சென்னை, ஆக. 11 - சட்டங்களில் ‘இந்தியா’ என உள்ளதை ‘பாரத்’ என மாற்றும் மசோதா-வுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் ‘இந்தித் திணிப்பு’ என்ற புயலை எதிர்கொண்டதைப் போல் இதனையும் எதிர்கொண்டு வீழ்த்துவோம் எனவும் முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். “இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க முயற்சிக்கும் பாஜகவின் இந்த முயற்சி மொழி ஏகாதிபத்தியத்தின் கோரத்தாண்டவம்” என்று முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சக்ஷயா என பெயர் மாற்றம் செய்வது மொழி ஏகாதிபத்தியத்தை காட்டுவதாக உள்ளது. இனிமேல் தமிழ் என்ற வார்த்தையைக்கூட உச்சரிக்க பிரதமர் மோடிக்கோ, பாஜக-வுக்கோ தார்மீக உரிமை இல்லை” என அவர் கூறியுள்ளார். மேலும், “வரலாற்றில், தமிழ்நாடும், திமுக-வும் இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிரான முன்னணிப் படைகளாக உருவெடுத்துள்ளன. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் முதல் நமது மொழி அடையாளத்தைப் பாதுகாப்பது வரை, இதற்கு முன் இந்தித் திணிப்பு என்ற புயலை எதிர்கொண்டோம். மீண்டும் தளராத உறுதியுடன் அதை மேற்கொள்வோம். ஒன்றிய பாஜக அரசின் இந்தச் செயல் இந்திய ஒற்றுமை என்ற அடித்தளத்துக்கே விரோதமானது. இந்தி காலனித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு நெருப்பு மீண்டும் எரிகிறது. இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்ற முயற்சிக்கும் பாஜக-வின் செயலை உறுதியாக நின்று வீழ்த்து வோம்” என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.