science

img

அறிவியல் கதிர்

►ஹச்ஐவியும் முதுமை அடைவதும் 
நாம் முதுமை அடைவதில் ஹச்ஐவி(HIV)) நோய் மிகுந்த தாக்கம் செலுத்துகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த தீ நுண்மி தொற்றிய இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே  ஒருவருக்கு முதுமை ஏற்படுவதில் தாக்கம் செலுத்த தொடங்கி விடுகிறதாம். எனவே இதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய வேண்டும். இந்த நுண்மி ஒருவரின் வாழ்நாளை ஐந்து வருடங்கள் குறைத்து விடுமாம்.

►செவ்வாயின் முழுப்பகுதிகளை படம் பிடித்த சீன விண்கலம் 
சீன விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகத்தை கடந்த வருடத்திலிருந்து 1300 முறைகள் சுற்றி வந்து அதன் எல்லாப் பகுதிகளின் புகைப்படங்களையும் எடுத்துள்ளது.இதில் செவ்வாயின் தென் துருவம், 4000 கி.மீ நீளமுள்ள ‘வல்லெஸ் மரினேரிஸ்’ எனும் பள்ளத்தாக்கு,செவ்வாயின் வடக்குப் பகுதியிலுள்ள ‘அரேபியா டெர்ரா’ எனும் குன்றுப்  பகுதிகளின் வெடிப்புகள் ஆகியவை அடங்கும்.இந்த தகவலை சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

►விண்வெளியில் எலும்புகள் தேய்மானம் 
இருபது வருடங்களில் நம் எலும்பு அடையும் தேய்மானம் விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு ஆறே மாதங்களில் ஏற்படுகிறதாம். ஒரு வருடம் புவியின் ஈர்ப்பு விசையில் இருந்தால் அந்த தேய்மானத்தில் ஐம்பது சதவீதம் மீண்டும் வளர்ச்சி அடைகிறது.இந்த ஆய்வு ஜூன் 30 ‘சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ இதழில் வந்துள்ளது.  சராசரி வயது 47 ஆக உள்ள 17 விண்வெளி வீரர்கள்(14 ஆண்கள் 3 பெண்கள்) விண்வெளியில் கழித்த 4 முதல் 7 மாத காலத்தை ஆய்வு செய்தனர். விண்வெளிப் பயணத்திற்கு முன், திரும்பி வந்தபின், ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருடம் கழித்து அவர்களுடைய எலும்புகளில் சிலவற்றை ஆய்வு செய்தனர்.ஆறு மாதங்களுக்கு குறைவாக விண்வெளியில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு புவி ஈர்ப்பில் இருந்த ஒரு வருடத்தில் மீட்கப்பட்டது.நீண்ட கால விண்வெளிப் பயணம் அதிக இழப்பையும் ஈடு செய்ய முடியாத நிலையையும் ஏற்படுத்தலாம்.ஆறுமாதங்களுக்கு மேல் இருந்தவர்களுக்கு சாதாரணமாக பத்து வருடத்தில் ஏற்படும் இழப்பு நிரந்தரமாக ஏற்பட்டது.விண்வெளியில் பளு தூக்கும் பயிற்சிகள் செய்தபோது எலும்பு தேய்மானத்தை தவிர்க்க முடிந்தது.செவ்வாய் கிரக பயணம் இரண்டு வருடங்களுக்கு மேல் எடுக்கும் என்பதால் விண்வெளி வீரர்களுக்கு எலும்பு தேய்மானத்தை தடுத்து வளர்ச்சிக்கு உதவக்கூடிய சத்து உணவுகளை அளிப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் உடலியக்க அறிஞர் லார்ன்ஸ் விக்கோ.ஒரு வருடம் விண்வெளியில் இருக்கும்போது ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் குறித்து நாசாவின் ஆய்வில் இந்த ஆய்வாளர்கள் பங்கெடுக்கிறார்கள்.

►இருளிலும் உணவு தயாரிப்பு 
செயற்கை ஒளிச்சேர்க்கை முறை மூலம் சூரிய ஒளி இல்லாமல் உணவு தயாரிக்கும் முறையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.இருபடி மின் கிரியாஊக்கி செயல்பாட்டின் மூலம் கார்பன்டை ஆக்சைடையும் நீரையும் மின்சாரத்தையும் சேர்த்து அசிடேட் எனும் வேதிப்பொருளை உண்டாக்கியுள்ளார்கள்.உணவு தயாரிக்கும் உயிரிகள் இதை உண்டு இருளிலும் வளர்ச்சி அடைகின்றன. இந்த செயல்பாட்டை சூரிய ஒளி அடுக்குகளுடன் இணைக்கும்போது சூரிய ஒளியை உணவாக மாற்றும் திறன் 18 மடங்கு அதிகமாகிறதாம்.

►புதிய தாவரம் கண்டுபிடிப்பு 
இந்தியாவில் இமயமலையின் மேற்குப் பகுதியில் பூச்சிகளை உண்ணும் அரிய வகை புதிய தாவரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநில வனத்துறையின் ஆய்வுக்கு  குழு ஒன்று இதைக் கண்டுபிடித்துள்ளது. 106 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘ஜப்பான் தாவர  இதழில்’ இது வெளிவந்துள்ளது.

►பேக்டீரியாவிலிருந்து எரிபொருள் 
எதிர்காலத்தில் பூமியிலிருந்து எடுக்கப்படும் படிவ எரி  பொருட்கள் தீர்ந்து போகும் அபாயம் இருப்பதால் புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களை கண்டறியும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.அதன் ஒரு பகுதியாக ஸ்ட்ரெப்டோ மைஸீஸ் எனும் பேக்டீரியாவிலிருந்து மூலக்கூறுகளை பெற்று எரிபொருள் உண்டாக்கும் முறை குறித்த  கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஜே கீஸ்லிங் மற்றும் லாரன்ஸ் சோதனை சாலையை சேர்ந்த பாப்லோ கிரஸ் ஆகியோர்ஆய்வு.செய்துள்ளனர். இந்த பேக்டீரியாவை சர்க்கரை, உப்பு மற்றும் அமினோ அமிலங்கள் கலந்த கலவையில் வளர்த்து அவற்றிலிருந்து எண்ணெய்ப் பகுதிகளை மட்டும் தனியாக பிரித்தெடுத்து எஸ்டெரிபிகேஷன் எனும் முறையில் எரிபொருளாக பயன்படும் மூலக்கூறு கிடைத்துள்ளது. இவை புதுப்பிக்கத்தக்கதும் படிவ எண்ணெய்களை விட அதிக ஆற்றல் கொண்டதாகவும் உள்ளது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.   மேலும் ஆய்வுகள் செய்து இந்த முறை மேம்படுத்தப்பட்டால் இது விண்வெளி ஊர்திகளிலும் பயன்படும்.