tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்திய மோட்டார் வாகனத் தொழில் துறையில் மீட்சி என்பது கண்ணுக்கு எட்டிய தூரம் இல்லாதது போலவே தெரிகிறது. மாருதி நிறுவனத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு ஆகஸ்ட் இறுதியில் விற்பனை 32.7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ச்சியாக இதுபோன்ற தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மோட்டார் வாகனத் துறையில் மட்டும் 3.5 லட்சம் பேரின் வேலைகள் பறிபோய்விட்டன. அப்படியானால் என்ன அர்த்தம்? 3.5 லட்சம் குடும்பங்களின் வருமானம் பறிபோய்விட்டது. இந்த வருமானத்தை செலவு செய்வதன் மூலம் வருமானம் பெற்றுக்கொண்டிருந்த பல்வேறு பகுதியினரின் வாழ்வும் பறிக்கப்பட்டுள்ளது என்றும் அர்த்தம். பிஸ்கட்டுகள் முதல் சோப்புகள் வரை ஒட்டுமொத்த கிராமப்புற இந்தியாவிலும் இந்த எளிய பொருட்களுக்கான கிராக்கி கூட கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. பிஸ்கட் வாங்குவதற்குக் கூட கிராமப்புற இந்தியர்களின் கைகளில் பணம் இல்லை. விவசாய நிலங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை இந்தியா துயரின் பிடியில் நாளுக்கு நாள் மிக வேகமாக தன்னை இழந்து கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த துயரம் குறித்து சற்றும் கவலைப்பட்டவராக தெரியவில்லை என்பதுதான் இந்திய தேசத்தின் சோகம்.