சிபிஐ, அமலாக்கத்துறைகளை பயன்படுத்தி மாநில கட்சிகளை மத்திய அரசு அச்சுறுத்துகிறது. அது பயனளிக்காத போது, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்கிறது. எந்த கட்சி வெற்றி பெற்றாலும், அரசமைப்பதில் பாஜக பங்கும் இருக்கும் என்கிறார்கள். கோவா, கர்நாடகா என தோற்ற இடங்களில் எல்லாம் பாஜக ஆட்சி அமைக்கிறது. மக்கள் உணர்வுகளை புறக்கணித்து பாஜக அதிகார துஷ்பிரயோகம் செய்து, யார்ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.
செல்லாக்காசு
இதன் அடுத்தகட்டமாக, கேரள முதலமைச்சரை பொய்யான வழக்கில் சிக்க வைக்க பழைய பிரமாண பத்திரத்தை பயன்படுத்துகிறது. கொள்கையை சொல்லி வாக்கு கேட்க முடியாமல், அவதூறுகள் மூலம் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். இதனை எதிர்த்துதேர்தல் ஆணையம், உச்சநீதி மன்றத்திற்கு சென்றால், எதுவும் செய்ய மறுக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு அமைப்பையும் செல்லாக் காசாக மாற்றி வருகிறது பாஜக.மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் சீரழிக்கிறது.
இந்த காலக்கட்டத்தில் தமிழகஅரசு இயற்கை பேரிடர் நிவாரணமாக மத்திய அரசிடம் 1.50 லட்சம் கோடி ரூபாயை கேட்டது. ஆனால் மத்திய அரசு 5 ஆயிரம் கோடி ரூபாயை மட்டுமே வழங்கியது. இந்தியாவிலேயே மிக அதிக கடன் வைத்துள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.அதாவது, பிறக்கிற ஒவ்வொரு குழந்தை தலையிலும் 60 ஆயிரம் ரூபாய் கடன் வைத்துள்ளது. அந்தளவிற்கு கடன் சுமையில் உள்ளது. ஜால்ரா அடித்தும் பணத்தைப் பெற முடியாத அதிமுக தமிழகத்தை ஆள அருகதையற்று உள்ளது.
மாற்று என்பது என்ன?
இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.சூப்பர் பணக்காரர்களுக்கு ஆட்சியாளர்கள் வழங்குகிற சலுகைகளை ரத்து செய்ய வேண்டும். கார்ப்பரேட்கம்பெனிகளுக்கு கடன் தள்ளுபடிகளை நிறுத்த வேண்டும். இவற்றைசெய்தால் அரசுக்கு ஏராளமான தொகை கிடைக்கும். அதன் வாயிலாக நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தலாம். கோடிக்கணக்கானவேலைவாய்ப்பு உருவாகும். பணப் புழக்கம் அதிகரித்து சந்தையில் விற்பனை உயரும். மூடப்பட்டு கிடக்கும்சிறுகுறு தொழில்கள் மீண்டும் திறக்கப்படும். வாங்கும் சக்தி அதிகரித்து பொருளாதாரம் எழுச்சி பெறும். இதை செய்வதன் மூலமே புதிய இந்தியாவை உருவாக்க முடியும். தமிழகத்தில் அடுத்து உருவாகும் அரசு இவற்றை செய்யவும்,மக்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.
எனவே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக அணி முறியடிக்கப்பட வேண்டும். மதச்சார்பற்றஅரசு உருவாக வேண்டும். பாஜக- அதிமுக அணியின் வீழ்ச்சி தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவை பாதுகாப்பதற்கும் உதவும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமையன்று (மார்ச் 6) மதுரவாயலில் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியது. அவரது உரையை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி மொழியாக்கம் செய்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரரான், பி.சம்பத், மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராசன் (வடசென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), இ.சங்கர் (செங்கல்பட்டு), எஸ்.கோபால் (திருவள்ளூர்), சி.சங்கர்(காஞ்சிபுரம்), மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ப.சுந்தரராசன், ஆர்.வேல்முருகன், எஸ்.கண்ணன், வி.பிரமிளா, தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வெள்ளைச்சாமி, ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணசெல்வி, மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்டோர் பேசினர்.