நமது வீரர்களின் சாதனையையும் தியாகத்தையும் பாஜக தனது அரசின் சாதனையாகச் சொல்லிக்கொள்வது பற்றிய, தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவது பற்றிய அருவருப்புதான் அதிகரித்துள்ளது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி. தேர்தல் பரப்புரைக்காக சென்னை வந்திருந்த அவர் தீக்கதிர் வாசகர்களுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இது.
வட இந்தியாவில் மக்கள் மனநிலை என்ன? அங்கே பொது வாக மோடி ஆதரவு அலை வீசுவதாக இங்கே ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அது உண்மையா?
அது போலியாக ஏற்படுத்தப்பட்டுள்ள தோற்றம்தான். குறிப்பாக வட மாநிலங்களின் பெண்கள் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதால் இந்த அரசு தொடரக்கூடாது என்ற உறுதியோடு இருக்கிறார்கள். பொதுவாக, பண மதிப்பு ஒழிப்புபோன்ற நடவடிக்கைகளால் சிறிய தொழில்களும் குறுந்தொழில்களும் முற்றிலுமாக கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகின. நடுத்தரத் தொழில்களின்நிலைமையும் இதுதான். அந்த நெருக்கடிகளிலிருந்து இன்னும் மீள முடியாதவர்களாகவே அந்தத்தொழில்களை நடத்துகிறவர்களும், அவற்றைச்சார்ந்திருக்கிற தொழில்களை நடத்திக்கொண்டிருப்போரும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தொழில்களை நம்பியிருக்கிற பெண்கள் உட்பட கோடிக்கணக்கான முறைசாராத் தொழிலாளர்களின் நிலைமையோ மிகவும் பரிதாபகரமானது.பணமதிப்பு ஒழிப்பு ஒரு நல்ல நடவடிக்கை என்று பாராட்டியவர்கள் உண்டு. அவர்கள் இன்றுதாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்கிறார்கள். அமித் ஷா மகன் போன்ற சில பெரிய கைகள்தான் பண மதிப்பு ஒழிப்பால் ஆதாயமடைந்தார்கள் என்று மக்களுக்குத் தெரியவந்துவிட்டது. நடைமேடைக் கடை வைத்திருந்தவர்கள் உட்பட,உழைத்து வாழ்ந்து வாழ்கிறவர்கள் அனைவரும்இதற்கு முன் இப்படிப்பட்ட கடுமையான தாக்குதலைஅனுபவித்ததில்லை. அவர்களை மேலும் தாக்கியநடவடிக்கைதான் ஜிஎஸ்டி. இவற்றோடு இணைந்துமேலும் மோசமானது விவசாய நெருக்கடியும் விவசாயிகள் வாழ்க்கையும். அவர்களுடைய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்பதோடு, தடபுடலாகக் கொண்டுவரப்பட்ட காப்பீடு திட்டம் போலியானது என்று விரைவிலேயே அம்பலமாகிவிட்டது.
இன்னும் குறிப்பாக, அரசாங்கம் கொண்டுவந்த கால்நடைகள் விற்பனைத் தடை நடவடிக்கை ஒரு பக்கம் பசுவின் பெயரால் மதவெறிக் கலவரங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு ஒரு ஆயுதமாகப் பயன்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் கூடஜார்க்கண்ட் மாநிலத்தில், இயற்கையாகவே செத்துப்போன ஒரு மாட்டை இறைச்சிக்குப் பயன்படுத்தவும் தோலை எடுக்கவும் முயன்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த நான்கு பேர் பசுக்காவல் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டார்.இது ஒரு கலாச்சார விவகாரம் மட்டுமல்ல, கால்நடை வணிகத்தையும் இறைச்சித் தயாரிப்பையும்முடக்குகிற, உள்நாட்டு, அந்நிய நிறுவனங்களை இந்தச் சந்தையில் ஆதிக்கம் செலுத்த உதவுகிறபொருளாதாரச் சுரண்டல் நடவடிக்கையுமாகும் என்பதையும் விவசாயிகள் தெரிந்துகொண்டுவிட்டார்கள். இந்தியாவைச் சேர்ந்த பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்கள் மாடுகளை மலிவுவிலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் கால்நடைவளர்ப்போருக்கு ஏற்பட்டிருக்கிறது. பால் உற்பத்தியும் சுருங்கிவிட்டது. அமெரிக்க நிறுவனங்களின் பால் பவுடர் தயாரிப்புகளை வாங்குமாறு அந்நாட்டுஅரசு இந்தியாவை நிர்ப்பந்திக்கிறது. இந்த இணைப்பு விவசாயிகளுக்குப் புரிகிறது.ஆனால் மாட்டுக்கறி எதிர்ப்பின் பெயரால் கொலை செய்வதற்கான லைசென்ஸ் கிடைத்துவிட்டது போல கும்பல்கள் சுற்றுகின்றன. கால்நடைவிற்பனைத் தடை அறிவிக்கை விலக்கப்பட்ட பிறகும் கூட இதெல்லாம் நடக்கிறது. முஸ்லிம்கள் மட்டுமல்ல, பழங்குடியினரும் தலித் மக்களும் தாக்கப்படுகிறார்கள். அவர்களுடைய முக்கியமான வாழ்வாதாரமே கால்நடை வளர்ப்புதான். கேரளத்திலும் கோவாவிலும் பாஜக-வினர் மாட்டுக்கறி உண்பதைப் பெருமையாக அறிவிக்கிறார்கள். வட மாநிலங்களில் இப்படி மாட்டுக்கறியின் பெயரால் தாக்குகிறார்கள். மாட்டுக்கறி எதிர்ப்பு என்ற பெயரில், விவசாயிகளிடமிருந்து பணம் பறிக்கிற மோசடிகளிலும் இந்தக் கும்பல் ஈடுபடுகிறது. பசுவழிபாட்டின் பெயரால் அவர்களுக்கு நல்ல ஆதாயம்.ஆனால் பசுக்களுக்கு ஒரு பயனுமில்லை!நிலைமை இப்படியிருக்க, வட மாநிலங்களில் பாஜக-வுக்கு செல்வாக்கு நீடிக்கிறது என்பதெல்லாம் திட்டமிட்ட முறையில் கிளப்பப்படுகிற கட்டுக்கதைகள்தான்.
புல்வாமா தாக்குதல், பாலக்கோட் எதிர்த்தாக்குதலுக்குப் பிறகு மோடி அரசுக்கு ஆதரவான, அவரால்தான் தேசத்தைக் காப்பாற்ற முடியும் என்பதான எண்ணப்போக்கு அதிகரித்திருக்கிறது என்று சில ஊடகங்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளனவே…
அந்த இரண்டு செய்திகளும் வந்த புதிதில் அந்த எண்ணப்போக்கு ஓரளவுக்குக் கூடுதலாக ஏற்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால் பாலக்கோட் நடவடிக்கை தொடர்பாக உலக அளவிலான பத்திரிகைகள் கேள்வி எழுப்பி, உள்நாட்டிலும் அது பரவியதைத் தொடர்ந்து, மத்திய அரசால்ஒரு புகைப்படத்தைக் கூட ஆதாரமாகக் காட்டமுடியவில்லை. மாறாக, அது பற்றிக் கேள்வி எழுப்புகிறவர்களின் தேசப்பற்றைத்தான் சந்தேகத்திற்கு உட்படுத்தினார்கள். பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய திட்டவட்டமான முன்னெச்சரிக்கைகள் உளவு அமைப்புகளிடமிருந்து வந்தபோதிலும் அந்த 40 சிஆர்பிஎப் வீரர்கள் தரைவழி அனுப்பப்பட்டது ஏன் என்ற கேள்வியும் மக்களை யோசிக்கவைத்திருக்கிறது. புல்வாமாவுக்கு முன்பும் தாக்குதல்கள், மோதல்கள் நடந்துள்ளன. அவற்றில்ஒருவர் இருவர் என வீரர்கள் கொல்லப்பட்டதுண்டு. அதற்குப் பிறகும் கூட தாக்குதல்கள் தொடர்கின்றன, வீரர்கள் பலியாவதும் தொடர்கிறது. ஹெலிகாப்டர்கள் ஊடுருவல், நட்புமுறை தாக்குதல் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இன்று மக்களிடையே, முந்தைய அந்த எண்ணப்போக்கு முற்றிலுமாக மாறி, நமது வீரர்களின் சாதனையையும் தியாகத்தையும் பாஜக தனது அரசின் சாதனையாகச் சொல்லிக்கொள்வது பற்றிய, தேர்தல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவது பற்றிய அருவருப்புதான் அதிகரித்துள்ளது.
இடதுசாரிகள் பங்களிப்பு என்ன?
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் வன்முறை அரசியல் பற்றி முன்பு இடதுசாரிகள் மட்டுமே சொல்லிவந்தார்கள், இன்று காங்கிரசும் மற்ற கட்சிகளும் சொல்கின்றன. திரிபுராவில் அத்துமீறல்களுக்குத் தயங்காத அதிகாரபலத்தை எதிர்த்துப் போராடுகிறோம்.மற்ற மாநிலங்களில் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் மார்க்சிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரிக்கட்சிகளும் களப்போராட்டம் நடத்தி வந்திருக்கிற பதிவுகள் இருக்கின்றன.அண்மையில் வெளியான ரஃபேல் விமான பேர ஊழல், பணமதிப்பொழிப்பு நடவடிக்கையின் நோக்கங்கள் முதலிய பல்வேறு பிரச்சனைகள் குறித்து இடதுசாரிகள்தான் நாடு முழுவதும் புத்தகங்கள் வாயிலாகவும் பரப்புரைகள் மூலமாகவும் எடுத்துச் சென்றிருக்கிறோம். ரஃபேல் ஊழல்பற்றிய புத்தக வெளியீட்டிற்கு இங்கே தடைபோடப்பட்டதும் அது உடனடியாக லட்சக்கணக்கானோருக்கு இணையத்தொடர்புகள் வழியாகப் பகிரப்பட்டது. இப்போது அது ஆங்கிலத்திலும் வந்திருக்கிறது. ஊடகங்களில் பணியாற்றுகிற இடதுசாரிகள் மத்திய அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளையும் வகுப்புவாத அரசியலையும் அம்பலப்படுத்துவதில் முன்னணிப் பாத்திரம் வகித்து வருகிறார்கள்.அதேபோல் இடதுசாரி சிந்தனையாளர்களாக உள்ள கலைத்துறையினர் முன்னெப்போதையும் விட இப்போது வெளிப்படையாக பாஜக ஆட்சி தொடர அனுமதிக்காதீர்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.