politics

img

வயநாடு நிலச்சரிவு – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ரூ.1 கோடி நிதியுதவி

வயநாடு நிலச்சரிவால் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பால் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இது அனைவரது நெஞ்சையும் உலுக்குகிற கோரமான ஒரு நிகழ்வாகும். நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு கேரள மாநில அரசு நிர்வாகம் ராணுவ உதவிக்குழு மற்றும் இதர மாநில பேரிடர் மீட்புக்குழுக்களோடு மீட்புப் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலச்சரிவின் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அண்டை மாநிலத்தில் உள்ள நமது சகோதரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட துயரமான நிகழ்வை தேசிய பேரிடராக கருதி ஒன்றிய அரசு அதற்கு தகுந்த நிதி உதவி செய்வதோடு, இந்திய ராணுவத்துணையோடு முழு வீச்சில் தேவையான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ரூபாய் 1 கோடி கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மூலமாக காசோலை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.