tamilnadu

img

பாஜக-வின் உண்மை முகம் மிக கொடூரமானது உபேந்திர குஷ்வாகா சாடல்

பாட்னா:

பாஜக வெளியே ஒன்றும், உள்ளே மற்றொன்றுமாக இரண்டு முகங்களை கொண்ட கட்சி என்று ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாகா கூறியுள்ளார்.

ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, பீகார் மாநிலத்தில் செயல்படும் முன்னணி அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். கடந்த 2018 வரை, பாஜக கூட்டணியில்தான் இக்கட்சி அங்கம் வகித்தது. அதன் தலைவர் உபேந்திர குஷ்வாகா மத்திய இணையமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். ஆனால், பாஜக-வுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், ஓராண்டுக்கு முன்பு, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கூட்டணியிலிருந்தும் வெளியேறினார். 


தற்போது ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளது.இந்நிலையில்தான், பாஜக எப்படியெல்லாம் வேஷம் போடும் என்று தனக்கு நன்றாகவே தெரியும் என்று உபேந்திர குஷ்வாகா கூறியுள்ளார். 


“பாஜக-வினரை, நான் அருகிலிருந்து பார்த்தவன்; 2 முகங்கள் கொண்டது அந்த கட்சி. உள்ளே தீய எண்ணத்தை வைத்துக் கொண்டு, வெளியே நல்லவர்கள் போல நடிப்பார்கள். நாடகங்களில் இதை நாம் பார்க்கலாம். சீதா வேடமிட்டு வருபவரைப் பார்த்ததும் மக்கள் அனைவரும் கைகூப்பி வணங்குவார்கள். அவ்வாறு வணங்கப்பட்டவர், சிறிது நேரத்திலேயே மேடைக்கு பின்புறம் சென்று புகைப்பிடிப்பார். பாஜக-வும் அப்படித்தான்” என்று குஷ்வாகா கூறியுள்ளார்.