எகிப்தில் 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மி ஒன்றுக்கு ஆய்வாளர்கள் குரல் வளையை உருவாக்கி பேச வைத்துள்ளனர்.
எகிப்தில், கி.மு. 1099 முதல் 1069 காலகட்டத்தில் வாழ்ந்தவர் நெஸ்யமன் என்ற மதகுருவின் பதப்படுத்தப்பட்ட உடலை, தொல்பொருள் ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்தனர். இவருக்கு குரல் கொடுத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம், ஆய்வாளர்களுக்கு ஏற்பட்டது. எனவே, அவரது குரல் எப்படி இருந்திருக்கும் என ஆய்வுகள் செய்ய ஆரம்பித்தனர்.
இந்த ஆராய்ச்சியை ராயல் ஹோலோவே, லண்டன் பல்கலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகம் மற்றும் லீட்ஸ் அருங்காட்சியக கல்வியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. இது ஆய்வு அறிக்கை, சைண்டிஃபிக் ரிபோர்ட்ஸ் என்ற இதழில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. நெஸ்யமன்னின் பேச்சுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டது. அதை வைத்து, 3டி அமைப்பில் செயற்கையாக குரல் உருவாக்கப்பட்டது. செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பை பயன்படுத்தி, மருத்துவர்கள் நெஸ்யமன்னின் குரலை உருவாக்கி உள்ளனர். தற்போதைக்கு குரல் சோதனை வெற்றியடைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நெஸ்யமன்னின் குரல் மற்றும் வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும் என்பது கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.