politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

போபால் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர், தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று புகழ்ந்தார். பிரக்யாவே ஒரு பயங்கரவாத குற்றச் சாட்டுக்கு உள்ளானவர். மருத்துவக் காரணங்களை காட்டி அவர் ஜாமீனில் வந்து உலவிக் கொண்டிருக்கிறார். இந்த நபரை, இந்திய நாகரிக பாரம்பரியத்தின் சின்னம் என்று பிரதமர் நரேந்திர மோடி சற்றும் வெட்கமின்றி புகழ்ந்துரைத்தார்.


போபால் தொகுதியில் தங்களது கட்சியின் வேட்பாளராகவும் நிறுத்தியிருக்கிறார்கள். இந்துத்துவா மதவாத வாக்கு வங்கியை அணிதிரட்டுவதற்காக இந்த இழிசெயலை அவர்கள் செய்தார்கள். பயங்கரவாதம் தொடர்பாகவும் பயங்கரவாத குற்றச்சாட்டு உள்ள நபர் தொடர்பாகவும் மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாகவும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் அணுகுமுறை இதிலிருந்தே தெளிவாகிறது. இப்போது, கோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக பிரக்யாவை கண்டித்து விட்டோம் என்றும் அவர் மன்னிப்புக் கேட்டுவிட்டார் என்றும் பாஜக மேலிடம் கூறியிருப்பது அப்பட்டமான கண்துடைப்பே ஆகும்.


இந்த பிரச்சனையில் தேர்தல் ஆணையத்தை அணுகி புகார் கூறவேண்டியதில்லை என்று எமது கட்சியின் அரசியல் தலைமைக்குழு கருதுகிறது. ஏனென்றால் ஏற்கெனவே அளித்த எண்ணற்ற புகார்களுக்கே எந்த நடவடிக்கையுமில்லை. நாங்கள் இந்திய தேசத்தின் மக்களின் முடிவுக்கு விடுகிறோம், இந்திய குடியரசின் அரசிலமைப்புச் சட்டத்தை பாதுகாத்திட பாஜகவை முற்றாக வீழ்த்துங்கள் என்று...!