politics

சாணக்கிய தந்திரம் அறிந்துகொள்ள

அரசியலில் உள்ளொன்று வைத்து புறத்தில் வேறாகச் செயல்பட்டு வெல்வதற்குப் பெயர் சாணக்கிய தந்திரம். இது ஒரு தத்துவமோ, கோட்பாடோ அல்ல. சாணக்கியன் என்ற ஒரு மனிதன் தன்னை அவமதித்த நந்த வம்சத்தை அழித்து மௌரிய வம்சத்தவரை அரியணையில் அமர்த்தினான். இதற்குத் தனதுநுண்மாண் நுழைபுலஅறிவைப் பயன்படுத்தியதாக ஒரு வரலாற்றுப் பதிவு உள்ளது. இத்தகு சூழ்ச்சிதான் சாணக்கிய தந்திரம் எனப்படுகிறது. இந்த புரிதலோடு ‘சாணக்கிய நீதி’ என்ற நூலினைத் தமிழாக்கம் செய்துள்ளார் பதிப்பாளரான சந்தியா நடராஜன். “சாணக்கிய நீதி - அரசியலும் அந்தரங்கமும்” என்று தலைப்பிட்டிருந்தாலும் சமஸ்கிருத சுலோகங்கள் காஞ்சிபுரம் வி.ஸ்ரீநிவாச மூர்த்தி அவர்களின் உதவியுடன் மொழியாக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. அதன்படி அரசியலையும் அந்தரங்கத்தையும் வாசகர்களே உய்த்துணர வழி செய்திருக்கிறார். ஒருவரின் சொற்களே அவரின் மன ஓட்டத்தை, கொள்கையை வெளிக்காட்டி விடும் . அந்த வேலையைத்தான் சந்தியா நடராஜன் செய்திருக்கிறார். சாணக்கிய நீதியின் சமஸ்கிருத ஸ்லோகங்கள் தமிழ் வடிவில் தரப்பட்டு கீழே உரையும் தரப்பட்டுள்ளது. இந்த நீதி பிராமணர்களுக்கும் வேதங்களுக்கும் மிகவும் உயர்ந்த இடத்தைத் தருகிறது. பெண்களைக் கீழ்த்தரத்தில் வைத்துப் பார்க்கிறது. மனுநீதி போல் குற்றவியல் சட்டமாக இது இருக்கவில்லை. 

பிராமணர்களே உயர்வானவர்கள் என்பதைத் தொடக்கம் முதலே பதிவு செய்திருந்தாலும் “கால்நடைகளை வளர்த்து வருகிற பிராமணனும் நிலம் திருத்திப் பயிர்த் தொழில் செய்கிற பிராமணனும் வைசிய பிராமணன் என்று அறியப்படுவான்” “லக்ஷாதி தைலம், அவுரிச் செடி, பூ, தேன், நெய், மது, இறைச்சி மற்றும் அதிலிருந்து பெறப்படும் பொருட்கள் ஆகியவற்றை விற்று சம்பாதிக்கிற பிராமணன் சூத்திரன் என்று அறியப்படுவான்.”“பிறரது காரியங்களில் இடையூறு செய்கிற,ஏமாற்றுகிற, சதித்திட்டமிடுகிற, மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கிற, நாவினிக்கப்பேசி நயவஞ்சகம் செய்கிற ஒருவன் பிராமணனாக இருந்தாலும் அவன் ஒரு மிருகமே” 

குருவுக்கும் தெய்வத்திற்கும் உரிய பொருட்களைத் திருடுகிறவனும் மற்றவன் மனைவியுடன் உறவு கொள்பவனும் யாரிடமிருந்தும் யாசகம் பெறத் தயங்காது வாழ்பவனும் ஆகிய பிராமணன் தாழ்த்தப்பட்டவனாகக் கருதப்படுவான் “ என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. பிறப்பால் பிராமணன் உயர்ந்தவன்தான். ஆனால் செயலால் தாழ்ந்து போகிறான் என்று இதனை எடுத்துக் கொள்வதா? அல்லது மற்ற மூன்று வர்ணத்தாரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று கூறுவதாகப் புரிந்துகொள்வதா? இதுவும் சாணக்கியத் தந்திரத்தில் அடங்குமோ!நீதிநூல்களில் சொல்லப்படுகின்றவற்றில் சில பொதுவான வாழ்வியலுக்கு உகந்தவையாகத் தோன்றுவது இயல்பு. மரபுவழி வாழவேண்டும் என்றஆழ்மன விருப்பம்தான், ‘ஆமாம் .... ஆமாம் சரிதான்’ என்று மனிதர்களைத் தலையாட்ட வைக்கிறது. சாணக்கியநீதி முறையை உணர்ந்து கொள்ளவேனும் இந்நூல் படிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.தமிழாக்கம் செய்த சந்தியா நடராஜன்அவர்களின் முன்னுரையும் மொழியாக்கத்திற்கு உதவியஸ்ரீநிவாச மூர்த்தி அவர்களின் விளக்கக்குறிப்பும் வாசிப்பிலிருந்து விடுபட க்கூடாதவை.

சாணக்கிய நீதி 

அரசியலும் அந்தரங்கமும்

தமிழாக்கம்:சந்தியாநடராஜன்

வெளியீடு: சந்தியா பதிப்பகம்,

புதிய எண் 77 , 53வது தெரு,

9வது அவென்யூ அசோக் நகர், 

சென்னை - 044-24896929

பக்:136 விலை: ரூ.125/-