science

img

அறிவியல் கதிர் - இரா.இரமணன்

1 ) சிடி ஸ்கேனுக்கு வயது ஐம்பது

இன்று மருத்துவத்தில் சிடி ஸ்கேன் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில் ஆண்டொன்றிற்கு 80மில்லியன் ஸ்கேன்கள் எடுக்கப்படுகிறதாம். எக்ஸ்ரே கணக்கீட்டு குறுக்குவெட்டு தோற்றம்(X-ray computed tomography) என்பதன் சுருக்கமே சிடி ஸ்கேன். இதய நோய், புற்றுக்கட்டிகள், ரத்தக் கட்டிகள், எலும்பு முறிவு, ரத்தக் கசிவு போன்றவற்றை கண்டறிய இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. நம் உள்உறுப்புகள் ஒவ்வொன்றும் எக்ஸ்ரே கதிர்களை வெவ்வேறு விதமாக உள்வாங்குகின்றன. எடுத்துக்காட்டாக எலும்பிலுள்ள கால்சியம் அதிக அளவிலும் மற்ற மென்மையான திசுக்கள் குறைந்த அளவிலும் எக்ஸ்ரே கதிர்களை உள்வாங்குகின்றன. சிடி ஸ்கேன் கருவி நம் உடலினுள் சுழலும் எக்ஸ்ரே கதிர்களை செலுத்துகிறது. எலும்பு, தசை, இரத்தம் ஆகியவற்றுள் எந்த அளவு கதிர்கள் செல்லுகின்றன என்பதை இன்னொரு கருவி அளக்கிறது.

இந்த தரவுகள் கணினி மூலம் ஒன்று சேர்க்கப்பட்டு நம் உடலின் உள்பகுதியின் குறுக்கு வெட்டு தோற்றம் கிடைக்கிறது. நோயாளி படுத்திருக்கும் மேசையை நகர்த்துவதன் மூலம் எக்ஸ்ரே கதிர்களும் அளவிடும் கருவியும் நம் உடலின் மேல் நழுவி சென்று உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் பாகங்களின் முப்பரிமாண தோற்றத்தை கட்டமைக்க முடிகிறது.1971இல் தொடங்கிய இந்த தொழில்நுட்பம் அறிவியலாளர்களால் முன்னேற்றம் அடைந்து விரைவாகவும் துல்லியமாகவும் உட்செலுத்தும் கதிர்களின் அளவு குறைக்கப்பட்டும் இன்று நமக்கு பயன்படுகிறது. தொடக்கத்தில் சிடிஸ்கேன் மூளையை மட்டுமே படம் பிடிக்க பயன்பட்டது.ஆனால் விரைவில் உடலின் பல பகுதிகளின் துண்டுகளை எடுக்கும்படியான முன்னேற்றமும் பின்னர் தொடர்ச்சியான சுழலும் முறையில் மொத்த உறுப்பையும் ஒரே முறையில் எடுக்கும் நுட்பமும் ஏற்படுத்தப்பட்டது.

சிடி ஸ்கேன் மருத்துவத்திற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் விஞ்ஞானிகள் அதை தொல்பொருள், உயிரியல், இயற்பியல் போன்ற துறைகளுக்கும் பயன்படுமாறு தகவமைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக மம்மிகள் என்றழைக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்கள், கான்கிரீட் கலவையில் ஏற்படும் வெடிப்புகள், காதில்லா ஓணான்களின் உடற்கூறியல் போன்றவற்றை புரிந்துகொள்ள இவை பயன்படுகின்றன.  இந்த முன்னேற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும் சிடிஸ்கேன் மீது மருத்துவர்களின் அளவுகடந்த ஆர்வம் குறித்து - குறிப்பாக மற்ற நாடுகளைவிட அதிக அளவில் பயன்படுத்தப்படும் அமெரிக்காவில் - எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கின்றனர்.தேவையற்ற ஸ்கேன்களை எடுக்கும்போது தொடர்பில்லாத அறிகுறிகள் காணப்படலாம்.அவை பெரிய தீங்கு விளைவிப்பதாக இல்லையெனினும் நமக்கு கவலையளிக்கக்கூடும். மன அழுத்தமும் கூடுதலாக அதிக கட்டண சோதனைகள் எடுப்பதிலும் முடியலாம். ஆனால் தேவையான ஸ்கேன்களை எடுக்காவிட்டால் நோய் கண்டறியப்படுவது தாமதமாகலாம்.

2 ) செவ்வாய்க் கிரகத்தில் பெரும் தண்ணீர்ப் பரப்பு

 ஐரோப்பிய விண்வெளிக்கழகமும் ரஷ்ய ரோஸ்கோமாஸ் கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் செவ்வாய்க் கிரகத்தின் பெரும் பள்ளத்தாக்கு அமைப்பினுள் தண்ணீர் நிறைந்த ஒரு பகுதியை கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு முன் கண்ணுக்குப் புலப்படாத மறைந்திருக்கும் தண்ணீரைக் கண்டறியும் கருவி இந்த விண்வெளி ஆய்வுக் கலத்தில் பொருத்தப்பட்டிருந்தது. வேலஸ் மரிநேரிஸ் எனும் இந்தப் பகுதிக்குள் காணப்பட்ட தண்ணீர் பரப்பு நெதர்லாந்து நாட்டளவு பெரியதாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சூரியன் தொட்டுவிடும் தூரம்தான் 

வரலாற்றில் முதன்முறையாக கொரோனா எனப்படும் சூரியனின் வெளி வட்ட மண்டலத்தை நாசாவின் பார்க்கர் சோலார் ஆய்வுக் கலம் தொட்டுவிட்டது. ஆல்ப்ஃவென் பரப்பு என்றழைக்கப்படும் இந்தப் பகுதியானது சூரியனின் மேற்பரப்பிலிருந்து 13மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என இயற்பியலாளர்கள் கூறுகிறார்கள். சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தைவிட கொரோனா பகுதி வெப்பம் ஏன் பன்மடங்கு அதிகமாக உள்ளது எனும் புதிருக்கும் இந்த பகுதியில் விடையிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிளாஸ்மா திரள்கள் சூரியனிடமிருந்து பிரிந்து சூரியக்காற்று மண்டலத்தின் பகுதியாக மாறும் இடம் என்பதால் ஆல்ப்ஃவென் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. மின்னேற்றம் கொண்ட இந்த சூரியக்காற்று மண்டலம் விண்கலங்கள் மீதும் புவியில் வாழும் உயிர்கள் மீதும் பாதிப்பை உண்டுபண்ணும் என்பதாலும் அறிவியலாளர்கள் இது குறித்து ஆய்வு செய்ய விரும்புகிறார்கள். பார்க்கர் விண்கலம் அங்குள்ள துகள்களையும் காந்தப் புலத்தையும் மாதிரி எடுத்துப் பார்த்துள்ளது. இந்த விண்கலம் 2018ஆம் ஆண்டு ஏவப்பட்டதாம். ‘இந்தக் கலம் சூரியனை தொட்டது பிரம்மாண்டமான தருணம் ‘என்கிறார் அறிவியல் திட்ட இயக்ககத்தின் இணை நிர்வாகி தாமஸ் சர்பச்சன்.
 

3 ) உடற்பயிற்சியும்  இளமையும்

ஆஸ்திரேலியாவிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வயது மூப்பின் காரணமாக ஏற்படும் விளைவுகளிலிருந்து மனிதர்களை உடற்பயிற்சி காப்பதற்கு கேந்திரமான என்சைம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆரோக்கியமான வளர்சிதை மாற்றங்களுக்கு NOX-4 எனப்படும் இந்த என்சைம் அவசியம் எனக் காட்டியுள்ளார்கள். உடற்பயிற்சியின் போது நமது எலும்பு மண்டல தசைகள் இதை அதிகம் உற்பத்தி செய்கிறதாம்.

4 ) இரத்த சோகைக்கு செறிவூட்டப்பட்ட தானியங்கள் தீர்வா?

இந்திய நாட்டில் இரத்த சோகையைப் போக்க அரிசி, கோதுமை, உப்பு ஆகியவற்றில் இரும்புச்சத்து கலந்து செறிவூட்டப்பட்ட உணவு வழங்கல் எனும் திட்டம் கட்டாயமாக்கப்படுவது குறித்து விவாதங்களும் அரசு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். எந்த அளவு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் அதை இரத்தச் சோகை என்று அழைக்கலாம் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு விவாதித்துக் கொண்டிருக்கிறது. அதன் முடிவுக்குக் காத்திருக்க வேண்டும்.மேலும் இரும்பு சத்து அதிகமானால் சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம் போன்ற பலவித கோளாறுகள் ஏற்படலாம். ஏனெனில் செறிவூட்டப்பட்ட தானியங்கள் மூலம் பெறப்படும் இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்காமல் சீரம் பெர்ரிட்டின் (serum ferritin) என்பதை அதிகரிக்கிறன. எனவே பருப்பு, பழம், காய்கறி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதே சிறந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். (19.12.21 இந்து ஆங்கில நாளிதழ் கட்டுரையிலிருந்து) 


 

;