headlines

img

அது வெறும் காட்சிப் பொருளல்ல!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள் ளது. ஆனால் இந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவும் முடிந்தால் மாற்றியமைத்து மநு(அ)நீதி அடிப்படையில் புதிய சட்டத்தைக் கொண்டு வரவுமே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனக்கு 400 தொகுதிகளில் வெற்றியைத் தரவேண்டும் என மக்களிடம் வரம் கேட்டது. ஆனால் அவ்வாறு தந்தால் அதுவே நமக்கு சாபமாகி விடும் என்பதை உணர்ந்துதான் ஏற்கெனவே பெற்றிருந்த இடங்களை விடக்குறை வாக, பெரும்பான்மைக்கு குறைவான இடங்க ளையே மக்கள் வழங்கினர். அதனால் சொந்தக் காலில் நிற்க முடியாமல் பந்தக் காலில் பதவியில் அமர்ந்திருக்கிறது மோடி அரசு. 

திங்களன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அரசியலமைப்புச் சட்டமானது அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும், அது எப்போதும் சமூக ஆவணமாகவே தொடர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதாவது காட்சிப் பொருளாக இருக்க வேண்டும் என்கி றார். அதுதான் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டி என்பதை மறுக்கிறார். பிறகு எது வழி  காட்டும்? நமது மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்க ளில் இருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். இதன் மூலம் நாடாளுமன்ற அவைகளில் நல்ல விவாதங்களை நடத்த முடியும் என்கிறார். இது தான் ஆர்எஸ்எஸ்- இந்துத்துவா கூட்டத்தின் வழி நடக்கும் பாஜகவினரின் நடைமுறை.

ஏனெனில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையிலுள்ள சோசலிசம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது இந்தக் கூட்டம் தான். ஆனால் உச்சநீதிமன்றம், அவற்றை இணைத்தது செல்லும் என்றும் இவை இரண்டும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் அங்கம் என்றும் கூறி அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து குட்டு வைத்தது குறிப்பி டத்தக்கது.

அரசமைப்புச் சட்ட தினத்தன்று நாடாளு மன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நமது அரசியலமைப்பு உயிருள்ள முற்போக்கான ஆவணம் என்று கூறியிருக்கிறார். ஆனால் அரசின் நடவடிக்கைகளோ பிற்போக்காகவும் சமூக நீதிக்கு எதிராகவுமே அமைந்துள்ளன. இந்த நாளை வெறும் சடங்காக அல்லாமல், அதன் உண்மையான நோக்கங்களை நிறை வேற்ற உறுதியேற்கும் நாளாகவே கொண்டாட வேண்டும். அத்துடன் இன்றைய ஆட்சியாளர்க ளிடமிருந்து அரசமைப்புச் சட்டத்தை பாது காப்பதுடன் அதன் நோக்கங்களான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்தை நிலைநாட்டப் பாடுபடுவதே நாட்டு மக்களின் கடமையாகும். அதனை நிறைவேற்ற உறுதி ஏற்போம். அதற்கு எதிரான சதியை முறியடிப்போம்.