்தியாவைப் பாதுகாக்க திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். சுதந்திரப் போராட்டத்தில் நம் முன்னோர்கள் தியாகம் செய்து நமக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்துள்ளனர். நாம் இந்த சுதந்திரத்தைப் பாது காத்து நல்லதொரு இந்தியாவை நாம் நமது வாரிசு களுக்கு வழங்க வேண்டும். புதிய உத்வேகத் தோடு நாம் செயல்பட வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார். அவரது ஆங்கில உரையை தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழில் மொழி பெயர்த்தார். 

பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள்  உ.வாசுகி, அ.சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகி யோர் உரையாற்றினர். எம்.ஏ.பேபி, ஜி.ராம கிருஷ்ணன், ஏ.கே.பத்மநாபன், சுதா சுந்தரராமன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த  மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளரும் வரவேற்புக்குழு செய லாளருமான மா.கணேசன் தலைமையேற்றார். கலை நிகழ்ச்சிகளை திரைக்கலைஞர் ரோகிணி துவக்கி வைத்துப் பேசினார். புறநகர் மாவட்டச் செயலாளரும், வரவேற்புக்குழு பொருளாளரு மான கே.ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தி னார். மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் நன்றி கூறினார்.