politics

img

இன்னொரு நாட்டைப் பற்றி பேசக்கூடாது எனில் ஜெர்மனியின் நாஜிக்கள் பற்றியும் பேச முடியாது.... ஜாம்பவான்களுக்கு பாடமெடுத்த இளம் ஐபிஎல் வீரர் சந்தீப் சர்மா....

புதுதில்லி:
தில்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து, டுவிட்டரில் பதிவிட்ட- வெளிநாட்டுப் பிரபலங்களுக்கு எதிராக, மத்திய பாஜகஅரசானது தங்களுக்கு நெருக்கமான சச்சின் டெண்டுல்கர், கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களையும், அக்ஷய் குமார், அஜய் தேவ்கான், கங்கனா ரணாவத் உள்ளிட்ட பாலிவுட் திரைக் கலைஞர்களையும் இறக்கி விட்டது. 

அவர்களும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களைப் பேசுவதற்கு இன்னொரு நாட்டவருக்கு உரிமை கிடையாது. எங்கள் பிரச்சனைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம்  எனடுவிட்டரில் பதிவிட்டு, தங்களின் விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.ஆனால், இதற்கு இந்திய மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. சச்சின், கோலி, லதாமங்கேஷ்கரா இப்படி பேசுகிறார்கள்..? என்றுபலர் அதிர்ச்சியில் உறைந்தனர். மற்றொருபுறத்தில், கிரிக்கெட் மற்றும் திரைத்துறைக்கு உள்ளேயே டெண்டுல்கர், கோலி, அக்ஷய் குமாருக்கு எதிராக குரல்கள் எழுந்தன. இந்த அளவிற்கு முதுகெலும்பு இல்லாமல் இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று திரைக்கலைஞர்கள் சித்தார்த், அர்ஜூன் மாத்தூர், சோனாக்ஷிசின்ஹா, பாரி அலி கான், சயானி குப்தா, வீர்தாஸ், இயக்குநர் ஓனிர் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், ஹைதராபாத் ஐபிஎல் அணியில் ஆடும் இளம் வீரரான சந்தீப் சர்மா, மிகக்கடுமையான முறையில் டெண்டுல்கர் உள்ளிட்டதனது மூத்த வீரர்களை சாடியுள்ளார்.“ரிஹானா விவசாயிகள் குறித்து பேசியதற்காக அவருக்கு எதிராக பல பிரபலங்கள், வெளியுறவுத்துறை உட்பட பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த லாஜிக்படி பார்த்தால் யாருமே ஜெர்மனி பற்றி பேச முடியாது. யூதர்களை நாஜிக்கள் கொன்றது குறித்துஜெர்மனிக்கு வெளியே யாருமே பேச முடியாது. பாகிஸ்தானுக்கு வெளியே இருக்கும் யாரும், பாகிஸ்தானில் இந்துக்கள், அஹமதியர்கள், சீக்கியர்கள் கொல்லப்படுவது குறித்து பேசமுடியாது. அதேபோல் இந்தியாவிற்கு வெளியேஇருக்கும் யாரும் இந்தியாவில் இஸ்லாமியர்கள் கொல்லப்படுவது குறித்தும், 1984-ல்நடந்த சீக்கியப் படுகொலை குறித்தும் பேச முடியாது. அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் யாரும் அமெரிக்காவில் நடக்கும் நிறவெறி தாக்குதல்கள் குறித்தும் பேச முடியாது. யாருமே மற்றவர்களைப் பற்றி பேச முடியாது. எல்லாமே அவரவர்களுக்கு தனிப்பட்ட விஷயமாகி விடும்” என்றுசந்தீப் சர்மா டுவிட்டரில் விளாசியுள்ளார்.எனினும், இந்த டுவிட்டர் பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், என்ன நிர்ப்பந்தமோ, அவரே அந்தப் பதிவை தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.

முன்னாள் வீரர்கள் மனோஜ் திவாரி, இர்பான்பதான், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி போன்றவர்களும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து டுவீட்செய்துள்ளனர்.