states

மனிதகுலத்திற்கு செய்யும் சேவையே கடவுளுக்கான சேவை

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சார்ந்த இளங்கோ (இந்து முன்னணி பிரமுகர்) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். மனுவில், ‘‘திருச்சி மாவட்டம் கல்விக்குடி கிராமத்தில் ஸ்ரீ கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அரசு நெல் கொள்முதல் மையம் செயல்பட்டு வந்தது. பல விவசாயிகள் தங்களது மூட்டைகளை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அடுக்கி வைத்து பயன்பெற்று வந்தனர். தற்போது கோவில் கும்பாபிஷேக பணிக்காக கட்டிட வேலைகள் நடைபெற்று வருகிறது. அதற்காக சிமெண்ட், செங்கல் போன்ற மூலப்பொருட்கள் வைக்கக்கூடிய இடத்தில் பணிகளுக்கு இடையூறாக தற்போது நெல் மூட்டைகளை விவசாயிகள் அடுக்கி வைத்துள்ளனர். இதனால் கோவில் பணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே கோவில் பூஜைகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறாக உள்ளதை அகற்றக் கோரியும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கவும் நெல் கொள்முதல் செய்வதற்கு கோவில் இடத்தை பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கோவில் நிலத்தில் கோவில் பணிகளுக்கு இடையூறாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும் மூட்டைகள் வைக்கவும் தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், மனித குலத்திற்கு செய்யும் சேவைதான் கடவுளுக்கும் செய்யும் சேவை; விவசாயிகள் தங்களது நெல்மணிகளை கோவில் நிலத்தில் அடுக்கி வைப்பதில் எந்த தவறும் இல்லை; கோவில்கள் மக்களுக்கானது தான்; மேலும் நெல் கொள்முதல் நிலையமும் தற்காலிகமாக தான் அங்கே செயல்பட்டு வருகிறது. எனவே நெல் மூட்டைகள் வைக்க தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர். கோவில் கட்டுமானப் பணிகளுக்கும் இடையூறு இல்லாத  வகையில், விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும், இதை கோவில் ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.