மும்பை, அக். 17 - அந்தேரி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், முர்ஜி பட்டேலை வேட்பாளராக அறிவித்திருந்த பாஜக, திடீரென போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளது. அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே கடந்த மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்தேரி கிழக்கு தொகுதிக்கு நவம்பர் மாதம் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரே சிவசேனா சார்பில் மறைந்த ரமேஷ் லட்கே-வின் மனைவி ருதுஜா லட்கே நிறுத்தப் பட்டுள்ளார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி ஆதரவுடன் பாஜக வேட்பாளராக முர்ஜி பட்டேல் நிறுத்தப்பட்டார். எனினும், தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே அந்தேரியில் சிவசேனா வேட்பாளர் ருதுஜா லட்கே வெற்றி உறுதியானது. பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ருதுஜா வெற்றிபெறுவார் என்று செய்திகள் வெளியாகின. எதிர்பாராத திருப்பமாக, பாஜக அணியிலுள்ள நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே-வும் திடீரென ருதுஜா லட்கேவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். ருதுஜாவுக்கு எதிராக நவநிர்மாண் சேனா வேட்பாளரை நிறுத்தாது, அதேபோல பாஜகவும் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இதையே கூறின. இது அந்தேரி கிழக்கில் உத்தவ் வேட்பாளர் ருதுஜாவின் வெற்றியை மேலும் உறுதி செய்தது. இதையடுத்து, பிடிவாதமாக போட்டியிட்டு தோல்வி யடைந்தால், அது ஒட்டுமொத்த மாநில அரசுக்கும் எதிரான அதிருப்தியாக பார்க்கப்படும். இதற்குப் பதிலாக, நாமாகவே முன்வந்து தொகுதியை விட்டுக் கொடுத்தால், பெருந்தன்மை யாக நடந்து கொண்டோம் என்ற பெயராவது கிடைக்கும் என்று முடிவு செய்த பாஜக, தற்போது தனது வேட்பாளர் முர்ஜி படேலை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதனால், உத்தவ் வேட்பாளர் ருதுஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.