இம்பால், ஜூலை 2- மணிப்பூர் மாநிலத்தில் பல உயிர்களை பலிவாங்கும் இனக்கலவரத்தில் வெளி நாட்டு சக்திகள் இருந்திருக்கலாம் என அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் சூசகமாகத் தெரிவித்துள்ளார் என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனம் நடத்திய சனிக்கிழமை நேர்காணலின் போது சர்வதேச அமைப்பு வன்முறையில் பங்கு வகித்திருக்க முடியுமா என்று கேட்டதற்கு, அந்த சாத்தியத்தை தன்னால் மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ முடியாது என்று சிங் கூறியுள்ளார். வன்முறை திட்டமிட்டு நடத்தப் பட்டதாகத் தெரிகிறது, ஆனால் அதற்கான காரணம் தெளிவாக இல்லை. மணிப்பூர் தனது எல்லைகளை மியான்மருடன் பகிர்ந்து கொள்கிறது. சீனாவும் அருகில் உள்ளது. நமது எல்லைகளில் 398 கிமீ தூரம் பாதுகாப்பற்றது. எங்கள் எல்லை களில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப் பட்டுள்ளன, வலுவான மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும். 398 கி.மீ என்பது ஒரு பரந்துபட்ட பகுதி. மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க ஒன்றிய அரசும் மாநில அரசும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
மணிப்பூரில் அனைத்துப் பழங்குடியினரும் ஒன்றாக வாழ வேண்டும் மணிப்பூரை இன ரீதியாக பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டோம். மணிப்பூர் ஒரு சிறிய மாநிலம். ஆனால் 34 பழங்குடியினர் உள்ளனர். இந்த 34 பழங்குடியினரும் ஒன்றாக வாழ வேண்டும். வெளியிலிருந்து அதிகம் பேர் இங்கு வந்து குடியேறக்கூடாது. அனைவரை யும் ஒன்றிணைக்க தியாகம் செய்யவும் தயார் எனவும் அவர் கூறியதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் குக்கி மக்களுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் “மன்னிப்போம் மற்றும் மறப்போம் என்று கூறினார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜூலை 2 ஆம் தேதி அதிகாலை 12.05 மணியளவில் பிஷ்னுபூர் மாவட்டம் குஜுமா தாபி என்ற மெய்தே மக்கள் வாழும் கிராமத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளை ஆயுதமேந்தியவர்கள் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப் பட்டனர். இந்தத் தகவலை பிஷ்னுபூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஹெய்ஸ்னம் பல்ராம் சிங் உறுதிப்படுத்தி னார். நான்கு பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோபமடைந்த மக்கள் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள லாங்சா மற்றும் சிங்லாங்மேய் கிராமங்களைத் தாக்கினர். இங்கு குக்கி மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.