சென்னை, டிச. 1- ஒப்பந்த செவிலியர்களின் வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மருத்துவ பணியாளர் வாரியத்தின் மூலம் 7,243 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணி அமர்த்தப்பட்டனர். பணியில் சேர்ந்து இரண்டு வருடத்தில் பணி நிரந்தரம் செய்யப் படும் என்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கடந்த 2017 நவம்பர் 27ஆம் தேதி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மருத்துவப் பணிகள் இயக்கம் (டி.எம்.எஸ்) வளாகத்தில் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. 3 நாட்கள் நடந்த செவிலியர் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கணேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி போராட்டத்திற்கு தடை விதித்து இடைக்கால உத்தரவிட்டார். செவிலியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் செவிலி யர்களின் கோரிக்கை குறித்து அரசு பேச்சு நடத்த வேண்டும்
என்றும் உத்தரவிட்டார். தொடர்ந்து அந்த வழக்கின் இறுதி தீர்ப்பில் ஒப்பந்த செவிலி யர்களின் பணியை நிரந்தர செவிலியர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து சம வேலை செய்யும் ஒப்பந்த செவிலியர்களுக்கு 6 மாதத்திற்குள் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த 11.6.2018 அன்று உத்தரவிடப்பட்டது. அந்த தீர்ப்பை அரசு நிறைவேற்ற வில்லை. தீர்ப்பை நிறைவேற்றாத சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் பீலா ராஜேஷூக்கு எதிராக தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன்பிறகு, இந்த வழக்கில் 1.11.22 அன்று முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் மருத்துவர் பீலா ராஜேஷ் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் நேரில் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத்துறை செயலாளர் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக மன்னிப்புக் கோரி டிசம்பர் 15 அன்று மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஒப்பந்த செவிலி யர்களின் பணியின் தன்மையை நிரந்தர செவிலி யர்களுடன் ஒப்பிட்டு பார்த்து சம வேலை செய்யும் ஒப்பந்த செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை ஜனவரி 4ஆம் தேதி நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.