வயநாடு தொகுதி கல்பேட்டாவில் இடது ஜனநாயக முன்னணியின் எழுச்சிக் கோலம்.
திருவனந்தபுரம், ஏப்.17- கேரள மாநிலத்தில் 20 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக பெரும் எழுச்சி காணப்படுகிறது. முதலமைச்சர் பினராயி விஜயன், கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத்,சுபாஷினி அலி, மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசுநாட்டுக்கே முன்னுதாரணமான திட்டங்களை கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் அமல்படுத்தி வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீண்டாமைஉள்ளிட்ட சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த பகுதியினர் கோவில் கருவறைக்குள் பணியாற்றுவதும், அதை இன்றைய கேரள சமூகம் அங்கீகரித்திருப்பதும் இந்தியாவில் இதுவரை வேறெந்த மாநிலத்திலும் நடக்காத அரிய சாதனை. பெண்களுக்கான சம வாய்ப்பை வழிபாட்டுத்தலங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் உறுதிப்படுத்த முனைந்துள்ளது கேரள அரசு. பெருவெள்ளம் கேரள மாநிலத்தை சூழ்ந்தபோது மக்களை மீட்கவும், மறுவாழ்வு அளிக்கவும் எல்டிஎப் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை உலகமே வியந்து பாராட்டியது. மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை புறந்தள்ளி மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது. கேரள மக்கள் எல்டிஎப் அரசுக்குஅளித்துவரும் பேராதரவே இத்தகைய நடவடிக்கைகளுக்கு உந்து சக்தி.கேரளத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சிமற்றும் இடைத்தேர்தல்களின் முடிவுகள் இடது ஜனநாயகமுன்னணிக்கான மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதைகோடிட்டுக்காட்டின.
இந்நிலையில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில்இடது ஜனநாயக முன்னணியின் வெற்றி 20 தொகுதிகளிலும் உறுதி செய்யப்பட்ட ஒன்றாகவே மக்கள் கருதுகின்றனர். ஆனால், அதற்கு முற்றிலும் மாறான ‘கருத்துக் கணிப்புகளை’ சில கம்யூனிஸ்ட் விரோத ஊடகங்கள் திட்டமிட்டு வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறுகையில், முந்தைய தேர்தல்களிலும் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு ஊடகங்கள் தோற்றுப்போனதை சுட்டிக்காட்டினார். ஏசியாநெட் செய்தி தொலைக்காட்சிக்காக தற்போது அப்படி ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டவர் பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட ஏ டூ இசட் பாரட்னர்ஸ் என்கிற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுஜய் மிஸ்ரா. இவர் தீவிரமான நரேந்திர மோடி பக்தர்என்பது அவரது முகநூல் பதிவின் மூலம் தெரியவந்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் மோடி பெற்ற வெற்றிக்காக தலையை மொட்டை அடிப்பதாக வேண்டிக்கொண்டதாகவும், அதன்படி மொட்டை அடித்ததாகவும் மொட்டைத்தலையுடன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
2016 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ஏசியாநெட் செய்தியின் கருத்துக் கணிப்பு குறித்து ஆரன்முளா தொகுதிஎம்எல்ஏவும் தற்போதைய பத்தனம்திட்டா நாடாளுமன்றத் தொகுதி எல்டிஎப் வேட்பாளருமான வீணா ஜார்ஜ் கூறுகையில், அந்த தேர்தலில் வெற்றிபெற்று யுடிஎப் ஆட்சியை தொடரும் என ஏசியாநெட் கூறியது; அதுபோல் கடந்த ஆண்டு நடந்த செங்ஙன்னூர் இடைத்தேர்தலில் எல்டிஎப் வேட்பாளர் சஜி செரியான் தோல்வி அடைவார் எனவும் தெரிவித்தது. இது இரண்டும் பொய்த்துப்போனது என கூறினார். மேலும் அவர் கூறுகையில், ஏசியாநெட் கருத்துக்கணிப்புக்கு பத்தனம்திட்டா தொகுதி வாக்காளர்கள் வலுவான பதிலடி தருவார்கள்; இடதுசாரிகளுக்கு தோல்வி என கூறுவதற்கு இது ஒன்றும் உத்தரப்பிரதேசம் அல்ல; கேரளம் எனவும், இங்கு கம்யூனிஸ்ட்டுகள் நடத்தியுள்ள போராட்டங்களின் வீரியம் ஏசியாநெட்டுக்கு தெரியாது எனவும் தெரிவித்த வீணா ஜார்ஜ், பத்தனம்திட்டாவில் 75ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றிபெறுவது உறுதி எனவும் கூறினார்.
தேசாபிமானியிலிருந்து... சி.முருகேசன்