tamilnadu

img

‘வரலாற்றை மீண்டும் உருவாக்குவது நீதிமன்றத்தின் வேலையல்ல’... அயோத்தி தீர்ப்பு சிறுபான்மையினருக்கு அநீதி!

புதுதில்லி:
அயோத்தி வழக்கில், உச்சநீதிமன் றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம், சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப் பட்டு உள்ளதாக, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. கங்குலி கூறியுள்ளார். மேலும், “ஒரு அரசியமைப்புச் சட்ட மாணவராக இத்தீர்ப்பைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக, நீதிபதி அசோக்குமார் கங்குலி மேலும் கூறியிருப்பதாவது:

“அயோத்தியில் பல ஆண்டுகளாக ஒரு மசூதி இருந்தது. அங்கு பல தலைமுறைகளாக சிறுபான்மையினர் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் அந்தமசூதி இடிக்கப்பட்டது. தற்போது, அந்தஇடத்தில் ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது என்றால், என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த தீர்ப்பு என் மனத்தில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் மாணவனாக இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள கடினமாக உள்ளது.சர்ச்சைக்குரிய இடத்தில் 1856-57இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல் அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது. அது ஆவணங்களிலும் உள்ளது. நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது. தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம் ஒருமசூதி என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கும்உரிமை உண்டு. அது அரசியலமைப் பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமையும் ஆகும்.

ஆனால், தற்போது அந்த இடம் ராம்லல்லாவுக்குச் சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டடம் எழுப்பப்படுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது..அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்தவைஉச்ச நீதிமன்றத்தின் பொறுப்பில் வராது.ஏனெனில் அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை. அப்படியிருக்க, உச்சநீதிமன்றமானது, பல நூற்றாண்டுகளுக்கு முன்புஇருந்த நில உடமை குறித்து முடிவு செய்யும் அல்லது, அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தபோது, அங்கு மசூதி இருந்ததை மறந்து விடும் என் றால் அதை எப்படி ஏற்க முடியும்?இப்படியே மசூதி இருந்த இடத்தில்...பவுத்த ஸ்தூபி இருந்த இடத்தில்.. ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்.. என்று நாம் தீர்ப்பு வழங்க ஆரம்பித்தால், நிறைய கோயில்கள், மசூதிகள் மற்றும்பல்வேறு கட்டமைப்புக்கள் இடிக்கப்பட வேண்டியதிருக்கும்.500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தையார் வைத்திருந்தார்கள் என்று யாருக் கும் தெரியுமா? நாம் வரலாற்றை மீண்டும்உருவாக்க முடியாது. எது இருந்ததோ, அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன் றத்திற்கு எந்தக் கடமையும் இல்லை.

5 நூற்றாண்டுகளுக்கு முன்பு என்னஇருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. மசூதி இருந்தது என்றுதான், நீதிமன்றம் கூறவேண்டும். அதுவே உண்மையும் ஆகும். ஒரு வரலாற்று உண்மைமட்டுமல்ல, எல்லோரும் பார்த்த உண்மை. அதன் இடிப்பும் அனைவராலும் பார்க்கப்பட்டது. தற்போது அந்த மசூதியை மீட்டெடுக்க- ஒரு மசூதியை வைத்திருக்க, முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை என்றால், பின்னர் எதற்காக ஒரு மசூதியைக் கட்ட 5 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு, அரசாங்கத்தை வழி நடத்த வேண்டும்? மசூதி இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதனால்தானே அவ்வாறு உத்தரவிடுகிறீர்கள்...நானாக இருந்தால், ஒன்று மசூதியையே மீண்டும் கட்ட வேண்டும் என்றுகூறியிருப்பேன். அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த இடம் மசூதிக்கும் இல்லை.. கோயிலுக்கும் இல்லை.. என்று கூறியிருப்பேன். அங்கு ஒரு மருத்துவமனையையோ, அல்லது பள்ளிக்கூடம், கல்லூரியையோ கூட உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன். மசூதியையும், கோயிலையும் வெவ் வெறு பகுதிகளில் கட்டுமாறு கூறியிருப்பேன். தற்போதைய தீர்ப்பு காரணமாக நான் கலக்கம் அடைகிறேன். ஆனால், பெரும்பாலோர் இதை தெளிவாக சொல்லப்போவதில்லை.இவ்வாறு நீதிபதி ஏ.கே. கங்குலி கூறியுள்ளார்.