செயற்கை நுண்ணறிவை பயிற்றுவிக்கும் இந்த ஆன்லைன் வேலைகள் முழுக்க முழுக்க குழப்பமானவை. ஆரம்பத்தில் மிக எளிதாகத் தெரிந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல சிக்கல் அதிகமாகிக் கொண்டே இருக்கும். இந்த வேலைக்கு ஆட்கள் எடுக்கும் போது முதலில் உங்களை ஒரு ஆன்லைன் பயிற்சியை செய்ய சொல்வார்கள். இதற்கு நீங்கள் எதுவும் கட்டணம் கொடுக்க வேண்டாம், அவர்களும் சம்பளம் கொடுக்கமாட்டார்கள். சுமார் 40 முதல் 50 பக்கங்கள் வரை இருக்கும் ஒரு மின் புத்தகத்தை படிக்க வேண்டும். அதில் உங்கள் வேலை தொடர்பாக நீங்கள் லேபிள் செய்யும்போது எதை குறிக்க வேண்டும்; எதையெல்லாம் குறிக்கக் கூடாது என்று பட்டியலிடப்பட்டிருக்கும். அதன் பின் ஒரு சிறு தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் நீங்கள் வெற்றிபெற்றுவிட்டால் உங்களுக்கு வேலை கிடைத்துவிடும். வேலையை தொடங்கியவுடன்தான் உங்களுக்கான தலைவலி புரிய ஆரம்பிக்கும். பயிற்சியில் கொடுக்கப்பட்ட கட்டளைகள் மிக எளிதாக இருக்கும். ஆனால் வேலையில் புதிது புதிதான விஷயங்கள் வந்து கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு உங்களுக்கு கொடுக்கப்படும் புகைப்படத்தில் உள்ள துணிகளை நீங்கள் லேபிள் செய்ய வேண்டும். பயிற்சியின் போது, படத்தில் உள்ள துணிகளை குறிப்பிட்டு லேபிள் செய்யவும் என்று உங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கும்.
மிக எளிதுதான். உங்களுக்கு ஒரு புகைப்படத்தை காட்டுவார்கள். அதில் சூட்கேஸ் நிறைய துணிகள் அடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் இது துணி தானே என்று குறிப்பிட்டால் அது தவறு. ஏனென்றால் இங்கு நீங்கள் பயிற்றுவிக்கும் செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்கள் போட்டிருக்கும் துணியை கண்டுபிடிப்பதுதான் அதனுடைய வேலை. சூட்கேஸில் உள்ள துணிகளை அல்ல. அடுத்து உங்கள் முன்னால் ஒரு புகைப்படம் காட்டப்படும். அதில் கண்ணாடியில் ஒரு நபர் தெரிவார், சரி அவர் போட்டிருக்கும் துணிகளை நீங்கள் லேபிள் செய்தால் தவறு. காரணம் கண்ணாடியில் போட்டிருக்கும் துணியை ஒரு நபரால் உடுத்த முடியாது. செயற்கை நுண்ணறிவு அதை தவறாக புரிந்து கொள்ளும். அதனால் இப்போது நீங்கள் லேபிள் செய்தது தவறு. ஆரம்பத்தில் துணியை மட்டும் லேபிள் செய்ய வேண்டும்என்று நினைத்து வேலையை தொடங்கிய நீங்கள், ஒவ்வொரு வாரமும் நீங்கள் செய்யும் தவறுகளின் பட்டியலை பார்க்கும்போது குழப்பம் மட்டும்தான் மிஞ்சும். உண்மையில் செயற்கை நுண்ணறிவு என்பது தாமாக அனைத்தையும் புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு சிக்கலுக்கும் தேவையான தீர்வாக அல்காரிதங்களை மென்பொருள் நிபுணர்கள் உருவாக்குகிறார்கள். இதை மாடல் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு மாடலும் ஒரு சிக்கலுக்கான தீர்வு. ஒரே போல இருக்காது. ட்ராபிக் சிக்னலில் வண்டிகளை கண்டுபிடிக்கும் கேமராவை பயிற்றுவிக்கும் மாடலும், தானியங்கி கார் ஓட்டியில் இருக்கும் கேமராவை பயிற்றுவிக்கும் மாடலும் வெவ்வேறானவை. இவை இரண்டிற்கும் டிராபிக் புகைப்படங்கள் கொடுக்கப்பட்டாலும், அதில் குறிப்பாக லேபிள் செய்ய வேண்டிய விஷயங்கள் மாறுபடும்.
ஒரு மாடலை உருவாக்கி விட்டு, அதை பயிற்றுவிக்க தேவையான தகவல்களுக்கும், லேபிள்களுக்கும் காத்திருக்கும் மென்பொருள் நிபுணர்கள் ஆரம்பத்தில் சில விதிகளை கொடுப்பார்கள். அதுதான் நீங்கள் ஆரம்பத்தில் படித்த அந்த 50 பக்க பயிற்சி நூல். முதலில் லேபிள் செய்தவற்றை தங்கள் மெஷின்லெர்னிங் மாடலுக்கு உள்ளீடாக கொடுத்து பயிற்றுவிப்பார்கள். அந்த மாடல் தவறு செய்யும், தவறுக்கு தீர்வாக புதிய விதிகளை உருவாக்குவார்கள். அந்த விதிகளை இப்போது லேபிள் செய்பவர்களுக்கு அனுப்புவார்கள், அவர்கள் படித்து புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து மீண்டும் லேபிள் செய்த தகவல்களை அனுப்புவார்கள், மீண்டும் உள்ளீடு, மாடல் செய்யும் புதிய தவறுகள், தவறுகளுக்கு தீர்வாக புதிய விதிகள். மேலும் 50 பக்கங்கள் என இது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆறு மாதம் இந்த வேலையில் நீங்கள் இருந்தால், சுமார் 500 பக்கங்கள் வரை புதிய புதிய விதிகள் வாரம் வாரம் வந்து கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருக்கும் விதிகளை நீங்கள் நினைவு வைத்துக் கொண்டு இந்த வேலையை செய்ய வேண்டும். ஒரு சிறு தவறு என்றாலும் எந்தவித காரணமும் சொல்லாமல் உங்களை உடனே வேலையிலிருந்து நீக்கி விடுவார்கள். எந்த வாரம் உங்களுக்கு சம்பளம் கிடைக்கும்; எந்த வாரம் நீங்கள் நீக்கப்படுவீர்கள் என்பது மர்மம். அதைப் பற்றிய தெளிவு எதுவும் இல்லை. எந்நேரமும் மன உளைச்சலுடனே இந்த வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும்.
அடுத்ததாக இந்த வேலைகளுக்கு கொடுக்கப்படும் ஊதியம் என்பது இன்னொரு மர்மம். ஒரு மணி நேரம் வேலை செய்தால் அமெரிக்காவில் சுமார் 10 டாலர்கள் வரை ஊதியமாக கொடுக்கிறார்கள். இந்திய மதிப்பில் 800 ரூபாய். ஆனால் கென்யா போன்ற நாடுகளில் ஒரு மணி நேரத்திற்கு மூன்று டாலர்கள் வரை கொடுப்பார்கள் - இந்திய மதிப்பில் ரூ.240. இந்தியா - நேபாளம் போன்ற நாடுகளில் அது ஒன்று முதல் இரண்டு டாலர் வரை - இந்திய மதிப்பில் ரூ.80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை. இதிலும்டாலரை இந்திய ரூபாய்க்கு மாற்றுவதில் ஏற்படும் நட்டம், இதற்காக நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன், இறுதியில் இந்திய அரசு போடும் வரி - இதை எல்லாம் மீறி உங்களுக்கு கிடைக்கும் பணம் சொற்பம். ஆரம்பத்தில் அமெரிக்காவில் இருந்த வேலைகளை பின்னர் கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு மிகக் குறைந்த கூலிக்கு மாற்றினார்கள். இப்போது அங்கிருந்து நகர்ந்து இந்தியா, நேபால், இந்தோனேசியா என்று இன்னும் குறைந்த கூலிக்கு வேலையை வாங்குகிறார்கள். Scale AI, Appen, Remo tasks, Taskup AI,Tellus என்று பல்வேறு நிறுவனங்கள் இந்த வேலையை வாங்கினாலும், அவர்களின் லாபம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக் கொண்டே போகிறது. செயற்கை நுண்ணறிவு எனும் லாப நோக்கிற்காக சந்தையில் மிகைப்படு த்தப்படும் நிறுவனங்களுக்கு பின்னால் மிகப்பெரும் உழைப்புச் சுரண்டல் இருப்பது உண்மை.